பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர். அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவை யான வாகனங்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார். 1982- ஆம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் வாகனம் ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி வாகனம் மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கணும் பிரபல்யமாகத் தேடப்பட்ட ஒருவரானார். 1983- ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் - களத்தில்- என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். ~1983 ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தைவிட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்@ர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்? என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு இராணுவப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு இராணுவப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. ஆரம்ப காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார். அப்பையா அண்ணனின் கண்டுடுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ் பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார். நன்றி: விடுதலைப் புலிகள்
0 Comments:
Post a Comment