-->

தமிழீழ தேசிய கொடி பயன்பாட்டுகோவை 2

தொடர்ச்சி.... 11. கொடிப்பீடம் கொடிப்பீடம் நிலமட்டத்திலிருந்து ஓர் அடி உயரங் கொண்டதாகவும் 2 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். பீடத்தின் முன்புறம் பீடத்தோடு இணைந்து 2 அடி நீண்டு நிலத்திலிருந்து அரை அடி உயரமுடையதாக இருக்கவேண்டும். 12. கொடியேற்றும் முறை தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது. கொடியையேற்றுபவர் தானே கொடியையேற்றிக் கயிற்றைக் கொடிக்கம்பத்திற் கட்டவேண்டும். தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியை விரிப்பதற்கும் கொடி ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கும் கொடி நிலத்திற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் கொடியை ஏற்றுபவருக்கு ஒருவர் உதவவேண்டும். கொடியையேற்றுபவர் கொடியை ஏற்றியதும் ஓர் அடி பின்னகர்ந்து வணக்க நிலையில் நிற்கவேண்டும். கொடிவணக்கப் பண் முடிவடையும் வரை அனைவரும் வணக்க (ளுயடரவந) நிலையில் நிற்கவேண்டும். 13. கொடியின்பார்வை கொடியிலுள்ள புலியின்பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும். 14. தேசியக் கொடியை ஏற்றும் நேரமும் ஒளிபாய்ச்சுதலும் கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்னர் இறக்கப்படவேண்டும். மங்கிய ஒளியிற் கொடியை ஏற்றுதல் கூடாது. எனவே காலை 6 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்குப் பின்பும் கொடியை ஏற்றவேண்டுமெனிற் கொடிப் பீடத்திலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சிவரை போதுமான ஒளிபாய்ச்சப்படவேண்டும். கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்திலும் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும். தேசியக்கொடியை முழுமையான வெளிச்சத்தின்கீழ் இருபத்துநான்கு மணிநேரமும் பறக்கவிடலாம். தேசியக்கொடி பொதுவாக மாலை 6 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுறும் வரை கொடிக்கு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். இரவில் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை அமைதியான முறையில் இறக்கலாம். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும்வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். ஆனால் கொடிபறப்பது தெளிவாகத் தெரியக்கூடியவாறு போதிய வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்கப்படவேண்டும். 15. எமது தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகள் (கொடிக்கம்பத்தின் முன்பக்கத் தோற்றம்) தமிழீழத் தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகளைப் பறக்கவிடும்போது ஒரே அளவான கொடிக்கம்பங்களில் கொடிகளை ஏற்றவேண்டும். தமிழீழத் தேசியக்கொடியின் இடப்புறமாக ஏனைய நாடுகளின் தேசியக்கொடிகளை அந்தந்த நாடுகளின் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும். எமது தேசியக்கொடியும் ஏனைய தேசியக் கொடிகளும் இடைஞ்சலின்றிப் பறக்கக்கூடியவகையிலும் (ஒன்றில் ஒன்று முட்டாமல்) சமனான இடைவெளியிலும் கொடிக்கம்பங்கள் நடப்படவேண்டும். எமது தேசியக்கொடியை ஏற்றியபின்பே ஏனையவற்றை ஏற்றவேண்டும். ஏனையவற்றை இறக்கியபின்பே எமது கொடியை இறக்கவேண்டும். தொடரும்... Tamilan - 03-29-2006 தொடர்ச்சி... 16. தேசியக்கொடியும் ஏனைய கொடிகளும் எமது தேசியக் கொடியுடன் எமது முப்படைகள், காவற்றுறை, படையணிகள், உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிக்கூடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள். விளையாட்டுக் கழகங்கள், குமுகாய அமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளைப் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள கம்பங்களில் ஏற்றும்போது தேசியக்கொடியின் அளவைவிடச் சிறிய அளவிலான கொடிகளைத் தேசியக்கொடிக் கம்பத்தைவிட 4? உயரம் குறைவான கம்பங்களில் ஏற்றவேண்டும். அதாவது தமிழீழத் தேசியக்கொடி மற்றக் கொடிகளைவிட 4? கூடுதலான உயரத்தில் இருக்கவேண்டும். 16.1. தேசியக்கொடிக்கு இடப்புறமாகச் சமனான இடைவெளியில் ஏனையகொடிகள் ஏற்றப்படலாம். 16.2. தேசியக்கொடிக் கம்பத்திலிருந்து ஏழு அடிக்குப்பின்னால் தேசியக்கொடிக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தமிழீழத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படைகளின் கொடிகளும் காவற்றுறையின் கொடியும் சமனான இடைவெளியிற் பறக்கவிடப்படலாம். 16.3. தேசியக் கொடிக்குப்பின்னால் 16. ( 2) இற்கமைவாக முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகளும் அவற்றுக்குப் பின்னாற் போதிய இடைவெளிவிட்டுப் படையணிகளின் கொடிகளும் பறக்கவிடப்படலாம். 16.4. உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிகள், கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், குமுகாயவமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளும் தேவைக்கேற்ப பறக்கவிடப்படலாம். தேசியக் கொடியுடன் முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகள் பறக்கவிடப்படும் நிகழ்வுகளில் அவற்றுக்குப் பின்னாலேயே மேற்படிக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட கொடிகளும் படையணிக் கொடிகளும் ஒரே நிரையிற் பறக்கவிடப்படலாம். உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள் முதலியவற்றின் கொடிகள் நிகழ்ச்சி நடைபெறும் திடலின் பின்புறமாக உட்பக்கத்திலும் பறக்கவிடப்படலாம். 16.5. தேசியக்கொடியுடன் இங்குக் குறிக்கப்பட்ட ஏனைய கொடிகளைக் கூட்டமாகப் பறக்கவிடும்போது ஏனைய கொடிக்கம்பங்களைவிட உயரமான கொடிக்கம்பத்தில் எல்லாக்கொடிகளுக்கும் நடுவில் தேசியக்கொடியைப் பறக்கவிடவேண்டும். தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பே ஏனையவை ஏற்றப் படவேண்டும் ஏனையவற்றை இறக்கியபின்பே தேசியக் கொடியை இறக்கவேண்டும். அரைக்கம்பத்திற் கொடிகளைப் பறக்கவிடும்போது ஏனைய கொடிகளை அரைக் கம்பத்திற்குக் கொண்டுவந்தபின்பே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்குக் கொண்டுவரவேண்டும் 17. ஊர்வலங்களில் தேசியக்கொடியை எடுத்துச்செல்லுதல் ஊர்வலங்களில் தேசியக்கொடியை வேறு கொடிகளுடன் எடுத்துச் செல்கையில் ஊர்வலத்தின் முன்னால் வலப்புறத்தில் எடுத்துச் செல்லவேண்டும். அல்லது நடுவரிசையில் மற்றைய கொடிகளுக்கு முன்னால் எடுத்துச்செல்லவேண்டும். வேறு எந்தக் கொடியை ஏந்திச் செல்பவரும் எமது தேசியக்கொடியை முந்திச் செல்லக்கூடாது. தேசியக்கொடியை நெஞ்சுக்கு நேராகவோ வலத்தோளிலோ ஏந்திச் செல்லவேண்டும். 18. ஊர்திகளில் தேசியக்கொடியைப் பறக்கவிடுதல் ஊர்தியின் முன்புறத்தில் உறுதியாகப் பொருத்தப்பெற்ற கம்பத்திற் பறக்கவிடவேண்டும். ஊர்தியின் தொளைமூடியின் (Bonet) மேல் இரண்டடி உயரத்திற் கம்பம் இருத்தல்வேண்டும். உந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம். உந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம். 19. மிசையத்தில் தேசியக்கொடியை வைத்தல் அரசுத் தலைவர் மற்றும் முதன்மை மாந்தரின் மிசையங்களில் தேசியக்கொடியை வைக்கும்போது மிசையத்தின் வலப்புறத்தில் வைத்தல்வேண்டும். வேறு கொடிகளும் வைக்கப்படுமாயின் அவை இடப்புறத்தில் வைக்கப்படவேண்டும். தேசியக்கொடிக்கு முதன்மை வழங்கவேண்டும். 20. ஈமப்பேழையின்மீது தேசியக்கொடியைப் போர்த்துதல் மாவீரர், காவற்றுறை மாவீரர், தேசியத்துணைப்படை மாவீரர் மற்றும் தேசக் காப்புப்பணியில் ஈடுபடும் வீரர், நாட்டுப்பற்றாளர் ஆகியோரின் உடல் வைக்கப்பட்ட ஈமப்பேழையின்மீது தேசியக் கொடியைப் போர்த்தும் போது புலியின் தலைக்குமேலுள்ள பகுதி பேழையின் தலைப்பகுதியில் இருக்குமாறு போர்த்த வேண்டும். அவ்வாறு போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் போர்த்தப் பெற்றவரின் அரத்த உறவினரிடம் பேணிப்பாதுகாக்கும் பொருட்டு வழங்கலாம். இறந்தவரின் தாயகப்பற்றை மதிப்பதற்காக அவரின் ஈமப்பேழைமீது போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் பறக்க விடலாம். தொடரும்.... Tamilan - 03-30-2006 தொடர்ச்சி... 21. துயர நிகழ்வின போது கொடியேற்றுதல் தேசியத் துயர நிகழ்வுகளின்போது கொடியேற்றுகையிற் கொடியைக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் அரைக் கம்பத்துக்கு இறக்கிக் கட்டவேண்டும். அரைக்கம்பத்தில் உள்ள கொடியை இறக்கும்போது முதலிற் கொடிக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் இறக்கவேண்டும். தேசத் தலைவரின்முறைப்படியான அறிவுறுத்தலுக்கு இணங்கவே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடலாம். வேறெந்தவேளையிலும் அரைக்கம்பத்திற் பறக்கவிடக் கூடாது. தேசியக்கொடியை எத்தனை நாட்களுக்கு அரைக்கம்பத்திற் பறக்கவிடவேண்டுமென்பது தேசத்தலைவரின் அறிவுறுத்தலிற் குறிப்பிடப்படவேண்டும். கம்பத்தோடு நிலையாகப் பொருத்தப்பட்ட தேசியக் கொடியைத் தேசியத்துயர நிகழ்வுகளின்போது அரைக் கம்பத்திற்குக் கொண்டுவரமுடியாது. அவ்வேளையில் தேசியக் கொடிக் கம்பத்தில் 3?ஒ2? அளவுள்ள கறுப்புக்கொடியை அரைக்கம்பத்திற் பொருத்திவிடலாம். 22. கொடிகளைத் தொங்கவிடுதல் உயரத்திற் கொடிகளைத் தொங்கவிடலாம். போக்குவரத்திலுள்ள எந்த ஊர்தியிலும் கொடி படாதவகையில் உயரமான கம்பங்களை இருமருங்கும் நிறுத்தி உறுதியான கயிற்றினை இணைத்துத் தொங்கவிடலாம். கொடி கட்டப்படும் கயிறு மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும். கொடிக்கயிறு அறுந்து கொடி கீழே விழுவது தேசத்துக்கு இழுக்காகும். கொடியைக் கயிற்றில் இணைக்கும்போது புலியின் தலைக்கு மேலேயுள்ள பகுதி கயிற்றுடன் இணைக்கப்படவேண்டும். புலியின் பார்வை வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது கொடிக்கு எதிரே நிற்பவரின் இடப்புறத்தைப் பார்த்தவாறு புலியின் பார்வை அமையவேண்டும். புலியின்பார்வை நிலத்தைப் பார்த்தவாறோ வானைப் பார்த்தவாறோ அமையக்கூடாது. 23. குறுக்குக் கம்பங்களிற் கொடியைப் பறக்கவிடுதல் தமிழீழத் தேசியக் கொடியையும் வேறொரு தேசத்தின் தேசியக் கொடியையும் குறுக்குக் கம்பங்களிற் பறக்கவிடும்போது தமிழீழத் தேசியக்கொடி வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது பார்வையாளருக்கு இடப்புறமாக இருக்கவேண்டும். மேலும் தமிழீழத் தேசியக் கொடியின் கம்பம் முன்னாலும் மற்றக்கொடியின் கம்பம் பின்னாலும் இருக்கவேண்டும். 24. கட்டடங்களிற் கொடியைப் பறக்கவிடுதல் சாளர அடிக்கட்டை, முகப்புமாடம் ஆகியவற்றிற் கிடையாகவோ கோணவடிவிலோ கொடியைப் பறக்கவிடும்போது கொடி, கம்பத்தின் உச்சியில் இருக்கவேண்டும். கிடையாகப் பறக்கவிடும்போது புலியின்பார்வை வலப்புறமாக இருக்கக்கூடிய வகையிற் புலியின் தலைக்கு மேலுள்ள பகுதியே கம்பத்துடன் இணைக்கப்படவேண்டும். கோணவடிவிற் பறக்கவிடும்போது அணிவகுப்புக் கொடியை இணைப்பதுபோன்று அதாவது எழுச்சிக் கொடியைக் கம்பத்தில் இணைப்பது போன்று இணைகக வேணடும். 25. மேடைகளில் தேசியக்கொடி கூட்ட மேடைகளிற் பேச்சாளரின் தலைக்கு மேலாகப் பின்புறத்தட்டியில் தேசியக்கொடியைக் கட்டலாம். 9 அடி உயர நிறுத்தியிற் பொருத்தப்பெற்ற தேசியக்கொடியை மேடையின் வலப்புறத்திற் பேச்சாளருக்கு முன்னால் வைக்கலாம். ஏனைய கொடிகள் இடப்புறத்தில் வைக்கப்படலாம். 26. தேசியக்கொடியை இறக்குதல் தேசியக்கொடி ஏற்றப்படுவதுபோன்றே இறக்கப்படுவதும் ஒழுங்குமுறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்iயானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும். கொடியேற்றுபவர் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தால் அவரே கொடியை இறக்குதல் வேண்டும். தேசியக்கொடி இறக்கப்படும்போது நிலத்தில் விழாது கைக்கு எட்டக்கூடிய உயரத்தில் வைத்தே கைகளில் ஏந்தி எடுத்தல்வேண்டும். தேசியக்கொடி இறக்கப்படும் நிகழ்வின்போது எவரும் கையொலி எழுப்பக்கூடாது. அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும். 27. கொடி வணக்க நிகழ்வை ஒழுங்குசெய்பவர்களுக்கு தேசியக்கொடியை ஏற்றுகின்ற நிகழ்வின்போது தவறுகள், தடங்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முற்கூட்டியே தேசியக்கொடியைக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்தல் வேண்டும். தேசியக்கொடி தலைகீழாக அல்லாமல் நேராக இருக்கின்றதா? தேசியக்கொடியிற் கயிறு கோர்ப்பதற்கான மடிப்பு புலியின் பார்வைக்கு எதிர்ப்புறமாகத் தைக்கப் பட்டிருக்கின்றதா? கொடி கிழியாமல், மங்காமல் ஏற்றக்கூடிய நிலையில் இருக்கின்றதா? நிகழ்வில் எற்றப்பட இருக்கும் வேறுநாடுகளின் தேசியக்கொடி தவிர்ந்த ஏனைய கொடிகள் தேசியக்கொடியைவிடச் சிறிதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதா? கொடியை ஏற்றுவதற்கான கயிறு கொடிக்கம்பத்தின் உயரத்தைவிட இருமடங்கிற்குக் குறையாமலும் உறுதியாகவும் இருக்கின்றதா? தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பம் உறுதியாக நாட்டப்பட்டிருக்கின்றதா? கொடிக்கம்பம் தேசியக்கொடி ஏற்றுவதற்கு வேண்டிய உயரத்தை, உறுதியை உடையதாக இருக்கின்றதா? என்பவற்றையெல்லாம் முற்கூட்டியே உறுதிசெய்து கொண்டால் கொடியேற்ற நிகழ்வில் எவ்வகைத் தவறோ தடங்கலோ ஏற்படாது தவிர்க்கலாம். தேசியக்கொடியேற்ற நிகழ்வில் ஏற்படும் தவறுகள், தடங்கல்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் பொறுப்பாளரே பொறுப்பாவார். 28. தேசியக்கொடியை அகற்றுதல் நீண்டகாலப் பயன்பாட்டின்போது நரைத்தல், இற்றுப்போதல் போன்றவற்றாற் பழுதடைந்து தேசத்தின் சின்னமாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குவரும் தேசியக்கொடிகளை அகற்றிவிடவேண்டும். வகுக்கப்பட்ட முறைக்கிணங்க அகற்றும் நிகழ்வு நடைபெறும். பயன்படுத்தமுடியாத கொடிகளைச் சேர்த்தல் பழுதடைந்த கொடிகளை வட்டார அரசியற் செயலகங்களினு}டாக ஆறுமாதத்திற்கொரு முறை சேர்க்கவேண்டும். சேர்க்கப்பட்ட கொடிகள் முழுவதும் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும். பழுதடைந்த கொடிகளை ஆய்வு செய்தல் தலைமைச் செயலகச் செயலரோ அவரால் அமர்த்தப்பெறும் தகுதிவாய்ந்த ஒருவரோ குழுவோ சேர்க்கப்பட்ட கொடிகள் அனைத்தையும் அவை எதிர்காலத்திற் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டும். பயன்படுத்தமுடியாதவையென உறுதிப்படுத்தப்பட்ட கொடிகளுக்கு இறுதிச் சடங்கும் அகற்றுஞ் சடங்கும் ஒதுக்குப்புறமான வௌ;வேறு இடங்களில் மாலைநேரத்தில் இருள் சூழ்வதற்கு முன் நடைபெறவேண்டும். இறுதிச் சடங்கு அகற்றப்படவிருக்கும் எல்லாக் கொடிகளையும் நிகராண்மைப்படுத்தும் ஒரு கொடியைத் தெரிவுசெய்து இந்நிகழ்விற் பயன்படுத்தவேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் கொடிக்காக ஒருவரும் நிலையாக ஓய்வு கொடுக்கப்படவிருக்கும் கொடிக்காக மற்றொருவருமாக செங்காவலர் ( சிவப்புநிறப் பரேத் தொப்பி அணிந்திருக்கவேண்டும்) இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். மொத்தமாக எழுவருக்குக் குறையாதோர் இந்நிகழ்விற் கலந்துகொள்ளவேண்டும். பகல் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் கொடிக்குப் பொதுவான சடங்கு முறைகளுக்கிணங்கப் பொழுது கருகுவதற்குமுன் ஓய்வு கொடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செங்காவலரில் ஒருவர் இப்பணியைச் செய்வார். இறுதிமதிப்புப் பெறவிருக்கும் கொடியைக் கையாள் வதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற செங்காவலர் முன்னுக்குச் சென்று நடுவே நிற்பார். இறுதிமதிப்புச் செலுத்தப்பெற்று அகற்றப்படுவதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற கொடியைத் தலைவர் செங்காலவரிடம் கையளிப்பார். பின்னர் கொடியை ஏற்றுமாறு கட்டளையிடுவார். வழமையாகக் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளுடன் கொடியேற்றப்பட்டுக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் கொடி அடைந்ததும் தலைவர் பின்வருமாறு உரையாற்றுவார்:- இந்தக்கொடி எமது தாயகத்திற்காக நீண்டகாலம் நன்கு பணியாற்றியுள்ளது. எதிர்காலத்தில் எமது தேசத்தை நிகராண்மைப்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துவிட்டது. பணியிலிருந்து முழுமையான ஓய்வு கொடுப்பதற்காக இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கும் எல்லாக் கொடிகளையும் இக்கொடி நிகராண்மைப்படுத்துகிறது. இக்கொடியை வணங்குவதன் மூலம் எல்லாக் கொடிகளுக்கும் மதிப்பளிக்கிறோம்" உரையின்பின் தலைவர், உறுப்பினர் அனைவரையும் கவனநிலைக்கு (Attention) அழைப்பார்; வணக்கஞ் (Salute) செய்யும்படி பணிப்பார்; உறுதிமொழியை முன்மொழிவார். கொடிக்கு ஓய்வளிக்குமாறு கட்டளையிடுவார். செங்காவலர் மெதுவாகவும் சடங்கு முறைகளுக்கமைவாகவும் கொடியை இறக்குவார். பின்னர் உரிய மதிப்புடன் வழக்கம்போல முக்கோணமாக மடித்துத் தலைவரிடம் வழங்குவார். குழு கலைக்கப்படுவதுடன் இறுதிமதிப்புச் சடங்கு முடிவுறும். எரியூட்டும் சடங்கு ஒதுக்குப்புறமான வேறோரிடத்தில் எரியுூட்டுஞ் சடங்கு நடைபெறும். கொடிகளை எச்சமெதுவுமின்றி முழுமையாக எரிக்கக்கூடிய வகையில் தீ மூட்டப்படும். முக்கோணமாக மடிக்கப்பட்டிருக்குங் கொடி, சடங்கு தொடங்குமுன் ஈமப்பேழையின் சாயலையுடைய செவ்வகமாக மடிக்கப்படும். எல்லோரும் நெருப்பைச் சூழ்ந்து நிற்பர். தலைவர் எல்லாரையும் கவனநிலைக்கு ( Attention) அழைப்பார். செங்காவலர் முன்னே வந்து கொடியைத் தீயிலிடுவார். எல்லோரும் விரைந்து வணக்கஞ் (Salute) செலுத்துவர். வணக்கஞ் செலுத்தியபின் அனைவரும் கவனநிலைக்கு வருவர். தேசியப்பண் இசைத்தல், உறுதிமொழி உரைத்தல், கொடியின் மேன்மையை உரைத்தல் போன்றவற்றைத் தலைவர் நிகழ்த்துவார். கொடி எரிந்ததும் குழுத்தலைவரையும் செங்காவலரையுந் தவிர ஏனையோர் கலைந்து ஒரே வரிசையில் அமைதியாகச் செல்வர். தலைவரும் செங்காவலரும் அங்கேயே நின்று கொடி முற்றுமுழுதாக எரிந்துவிட்டதென்பதை உறுதி செய்வர். ஏனைய கொடிகளையுந் தீயிலிடுவர். எல்லாக் கொடிகளும் முழுமையாக எரிந்தபின் நெருப்பு அணைக்கப்படும். சாம்பர் முழுவதும் கவனமாகப் புதைக்கப்படுவதுடன் நிகழ்ச்சி முடிவடையும். முற்றும். சங்கதி இணையத்தில் இருந்து பெறப்பட்டது, நன்றி.

தமிழீழ தேசிய கொடி பயன்பாட்டுகோவை - 1

தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம் 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன. மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது. உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றிப்போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத் தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை என்ற இக்கைந்நூலைப் பெருமகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். 02. தேசியக்கொடியின் தன்மை ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது. 03. தேசியக்கொடியின் அமைப்பும் அளவும் ஒவ்வொரு நாட்டினதும் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளின் சின்னம், நிறம், அளவு, அமைப்பு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு ( விகிதம்) கொண்டனவாக அமைகின்றன. சில நாடுகளின் தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் 2:1 என்ற அளவினவாகவும் இன்னும் சில நாடுகளில் 1:1 என்ற அளவைக் கொண்டனவாகவும் (சதுரமாகவும்) அமைகின்றன. 04. தேசியக்கொடியின் பெருமையும் கொடி வணக்கமும் நாட்டைப்போற்றி வணங்குதற்கீடாகத் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர். *நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம். *வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடியைப் பறக்கவிடலாம். *தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும். *கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர். *சீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல்வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் ( Attention) நிற்கவேண்டும். *வணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது. *தேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ உடைகளிலோ பொறிக்கலாம். *தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ எழுத்துக்களையோ சொற்களையோ எண்களையோ வடிவங்களையோ படங்களையோ எழுதவோ வரையவோ கூடாது. *தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது. *தேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கிவிடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும். *தேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடப்படுவதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ கீழே வீழ்த்தப்படுவதோ வீசப்படுவதோ கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இழி நிலையாகும். *தேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது. 05. கொடியையேற்றும்போதும் கொடிவணக்கத்தின்போதும் செய்யப்படக்கூடாதவை தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு ( தண்டனை) வழங்கப்படுகின்றது. தேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும். தேசியக்கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடக்கூடாது. மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும். 06. கொடிமீது கொண்ட பற்று சிறப்பு நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களின் போது தேசியக்கொடியை ஏந்திச்செல்வதும் ஏந்தி நிற்பதும் கூடத் தேசியக்கொடிக்குச் செலுத்துகின்ற மதிப்பு வணக்கமாகும். தேசியக்கொடி ஏந்துபவர்களும் கொடிக்கம்பத்தைக் காப்பவர்களும் தேசியக்கொடி சிதையவோ கொடிக்கம்பம் சரியவோ இடமளிக்கமாட்டார். தேசியக்கொடியை ஏந்துபவர் ஏந்துகின்ற கொடியைக் கடமை முடிந்ததும் உரிய இடத்தில் வைப்பர்; அல்லது தகுதியானவரிடம் கையளிப்பர்; எவ்விடர்வரினும் உயிரேபோகின்ற நிலைவரினும் கொடியைக் கைவிடாத தன்மையைக் கொண்டிருப்பர். தாம் ஏந்துகின்ற கொடி சரிந்தாலோ கீழே விழுந்தாலோ அது தமது நாட்டுக்கு இழுக்காகிவிடும்; தமது நாட்டின் ஆட்சி வீழ்ந்ததாகக் கொள்ளப்படும் என்ற உணர்வு அவர்களிடமிருக்கும். பண்டைக் காலத்திலேயே தமிழ்மக்கள் நாட்டின் கொடிமீது கொண்டிருந்த பற்றும் அதற்குக் கொடுத்த மதிப்பும் பற்றி இலக்கியங்களும் வரலாறுகளும் எடுத்தியம்புகின்றன. 07. தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது. 08. நிறங்களும் குறிக்கோளும் எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது. தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது. விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது. விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது. 09. தமிழீழத் தேசியக் கொடியின் வகையும் அளவும் கொடிக்கம்பத்தின் அளவும் பொதுக்கொடி 4' X 6' விடுதலைப்புலிகள் இயக்கப் பாசறைகள், அரசநிறுவனங்கள், பள்ளிகள், கூட்டுறவு அமைப்புக்கள், குமுதாய அமைப்புக்கள் போன்ற எல்லாப் பொது இடங்களிலும் இக்கொடி பறக்கவிடப்படும். இவ்விடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குமுன்பும் இத்தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படும். உள்ளிடக்கொடி 3' X 5'? அரசுத்தலைவர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரின் பணிமனைகளிலும் மாநாட்டுக்கூடங்களிலும் நிறுத்தியிற் பொருத்தப்பட்ட தேசியக்கொடி வைக்கப்படலாம். பணிமனையின் உள்ளே நுழைவாயிலின் வலப்புறத்தில் வைக்கப்படவேண்டும். எழுச்சிக்கொடி 2' X 3' பொது இடங்கள் அனைத்திலும் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இக்கொடி பறக்கவிடப்படும். வீட்டுக்கொடி 2' x 3 ' தாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளர் எவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இக்கொடியைப் பறக்கவிடலாம். அணிவகுப்புக்கொடி 2' X 3' அணிநடை மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றில் இக்கொடி பயன்படுத்தப்படும். 10. கொடிக்கம்பமும் கயிறும் கொடிக்கம்பங்கள் மேற்குறிக்கப்பட்ட அளவுகளில் வெள்ளிநிறத்தில் இருத்தல் வேண்டும.; கொடிக்கம்பத்தின் நுனியில் வெள்ளி நிறமுடையதும் இங்குக் காட்டப்பட்ட வடிவிலமைந்ததுமான முடி பொருத்தப்படவேண்டும். கொடிக்கயிறு வழுக்காமலிருப்பதற்காகக் கயிற்றைக் கட்டுமிடத்தில் தடை அமைக்கப்படல் வேண்டும். இத்தடை பீடத்திலிருந்து மூன்றாவது அடியில் இருத்தல் வேண்டும். கொடிக்கயிறு வெள்ளை நிறத்தில் இருத்தல்வேண்டும். கொடிக்கம்பம் பீடத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். பீடம் இல்லாத இடங்களில் நிலமட்டத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். கொடிக்கம்பம் 2 அங்குல விட்டமுடையதாக இருக்கவேண்டும். தொடரும்...

தமிழீழ தேசிய கொடி பயன்பாட்டுக்கோவை - முழுவிபரம்

கப்டன். லிங்கம்

கப்டன். லிங்கம் வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் லிங்கம் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளரானார். 1980ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராக செய்ற்பட ஆரம்பித்தார். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டாத வேளையில், விடுதலைப் புலிகளை வேட்டையாடவென இரகசியப்பொலிசார் மோப்பமிட்டுக் கொண்டிருந்தவேளையில் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளைக்கூட மிக்க சிரமங்களுக்கிடையில் செய்தார். 1981 இல் முழு நேர உறுப்பனராக இணைந்து கொண்டார். அதே ஆண்டில் இராணுவப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். 1983 யூலை மாத வரலாற்றுப் புகழ் பெற்ற திருநெல்வேலித் தாக்குதல் உட்பட விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறு தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்தார். 1984 இல் மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றி அரசியல் பிரச்சாரத்தை திறம்பட நடாத்தி தமிழக மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார். அதன் பின்னர் தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமொன்றின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பல நூறு தீருமிக்க போராளிகளை உருவாக்கினார். தேசியத்தலைவரின் அதிவிருப்பிற்குரிய போராளியாக விளங்கிய கப்டன் லிங்கம் அவரின் உதவியாளராகவும் மெய்பாதுகாவலராகவும் விளங்கினார். லிங்கம் சக போராளிகள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகியிருந்ததால் எல்லோரும் அவரின் மீது அன்பு கொண்டிருந்தனர். கடமையென்று வருகின்ற வேளைகளில் கண்டிப்பானவராகிவிடுவார். 29.04.1986 அன்று ரெலோ துரோகக்கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட இரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக புலிகளின் தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டார். சிறீசபாரத்தினமும் அவரது ஆட்களும் தங்கியிருந்த ரெலோ முகாமிற்கு நிராயுதபாணியாகச் சென்ற கப். லிங்கம், ரெலோ கும்பலால் கண்ணில் சுட்டு படுபாதகமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். சிங்கள இராணுவத்துடன் பொருதச் சென்ற லிங்கம் துரோகிகளால் கோழைத்தனமாகக் கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக நேற்றிருந்த லிங்கம் இன்றில்லை. நாளையும் அதற்கு அடுத்து வருகின்ற காலங்களிலும் லிங்கம் எமது வரலாற்றோடு வாழப் போகின்றார்.

மேஜர். வெற்றியரசன்

மேஜர் வெற்றியரசன் ஆனந் செல்லையா - மன்னார் பேசாலை மன்னார் பேசாலை என்னும் ஊரில் செல்லையா திரேசம்மா தம்பதிகளின் மூன்றாவது செல்வப் புதல்வனாக பிறந்தான் மேஜர் வெற்றியரசன். இவனிற்குப் பெற்றோர் ஆனந் என்று பெயரிட்டனர். இவன் தனது ஆரம்பக் கல்வியை புனித பற்றிமா மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டு இருக்கும் போது இராணுவ அட்டூழியங்களை நேரில் கண்டதாலும் சில சம்பவங்களால் இடையில் தனது கல்வியை நிறுத்தி 10. 08. 1995 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டான். இவன் ஆரம்ப இராணுவ பயிற்சியை கெனடி-1 இராணுவப் பயிற்சிப் பாசறையில் பெற்றான். பயிற்சி முடிந்து இவர்களின் அணி, சூரியக்கதிர் எதிர் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. அங்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்து முடித்த பின்னர் ஓயாத அலைகள்-1 சமரிற்கு இவர்களது அணி அனுப்பப்பட்டது. அதில் இவனும் ஒருவனாக நின்று சமராடினான். இவன் முகத்தின் மென்மையான சிரிப்பு யாரையும் சிரித்து மயக்கி விடுவான். இப்படியாக இவனின் வாழ்வும் போய்க்கொண்டிருந்த போது, தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையின் உருவாக்கம் பெற்ற விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியில் தானும் இணைய வேண்டும் என்று பொறுப்பாளரிடம் கேட்டான். இவனது விருப்பிற்கு அமைய இவனை அப்பயிற்சிக்கு அனுப்பி வைத்தார் பொறுப்பாளர். இவனது திறமைக்கு அமைய விசேட ஆயுதம் ஒன்றிற்கான பயிற்சியைப் பெற்றான். அவ்வாயுதத்துடன் சென்று பல களங்கள் கண்டவன். மீண்டும் பொறுப்பாளரிடம் கேட்டு ஆர். பி. எம் உடன் சண்டைக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றான். பின் ஆயுதத்தை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றான். பின் அவ்வாயுதத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் பெற்று ஓயாத அலைகள்-2 சமர்க்களத்தில் திறம்படச் செயற்பட்ட இவனுக்கு தேசியத் தலைவர் பரிசினை வழங்கினார். பின் இவன் ஒரு அணிப் பொறுப்பாளனாக விடப்பட்டான். இவன் வீட்டில் சகோதரர்களை எப்படி அரவணைப்பானோ அவ்வாறு தான் தனது போராளிகளையும் அரவணைப்பான். எந் நேரமும் சண்டைக்குப் போக வேண்டும் என்ற துடிதுடிப்போடுதான் செயற்பட்டுக் கொண்டிருப்பான். இவன் விளையாட்டிலும் சிறப்பாகச் செயற்படுவான். பம்பல் அடிப்பதில் இவனிற்கு நிகர் யாரும் இல்லை. இவன் ஊராக்கள் யாரையும் கண்டால் ~ஊரான்| என்று சொல்லி கட்டிப்பிடித்து முத்தமிடுவான். இவ்வாறு இருக்கும் போது இவன் காதில் ~மச்சான் நீ சண்டைக்குப் போகப் போகிறாய்| என்ற செய்தி விழுகிறது. இவன் முகத்தில் என்றும் இல்லாத புன்னகையுடன் ~உண்மையோடா மச்சான்| என்ற வண்ணம் இருக்க, இவனது பொறுப்பாளர் அழைத்து ~வெற்றி நாளைக்கு வெளிக்கிட வேணும். hPமை ஒழுங்குபடுத்து. ஓம் அண்ணை ஒழுங்குபடுத்திறன்| என்ற வண்ணம் போராளிகளைக் கூப்பிட்டுக் கதைத்தான். பின் இவனது அணியுடன் சமரிற்குப் புறப்பட்டான். வரலாற்றுப்புகழ் மிக்க இத்தாவில் சமரில் முதன் முதலாக இராணுவ ரக் ஒன்றைத் தகர்த்தான். பின்னர் அணிகளை ஒழுங்குபடுத்தி இளங்கீரன் அண்ணையிடம் தெரியப்படுத்தினான். பின் தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைக்கு முகம் கொடுத்த வண்ணம் திறமையாகச் செயற்பட்டான். அம் மண் மீட்கப்பட்டது. இவனை நெடுங்கேணி மண் அழைத்தது. அங்கு எல்லையில் ஊடுருவி பதுங்கித் தாக்குதல் நடத்த வந்த இராணுவத்தை எதிர்த்து சமர் செய்யும் போது மார்பில் காயமடைந்தான். காயடைந்த பின்னரும் கூட சளைக்காது சமராடினான். பின் மருத்துவமனைக்கு சென்று மறுநாள் இவன் தமிழீழ மண்ணிற்காய் தான் நேசித்த மக்களிற்காய்வீரச்சாவை அணைத்துக் கொள்கிறான். உன் பணி தொடரும் எங்கள் பாதச் சுவடுகள். இனி நீ நிம்மதியாய் உறங்கு.

கேணல் ராயு

கேணல் ராயு அம்பலவாணன் நேமிநாதன் யாழ்-மாவட்டம் சுன்னாகம் மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி, விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயு என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்- மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார். தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயு அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர். விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார். போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன. விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார். புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார். இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

லெப். கேணல். ராதா

லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா - வண்ணார்பண்ணை யாழ் வீரஜனனம: 22-12-1958 - வீரமரணம் 20- 05-1987 யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு விதமான பார்வையைக் கொடுக்கவில்லை. சாந்தமும் வசீகரமும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் நிர்வாக ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன. யாழ் இந்துக்கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் அதிபரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள். கல்வி, விளையாட்டு, நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக்கொண்டு கொழும்பில் வங்கியொன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார். அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வித்தியாசமான வீரனை, நடமாடும் பல்கலைக்கழகத்தினை இனங் கண்டுகொண்ட தேசியத்;தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக்கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை? பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய இராணுவ அதிகாரி ஒருவனை அங்கே காணமுடிந்தது. "Scout Attention" என்ற அதிகார அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான இராணுவ நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, அசுர வேகம் அதுதான் ராதா. ராதா அசைக்கமுடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே னுரஅடி ரவன்ஸ் எனப்படும் போலிக்குண்டுகளைப் பாவித்து போர்க்கள நிலைமையைப் போன்ற பிரமையை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பாவிக்க விரும்பவில்லை, நிஜமான குண்டுகளை பாவிக்கப்போவதாக ராதா தலைவரிடம் அனுமதி வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு அனுமதி கொடுத்தார். "Down Position" இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். நிஜமான குண்டுகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றனர். அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பாலான அடிப்பாகங்களைக் கொண்ட சப்பாத்துக்களை கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்- 16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த 'அத்காரி ராதாவைக்" காணவில்லை. ஒரு நல்ல நண்பனை, தோழனை அங்கே காணமுடிந்தது. என்ன I say கஸ்டமா இருக்கா, துன்பந்தான். இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை. பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப்பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி " இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடலை மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வித்தியாசமானவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மேசையில் புத்தகங்களும் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு. அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் வாக்கிடோக்கியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "னுழறn Pழளவைழைn" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம்; அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அது வரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய பட்டாளம் ஒன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து பறந்து சென்றது. தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் Command கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்"என்று ராதா கூறி முடித்தார். ராதாவைத் தொடர்ந்த பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்றைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் யுடநசவ வந்தால் எப்படி positionP எடுக்கிறது ஒன்று . order வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நிண்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார். இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற விசேட கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம். விக்டர் இறந்த பின் மன்னார்ப் பிரதேசத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவலோ" கவச வாகனத்தைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார். கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ் பிராந்தியத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி இராணுவமுகாம், மயிலியதனை இராணுவமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ இராணுவமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. " சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ ளுயல எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வாசகம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது பசிய நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.

லெப். கேணல். ரவி

லெப் கேணல் ரவி குமாரவேல் இரவீந்திரகுமார் - வன்னிமாவட்டம் வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986 ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சு10றையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார். அமைதிகாக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த ராஜீவின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த இராணுவத்தின் ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார். மீளவும் 1990ன் நடுப்பகுதியில் இரண்டாம் கட்டம் மாங்குளம் தளங்களைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 இராணுவ நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர்நிலங்களிலும் நின்று முதன்மையாகச் சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மனஉறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து ரவியவர்கள் களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் ச10டுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார். 1993 ல் ஒப்பறேசன் யாழ் தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாக க் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார். பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப். கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசவாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும். எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17- 03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர். மூலம் - எரிமலை

துணை தளபதி கேணல். ரமணன்

துணைத் தளபதி கேணல். ரமணன் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ. கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம். படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து, அந்தப் பாடசாலை உருவாவதற்கு அத்திவாரமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனை வருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு மைதானமும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் பரிசோதனைச் சாலையுமாக அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள். அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப் போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பாடசாலையை ஒரு உழவு இயந்திரம் நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையா விட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழவு இயந்திரத்தை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் திருப்தி தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின் புறத்தில் பதுங்கிக் கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக்குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு. உழவு இயந்திரத்தின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்து கொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் சாதாரண உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்து கொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதே போல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக் கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்து கொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழவு இயந்திரத்தைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல். தலை தெறிக்கத் தப்பி ஓடியோர் போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப் பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்து கிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன். அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் வயது அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல வருடங்களை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாக இருந்து இப்போது காவற்றுறையில் பணியாற்றுபவர். போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் அனுபவித்த வேதனைகளும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்து கொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டியவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு. நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல்களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப்பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்திரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். "ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று" என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு.

லெப். கேணல். ஜெனி

லெப்.கேணல் ஜொனி விக்கினேஸ்வரன் விஜயகுமார் பருத்தித்துறை 21.05.1962 - 13.03.1988 தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார். 1980 களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய- இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்து}துவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் ஜொனியை நயவஞ்சகமாகக் கொன்றனர். தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து இன்னுயிரை நீத்த இவ்வீரவேங்கையின் பன்னிரண்டாம் ஆண்டு நிலைவலைகளை நெஞ்சிலிருத்தி தாயக விடுதலைக்கு விரைந்து செயலாற்றுவோம். ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்குகிறார். இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார். கடந்த திங்கட்கிழமை (16.03.06) லெப். கேணல் ஜொனியின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் அவர் ஆற்றிய நினைவுரை: அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர். பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார். சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார். ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது. விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார். மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது. ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார். படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார். ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார். 10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர். 19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர். ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது. அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது. ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி. கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது. இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம். இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார். அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார். ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர். தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார். தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர். அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார். நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார். மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன். இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான். நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, " தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன். நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று. அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார். தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு. பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன். தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி. இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார். ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம். அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது. போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார். இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.

லெப். கேணல். ஜீவன்

லெப்டினன்ட் கேணல் ஜீவன் பிள்ளையான் சந்திரமோகன் கதிரவெளி, மட்டக்களப்பு. மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும். கடந்த ஒரு சகாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம். ##### அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான். இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். சிங்கபுர விடுதிப்பகுதி சிங்களச் சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992 ஆம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத் தளபதி. இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப் படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது. எதிரியின் கவச வண்டியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் ரீ55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்ää அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். " எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூள் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல. ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, ஆர்ப்பாட்டமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன். போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாறää சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர் பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பங்கர் வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள். வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்துää பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும்ää சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. 87 இன் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90இன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது. எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு. மூன்றாம் ஈழ யுத்தம் ஆரம்பத்திற்கும் 97 இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய அனு கூலஙக்ள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது. அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக் காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக் கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை." சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான். "ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்." இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதிää தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்" அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன. தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது. "ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்." புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது. "எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்" இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான். "பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு. நீங்கள் எழும்பலாம்." இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள். ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போலää பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார். ##### ரோட்டில் ஜீவன் கம்பீரமாய் கால்பாவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது. "நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழ யுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை. ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமே காரணம். பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடபினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது. ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திரு நாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.

கப்டன். மொறிஸ்

பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ் பரதரராஜன் தியாகராஜா ஆத்தியடி, பருத்தித்துறை 12.9.1969 - 1.5.1989 நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...! என்றான். அவன் தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத்துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான். நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன. சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான். பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு. ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக் கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O ( Mines operator) என்று அழைப்பார்கள். 1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது ஆக்கிரமிப்புப் படை. மொறிஸோ இந்தியன் ஆமியின் கண்ணெதிரில் அகபபட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான். ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகபபடாது தப்பித்துக் கொண்டான். அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகபடுபவன் அல்ல. ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைச்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான். அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர். உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர். இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று. இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை. வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ். நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன்சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான். ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்கமுன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான். அன்று----1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)- அதிகாலை. ---------------------------------------- ---------------------------------------- ---------------------------------- மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான்.......காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான். சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்:.அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான். அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான். தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான். 500 க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரைபடத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர். சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான். தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன் நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை. அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே "நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா" என்று கத்தினான். அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர். மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் ( வெள்ளை) பலியானான். மொறிஸ் தொடர்ந்து போராடினான். இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான். துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ். பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர். மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது. மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்! மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான். மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று- பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான்.

மேஜர். மாறன்

மேஜர் மாறன் சின்னத்துரை சுகுமாரன் - வவுனிக்குளம் 23.6.1960 - 26.6.1989 பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீர வரலாறுபடைத்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர். சிறுவயதிலேயே ஒழுக்கமும், இரக்க சுபாவமுடைய இவன். ஆரம்பக் கல்வியை பிறந்த ஊரிலேயே முடித்துக் கொண்டு உயர் வகுப்புப் பயில மத்தியமகாவித்தியாலயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அப்பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி கற்கும் பொழுது மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்த மாறன் சக மாணவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொண்டான். தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி நயவஞ்சகமாக தமிழின விரோதச்சட்டங்களைப் பிரகடனப்படுத்தி ஓர் இன அழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுகள் இறங்கியிருந்த அக்காலகட்டத்தில், தனது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த மாறன் பல வழிமுறைகளைக் கைக்கொண்டான். கலை நிகழ்ச்சிகளிற்கூடாகவும், கட்டுரை வடிவங்களிலும், கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை உண்டுபண்ணினான். அத்துடன் சிங்கள இனவாதத்தின் அடக்குமுறைக்குட்பட்ட நிலையிலும் தமிழர்கள் மத்தியில் தலைதூக்கிக் கொண்டிருந்த சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கினான். சிங்கள இனவாதப் பிடியிலிருந்தும், பிற்போக்குத் தமிழ் தலைமைகளிலிருந்தும் தமிழீழ சமூகம் விடுவிக்கப்பட்டு ஒரு புரட்சிகரத் தலைமையினால் வழிநடத்தப்படும்போதுதான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சமூகஒடுக்குமுறைகளையும் களைந்தெறிய முடியும் என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கையை எடுத்துக்கூறிய மாறன் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் தன்னையும் இணைத்துக் கொண்டான். கிளிநொச்சி மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளனாக இருந்தபோது மக்கள் மீது அவன் வைத்திருந்த நேசமும், அக்கறையும் அவனை ஒரு சிறந்த போராளியாக மக்கள் மத்தியில் வெளிக்காட்டியது. சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களே மாறனின் கவனத்தை விசேடமாக ஈர்த்தன. அம்மக்களின் நல்வாழ்விற்காக மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. சிங்கள வெறியர்களின் காடைத்தனங்களால் தமது சொந்தக் கிராமங்களைவிட்டு ஏதிலிகளாகத் துரத்தப்பட்ட தமிழ் மக்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்களுக்கு சரியான முறையில் மாறன் செயல் வடிவம் கொடுத்தான். மேலும் மக்களுக்கிடையில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை சரியான கோணத்திலிருந்து அணுகி அதனைத் தீர்த்து வைக்க மாறன் கையாளும் அணுகுமுறைகள் மக்கள் மத்தியிலிருந்த அவனது மதிப்பை மேலும் உயர்த்தியது. எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றைத் தீர்த்துவைக்க முற்படுகின்ற பொழுது அப்பிரச்சினைகளின் தோற்றம், அதற்கான காரணங்கள், அக்காரணிகளைத் தோற்றுவிக்கும் சமூகப்பின்னணிஎன்பனவற்றை ஆராய்ந்த பின்பே தீர்ப்புக்களை வழங்குவான். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், விடுதலைக்கெனப் புறப்பட்டு பிழையான தலைமைகளால் வழி நடாத்தப்பட்டு, திசை மாறி சமூகவிரோத சக்திகளாகிய சில அமைப்புக்களால் மக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகிய வேளையில், அவதானத்துடன் அதேவேளையில் தீர்க்கமுடன் மக்களை அச்சக்திகளிடம் இருந்து காத்தான். அமைதிப்படை என்ற போர்வையில் எமது மக்கள் மீது ஆதிக்கத்தினைச் செலுத்த வந்த இந்திய அரசின் வஞ்சக நோக்கத்தை எமது மக்களிற்கும், உலகத்திற்கும் காட்டுவதற்காக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கப் பாடுபட்டான். இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான யுத்த காலகட்டத்தில் எமது கருத்துக்களையும், உண்மைச் செய்திகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக எமது இயக்கத்தால் வெளியிடப்படும் 'உணர்வு', ' சுதந்திரப்பறவைகள்' ஆகிய பத்திரிகைகளின் உருவாக்கத்திற்கும், அவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுடைய பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவர்களை அணி திரட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அடிக்கடி வலியுறுத்திக் கூறுவதுடன் அவைகளுக்கு செயல் வடிவமும் கொடுத்துள்ளான். வவுனியா, கிளிநொச்சி, முல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிராந்தியத்தில் பெண்களுக்கிடையில் அரசியல்ரீதியான விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணி எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் பங்குகொள்ள வைக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளான். இவ்வாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சரியான முறையில் செயற்படுத்திய வேலைத்திறனும், மக்கள் மீது குறிப்பாக சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகிய மக்கள் மீது மாறன் காட்டிய நேசமும் அவனை வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளனாக உயர்த்தியது. 26.06.1989 அன்று வவுனியா மாவட்டத்திலுள்ள பன்றிக்கெய்த குளம் என்னும் இடத்தில் வன்னிப்பிராந்திய அரசியற் பொறுப்பாளர் மேஜர் மாறன் உட்பட லெப். நித்திலா(மகளிர் படைப்பிரிவு), லெப். அருள், சுதன், மகேந்தி, சபா, பொபி, அகிலன், கேசவன், அச்சுதன், நவம், விஜயன், முரளி, ரூபன் ஆகிய 14 விடுதலைப் புலிகள்

2ம் லெப். மாலதி

இரண்டாம் லெப்டினென்ட் மாலதி எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 23 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள். நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது.

மேஜர். மாதவன்

மேஜர் மாதவன் நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான். மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன். எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது. பழகிய மனங்களில் இவன் ஒரு அழியாச்சுடர். அல்லது ஞாபகச்சிற்பம். தொண்ணுhறுகளின் முன்பாதிக்கால நாட்களில், மாதவன் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழக நடுவப்பணியகத்தில் தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தான். அங்கே வரும் கலைஞர்களுடன் பழகுவதிலும் அவர்களுடன் ஒரு போராளியாக உறவாடுவதிலும், கலைகளைப் பயில்வதிலும் முன்மாதிரியாக இருந்தான். எந்நேரமும் இயங்கிக்கொண்டிருப்பது மாதவனின் தனி அடையாளம். எதிலும் எப்போதும் ஓய்வோ, சோர்வோ இல்லாத வேக உழைப்பு இவனுடையது. மாதவன் இறுக்கமானவன். அதேவேளையில் அமைதியானவன். இளகிய இதயமுடையவன். மாதவன் தன் போராட்டச் செயற்பாடுகளினூடு ஒரு கலைஞனாக நம்மில் பதித்துச் சென்ற அடையாளங்கள் அநேகமுண்டு. 'தாயகக் கனவு' வீடியோப்படத்தில் தன் வாழ்வுடன் இணைந்த பாத்திரமாக போராளிப்பாத்திரமேற்று நடித்திருந்தான். தாயக விடுதலைப் பாடல்களில் 'கரும்புலிகள்' ஒலிநாடாவில் ' தலைகள் குனியும் நிலையில் எங்கள் புலிகள் இல்லையடா' என்ற பாடல் அவனது முதற்பாடலாக அமைந்து, எல்லோர் வாயிலும் அது ஒலித்தது. பின்னர் 'முல்லைப்போர்' இசை நாடாவிலும் அவன் பாடல் எல்லோராலும் வரவேற்கப்பட்டது. 'தேசத்தின் புயல்கள்' பாகம்-1 இசை நாடாவில், தானே எழுதி போராளிக் கலைஞர்களுடன் பாடிய 'கரிகாலன் வளர்க்கின்ற கண்மணிகள்' என்ற பாடல் எங்கும் எல்லோராலும் நன்கு பேசப்பட்டது. இப்படியாக வந்ததற்கும்; இருந்ததற்கும்; சென்றதற்கும் கணிசமான சுவடுகளை விடுதலைப் போராட்டத்தில் பதித்துவிட்டு களத்தில் அவன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். நெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி வெளியே குயிலெனப்பாடி, நதியென ஆடித்திரிந்த அந்த விடுதலைப் பறவையின் நினைவுடன் இந்த மண்ணும் அதன் வரலாறும் இருக்கும். காற்றில் எழுதிய பாடலாக, நம் நினைவின் பெரும் பெருக்காக, எங்கள் முற்றங்களில் பூக்கும் மலராக மாதவன் என்றும் கலந்திருப்பான்.

லெப். கேணல். மனோஜ்

லெப்டினன்ட் கேணல் மனோஜ் பாலசிங்கம் வசந்தகுமார் உப்பாறு, திருகோணமலை. 5.2.1971 - 11.12.2001 பாலத்தோப்பூர் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு தலைநகர் உளற்றெடுத்த உப்பாற்றிலே 1971. 02.05 தினத்திலே உப்பாற்று மண்ணை காப்பதற்கு மட்டுமல்லாமல், தமிழீழ மண்ணை பாதுகாப்பதற்க்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் இவனோ தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் தமிழினத்தை காக்கப் புறப்பட்டான். எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்ச்சிகளை தன்சக போராளிகளுடன் மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணாதிசயங்களும் உணர்வுகளும் எல்லை கடந்தது. கடலின் எல்லை காண்பது இலகு. அனால் அண்ணன் மனோஜின் ஆழம் காண்பது கடினமானதாகும். குறும்புத்தனமிக்க அண்ணன் எதிரியின் சூழ்ச்சிகளையும் இடங்களையும் வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதிலும் பெயர் போனவர். தனக்குப்பிடித்தவர்கள் என்று வேற்றுப்பிரிவு காட்டமாட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் எடுத்துக்காட்டாகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். புலிகள் என்றும் கூண்டுக்குள் அடைபடுபவர்களுமல்ல காட்டில் மட்டும் வாழ்பவர்களுமல்ல என்ற வரிவிலக்கணத்தை எதிரிகளுக்கு பலதடவைகள் உணர்த்தியவர். எந்த ஒரு துரும்பினாலும் நுழைய முடியாது என்று கூறும் போராளிகளை தன் நுண்ணிய அறிவால் வழியமைத்து நுழையவிடுவார். அவரின் பாதம் படாத இந்த புண்ணிய இடம்தான் உண்டோ? சொல்லு வான் நிலாவே? உனக்குத்தான் தெரியும் அவனின் வீரநடையும் செவ்விதழ் புன்னகையை கண்டு நீ பொறாமை கொண்ட நாளும் உண்டு. வன்னியில் இருந்து திருமலைக் காட்டுப்பாதை வழியை கொம்பாஸ் மூலம் கண்டுபிடித்தவர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்டவர்கள் கூட தனக்கு உதவியாக பலரை இணைத்துக் கொண்டு கடல்பாதையை கண்டு பிடிக்க வருடக் கணக்காயின. அனால் அண்ணன் துணிவும் திறமையும் ஒன்றாகப் பெற்றவர் என்பதால் யாரும் நுழைய முடியாத அந்த வனாந்தர பாதைகளை கண்டு பிடித்து தன்கண்டு பிடிப்பை யாரும் தட்டி விடக்கூடாது என்பதற்காக புல்மோட்டை பாதையில் கிடந்த சிறு கற்களை பொறுக்கி தன் சேட்பொக்கட்டில் போட்டுக் கொண்டு தளபதியிடம் காட்டினார். மற்றும் எதிரியுடன் சண்டை செய்வது என்றால் பூனைக்கு கொண்டாட்டம் எலிக்கு மரணம் போல் அவர் குதுகலிப்பார். எதையும் செய்ய முடியாது என்று இவரின் வார்த்தையில் வந்ததே கிடையாது. எதையும் முடிக்கும் திறமை கொண்டவர். இவரின் முதற் சமர் 1990ல் திருமலை யாழ் வீதியில் 16 எதிரிகளின் உடல்களை தரை சாய்த்தது. பாராட்டும் கிடைத்தது.அண்ணாவின் படையில் அதிகளவு போராளிகள் காணப்படமாட்டார்கள். ஆனால் அவரின் முயற்ச்சியால் ஒரு போராளி பத்து பேருக்கு சமன் போல் அவரின் சமர் வெற்றி கொள்ளும் மின்னல் வேகத்தில் சென்று சூறாவளியாக சமரை வீசி பின்பு பனிமழை போல் வருவார். வெற்றிவாகை சூடிக்கொள்வதில் தனிப் பிரிவு இவர். ஆண்களின் இயல்பு பெண்களை சீண்டிப்பார்ப்பது. ஆனால் அண்ணன் பெண்களை தாயாக மதிப்பவர். தன் சகாக்கள் பெண்களை நக்கல் செய்தால் பொங்கி எழுவார். இவ்வாறானவர் களத்துக்கு சென்றால் மகளிர்ப் படையணி போருக்குப் புயலாக இணைந்து கொள்ளும். இவர் தலைமையில் வேங்கைகள் போர்களம் புகுந்தார்கள் என்றால் தளபதிகள் கூட தன்னகத்தே பெருமிதம் கொள்வார்கள் மனோஜின் தலைமையிலான போர் வெற்றி கொள்ளும் என்று. அந்த அளவிற்கு தமிழீழத்தை மீட்டெடுத்து தன் தாய் மண்ணை காக்கவேண்டும் என்ற உத்வேகம் தனையனிடம் குடிகொண்டிரு;தது. மனோஜ் அண்ணன் 2001.07.20 அன்று தன் போராளிகளுடன் தமிழீழ தலைநகருக்கு தன் பயணத்தை ஆரம்பித்தார். காட்டுமிராண்டிகளான சிங்கள இராணுத்தின் கண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவராக காடு மலை கடல்நீர் என்று பல தடைகளையும் கடந்து எம்மை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். ஆசையோடு கண்டு 15 வருடங்களாகிவிட்ட வெளிநாட்டிலிருந்து வந்த அண்ணன் தன் தம்பியை காண வந்தார். ஆனால் தம்பியோ தன் பிறப்புக் கடமையை உதாசீனம் செய்து சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்கும் இலட்சியத்தில் தன் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் அர்ப்பணித்து தன் பணியில் ஈடுபட்டார். அண்ணன் தன் உடம்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் சிலகாலம் ஓய்வு பெற்றார். ஆனால் தன் நினைவலைகளை போர்க்களத்திலேயே செலுத்தி நின்றார். சில நாட்களின் பின்னர் வேவுப்புலியானார். அண்ணன் வழிநடத்திச் சென்ற படையணி வெல்வேரிச்சமரில் மாபெரும் வெற்றியை தழுவிக்கொண்டது. இச்சண்டையில் எதிரிகளிடம் இருந்து பல்ரக ஆயுதங்களை கைப்பற்றியதால் தலைவரண்ணாவிடம் இருந்து பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். இது மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. இதனைவிட பன்மடங்கு வெற்றியை தன் வழி நடத்தலில் தன் படையணி பெறவேண்டும் என்ற உள்நோக்கம் ஆலவிருட்சம் போல் பரவி கிடந்தது. இவருடைய முக்கிய சமர்க்களங்களாக திருமலை யாழ்வீதி பதுங்கித்தாக்குதல், தவளைப்பாய்ச்சல் சமர்கள் ஆனையிறவு பரந்தன் சமர்கள், மன்னார் பொலிஸ் நிலைய தாக்குதல், ஜெயசிக்குறு சமர்கள், வெல்வேரி வெற்றிச் சமர், பச்சனூர் பொலிஸ் நிலையதாக்குதல், கந்தளாய் கடவாணை றோட் அம்புஸ் தாக்குதல், பாலம் போட்டாறு பதுங்கித்தாக்குதல், மூதூர் பாலத்தோப்பூர் இராணுவப் புலனாய்வுப்பிரிவு முகாமே இறுதிமுகாமாக இருக்கும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. சண்டைக்கான பயிற்ச்சி நெறிகளும் ஆரம்பித்துவிட்டன. ஒத்திகை பார்க்கும் நாளோ நெருங்கிவிட்டது. தனக்கு சிறந்த மகளிர் படையணி தலைவி வேண்டும் என்று கேட்டார். அதற்கமைய இக்கட்டான காலகட்டத்திலும் படையணியை சிறந்தாற்போல் வழிநடத்தும் படையணித் தலைவி கொடுக்கப்பட்டார். நள்ளிரவில் தொடங்கிய யுத்தத்தின் சத்தங்களே எம் செவிப்பறைகளை அதிரவைத்தது. சீறிச் சிலிர்த்த புலியாய் எதிரியைத்தாக்க தொடங்கினார். திடிரென மனோஜ் அண்ணனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாங்கள் அனலில் விழுந்த புழுவாக துடி துடிக்கலானோம். காயம் என்று அறிந்ததும் ஓரளவு மனதைதேற்றிக் கொண்டோம். அந்த வேளையில் யாரும் அறியவில்லை புலரும் பொழுதிலே இடியோசை ஒன்று காத்து நிற்கின்றது என்று. ஆம்! அதிகாலை 5.25 மணியளவில் மின்னலென எம் செவிகளை நோக்கி ஓர் செய்தி வந்தது மின்னல் வேகத்தில். எதிரியை தாக்கி விட்டு எதிரியின் இலக்குக்கு திடீரென உள்ளாகிவிட்டார். தனயனின் மார்பை எதிரியின் துப்பாக்கி முனை குறிபார்த்து விட்டது. அண்ணனின் துணிவைப் பார்த்து அந்தச் சு10ரியன் கூட தன் செங்கதிரை மண்ணில் பாய்ச்ச மறுத்து விடட்டது. காரணமோ! ஓர் வீரனின் உடல் இங்கு மாய்ந்து கிடக்குறது. அந்த வீரனின் பலத்துக்கு முன் அந்த கதிர்களின் ஒளிக்கு பலமில்லை. வீரத்தாயின் மடியினிலே வீரத்தாலாட்டில் தமிழீழ மானம் காக்க வந்த சிங்கம் 11.12. 2001 அன்று இறுதியான போர்க்களத்துடன் தமிழீழ மண்ணை எங்கள் கரத்தில் ஒப்படைத்துவிட்டு துப்பாக்கி முனையில் தன் உயிரை நீத்து ஈழமண்ணை முத்தமிட்டு மூன்று போராளிகளுடன் ஓர் இமயமலை தரை சாய்ந்தது. அண்ணனே! நீங்கள் மாவீரராகி இன்று துயில்கிறீர்கள். உங்கள் ஞாபகமாக மூதூர் பள்ளிக்குடியிருப்பில் "லெப். கேணல் மனோஜ் பாலர் பாடசாலை" ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவீரரான உங்கள் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம். செல்வி ஜீவி தலைநகர் மகளீர் படையணி நன்றி: பாலசிங்கம் கமலநாதன்(லெப்.கேணல் மனோஜின் சகோதரன்)

லெப். மலரவன்

லெப்டினன்ட் மலரவன் ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதை ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில், பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் எதிரியின் முன்னணித் தடை வேலியை நெருங்கிவிட்டனர். நீண்டதொரு இரகசிய நகர்வை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியில் அவர்கள் இருந்தனர். ஆனால், இன்னுங்கூட அபாயம் நீங்கவில்லை. அப்போது எதிரியால் அவதானிக்கப்பட்டால், அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்படலாம். காவலரண்களின் முன்னாற் சில பத்து மீற்றரில் அவர்கள் நிலத்துடன் நிலமாகக் கிடக்க, அவர்களை வழிகாட்டி அழைத்துவந்த போராளி கைகளில் முட்கம்பி வேலித்தடையை அகற்றும் கருவியுடன் முன்னேறினான். சண்டை தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. முதலாவதாக இருந்த கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இரண்டாவது தடைக்கு அவன் „ டோப்பிட்டோ “ குண்டை பொருத்த, மறுமுனைகளிற் சண்டை தொடங்குகின்றது. அங்கே பொருத்திய “ டோப்பிட்டோ “ வெடிக்குமென எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க, அந்தக் குண்டு வெடிக்காமலே போய்விட்டது. துப்பாக்கிகள் சடசடக்க, எதிரி வானில் ஏவிய “ பரா “ வெளிச்சக் குண்டுகள் இரவைப் பகலாக்கி வானில் ஒளிவீச, அங்கே எமது அணியினர் தமக்குரிய பாதைத் தடையைத் தகர்க்க முடியாமல் இருப்பதை எதிரி கண்டுகொண்டான். தனது சூட்டு வலுவை இப்போது அந்த அணியினர் மீது எதிரி மையங்கொள்ள வைத்தான். நிலமை மோசமாகிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையவேண்டிய அந்த அணி வழியிலேயே எதிரியின் சூட்டிற்கு இலக்காகிப் போராளிகளை ஒவ்வொருவராய் இழந்துகொண்டிந்தது. மீண்டும் அந்தத் தடையைத் தகர்க்க அவ்விடத்தில் கைவசம் மேலதிக “ டோப்பிட்டோ “ வோ, பின்னாலிருந்து வரவழைக்க அவகாசமோ இருக்கவில்லை. இந்த இக்கட்டான நிலையில் எல்லோரும் தவிப்புடன் பார்த்திருக்க, கைவசம் இருந்த ஒரேயொரு கம்பிவெட்டும் „ கட்டரு “ டன் எழுந்தான்., அந்த அணிக்கு வழிகாட்டி முன்னே நகர்ந்து கொண்டிருந்த லெப்டினன்ட் மலரவன். துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டு உடலிலிருந்து குருதி வழிய வழிய, தள்ளாடியபடி எதிரியின் தடைக்கம்பி வேலியை நெருங்கியவன், ஒவ்வொரு கம்பியாய் வெட்டத்தொடங்கினான். எதிரியின் துப்பாக்கிகள் அவன் ஒருவனையே குறிவைத்தன. அந்தச் சொற்ப நேரத்தினுள்ளேயே தடையை வெட்டி அகற்றிவிடவேண்டும் என்ற உறுதியுடன் தடைக்கம்பிகளை வெட்டி அகற்றியவாறு அந்தக் கம்பிகளின் மீதே சரிகின்றான் மலரவன். இறுதிக் கம்பி மட்டும் இன்னும் வெட்டப்படாமல் இருந்தது. ஆயினும் பாதை ஏற்பட்டுவி;ட்டது. அவன் ஏற்படுத்திக் கொடுத்த பாதையின் ஊடாக அணிகள் உள்ளே பாய்கின்றன.அவனது தோழர்கள் அவனைக் கடந்து எதிரியின் அரண்களை நோக்கி ஓடும் போது எஞ்சிய உயிர்த் துளியில் அவனது நாவு உச்சரித்தவை இவைதான். „ மச்சான்! ஒன்றையும் விடமாற் பிடியுங்கோ “ அன்றைய அந்த அணியின் சண்டையின் முடிவை மாற்றியமைத்தவன் அந்தப் போராளி. எதிரியின் சூட்டிற்கு ஒவ்வொருத்தராய் வீழ்ந்துகொண்டிருந்த நிலையை மாற்றியது அவனது முடிவுதான். தன் உயிர்கொண்டு அவன் தடையகற்ற துணிந்தமையால் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்திக் கொண்டு முன்னேறியது அவனது அணி. அன்றைய சண்டையில் அவர்கள் ஏராளம் இராணுவத்தினரை கொன்றொழித்தனர். பலம் வாயந்த எதிரியின் பிரதான முகாமை ஊடுருவி அவனது பல ஆயுதங்கள் உள்ளிட்ட ஆட்லறித் தளத்தை அவர்கள் அழித்தனர். அத்தனையும் அன்று சாத்தியமாக்கியது தடையகற்றித் தன் சாவைச் சரித்திரமாக்கிவிட்ட அந்தப் போராளியின் இறுதி நேர முடிவே. எமது விடுதலை வரலாற்றுப்பற்றித் தலைவர் அவர்கள் கூறுவது போல் „ ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் “ தானும் ஒருவனாய் சங்கமித்துப்போன இவனதும் சரித்திர நாயகர்களினதும் தியாகங்களே இன்றும் எம் விடுதலை நதியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கின்றன.

லெப். கேணல். மல்லி

லெப்.கேணல் மல்லி - அமுதன் சின்னத்தம்பி பத்மநாதன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு. விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதி லெப்.கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எனும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990 ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான். 1991 களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான். 1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992 ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான். 1990 ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான். சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான். யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற மூயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவிவரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

கப்டன். மயூரன்

கப்டன் மயூரன் பாலசபாபதி.தியாகராஜா ஆத்தியடி பருத்தித்துறை அன்னை மடியில் - 1.11.1970, மண்ணின் மடியில் - 11.11.1993 கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர். அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன். பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை. 15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம். அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று. இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான். மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான். திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான். அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார். கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன் ஓருக்கால் வந்தாய் நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய் தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க கையில் பெடியோடு உனது அண்ணி கண் கலங்கப் பார்த்திருக்க பார்த்தாயா...யா? புரியவில்லை நினைவில் தெரியவில்லை. தெருவோடு நீ ஓடி துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம் கனவாக மறைந்து போனாய் சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய் எம் கண்ணிலெல்லாம் காயாத நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய். இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ...? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகிவிட்டான். மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது. மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்... விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடலைக் காணவில்லையடா விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு விதி எமக்கு இல்லையடா-அதனால்தான் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில் கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம் நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம் மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம் உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம் உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம் -தீட்சண்யன்.. மயூரனின் நண்பர்களின் நினைவில்... களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல் கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர் களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய் எரிமலையாகி வெடித்து விட்டாய் நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா! உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே.. ....... ..நண்பர்கள்....... மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா) அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன். அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார். 1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய்

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner