பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
லெப்.கேணல்.சாந்தகுமாரி/ஜெயசுதா சூசையப்பு மொறாயஸ் ரமணி மன்னார் மண்ணின் மடியில் 06.10.2000 எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி இராணுவ நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது. இம் மாபெரும் நிலமீட்பு நடவடிக்கையின் போது ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசங்களை மீட்கும் பொறுப்பு மாலதி படையணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கையில் மாலதி படையணியின் ஒரு அணியே பங்கு கொண்டது. இன்னொரு அணி அம்பகாமப்பகுதி முன்னணிக் காப்பரண்களில் நிலைகொண்டிருந்தது. ஏனையவை வேறு வேறு இடங்களில். அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர் லெப்.கேணல் சாந்தகுமாரி ஆவார். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலதி படையணியை அதன் சிறப்புத் தளபதி கேணல். யாழினி (விதுஸா) அவர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். சண்டைச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு இவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்புக் கருவியின் ஒலியலை வாங்கியை இழுத்துவிட்டு சண்டைக் கட்டளைகளை கேட்டபடி அங்கும் இங்கும் நடப்பதாயும் இருப்பதாயும் பின் எழும்புவதாயும் இருந்தார். சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துடித்தபடி இருந்தார். சண்டை உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தது. இவருக்கு முன்னே உள்ள எதிரிக் காப்பரண்களின் முதுகுப்புறம் சண்டை நடந்து கொண்டிருக்க, இவர் தன்னை மறந்து தன் சிறப்புத் தளபதிக்கும் தெரியப்படுத்தாமல் சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்று, தானும் சண்டையில் கலந்து கொண்டாh . சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் யாருடைய அனுமதியும் இல்லாமல் காட்சி தந்த சாந்தகுமாரியை உடனேயே காவலரண் பகுதிக்கு திரும்பும்படி கேணல் யாழினி அவர்கள் இறுக்கமான கட்டளை ஒன்றை வழங்கிய பிறகும் மனமில்லாது தனது இடத்துக்குத்திரும்பினார். தான் சண்டைக் களத்துக்குப்போய் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்துவிட்டேன் என்ற சந்தோசத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஒறுப்பைக்கூட சிரிப்புடனேயே ஏற்றுக் கொண்டார். இவர் முத்துக்குப் பெயர்போன மன்னார் மாவட்டத்தில் சூசையப்பு தம்பதிகளுக்கு 1972 ம் ஆண்டு 7ம் மாதம் 19ம் திகதி மகளாய்ப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மொறாயஸ் றமணி. இவரது குடும்பத்தினர் மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் காலப்பகுதியிலேயே சிறீலங்கா இராணுவத்தினருக்குத் தெரியாமல் போராளிகளை ஆதரித்துவந்தனர். அந்த நாட்களில் இவரது அண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டார். இவர் தன் அண்ணா மீது அதிக பாசமுடையவர். அண்ணனின் பிரிவு இவரை வாட்டியது. 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவரது உயிர் அண்ணனான வீரவேங்கை யேசுதாஸ் என்பவர் வீரகாவியமாகிவிட்டார். அண்ணனின் இலட்சியப் பாதையை பற்றி அண்ணனின் ஆயுதத்தை தானே ஏற்க வேண்டும் என்பதற்காய் அதே ஆண்டிலேயே இவர் எமது விடுதலைப் போரில் இணைந்தார். இவர் 1990ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் 10 வது பயிற்சிப் பாசறையில் லெப். கேணல் மாதவியிடம் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பள்ளி அனுபவமோ படிப்புவாசமோ பெரியளவில் அறியாதவர். ஆனால் அனுபவத்தால் பல களங்களை இவர் படித்திருந்தார். மக்களோடும் போராளிகளோடும் அன்பாகப் பழகுவார். அன்போடு பண்பும் கொண்டவர். தனக்குக் கீழுள்ள போராளிகளை அவரவர் திறமைக்கேற்பவும் தரத்துக்கேற்பவும் மரியாதை கொடுத்து பணிவாக நடந்து கொள்வார். ஒவ வொரு போராளியினதும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவார். தெரியாத விடயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். அதற்காக ஒரு போதும் அவர் கூச்சப்பட்டதில்லை. சிறு விடயமானாலும் சிறிதளவு உணவானாலும் எல்லோரிடமும் பகிர வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர். இவருக்கு நாவற் பழங்கள் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் சில போராளிகள் நீண்ட தூரம் சென்று இவருக்காய் நாவற்பழங்களை பிடுங்கிக்கொண்டு வந்தபோது முக்கால்வாசிப் பழங்கள் நசிபட்டுப் பழுதடைந்துவிட்டன. ஆனாலும் அந்தச் சிறிய தொகை நாவற்பழங்களை நன்றாகக்கழுவி, ஒவ வொரு காவலரணாகச் சென்று எல்லாப்போராளிகளுக்கும் கொடுத்த பின்னரே தான் உண்டார். அதேபோல் புதிர் கணக்குகள் சொன்னால், அதை எல்லோருக்கும் கூறி அதற்கான விடையைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். ஓய்வுடன் இருக்கும்போது தனக்குத் தெரியாத அடிப்படை விடயங்களைப் படித்தறிவதற்காய் எந்நேரமும் கொப்பியும் பேனையும் கொண்டு திரிந்து தெரிந்தவர்களிடம் கேட்டுப்படிப்பார். பம்பல் அடிப்பதிலும் நாசூக்காக மற்றவர்களை நக்கல் அடிப்பதிலும் திறமையாக இருந்தார். பயிற்சியை முடித்தவுடனேயே களமுனைகள் அவரை வரவேற்றன. இவரின் முதலாவது சண்டைக்களம் யாழ் கோட்டை முற்றுகையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மீட்புச் சமரே அவரது முதற்களமாய் இருந்ததற்காக இவர் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு. பலாலி, ஆனையிறவு மீதான ஆகாய கடல்வெளித்தாக்குதல், மின்னல், கஜபார, பலவேகய -02, மண்கிண்டிமலை மீதான இதயபூமித் தாக்குதல் எனத் தொடர் களங்கள் இவரை வரவேற்க, தனது திறமையை வெளிக்காட்டினார். தொடர்ச்சியான களமுனைகள் இவரின் வளர்ச்சிக்குப் படிக்கற்களாக இருந்தன. யாழ்தேவி எதிர் நடவடிக்கையிலும், எம்மவர்களால் பூநகரி பகுதியில் நாடாத்தப்பட்ட 'தவளை' நடவடிக்கையிலும் திறமையாக பங்காற்றினார். பின்னர் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் தேவைகருதி கண்ணிவெடிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடைபெற்ற படிப்புக்களையும் பயிற்சிகளையும் வேவுப்பயிற்சியையும் ஆர்வத்துடனும் திறமையுடனும் செய்தார். இவர் கண்ணிவெடிகளோடு களமுனையில் செய்த செயற்பாடுகள் அளப்பரியது. 1995 ம் ஆண்டு 3ம்கட்ட ஈழப்போர் தொடங்கிய காலப்பகுதியில் கண்ணிவெடிப்போராளிகளின் பணி மிக முக்கியமாய் இருந்தது. இவர் மண்டைதீவுச் சண்டைக்கு சென்றதோடு மணலாற்றில் ஐந்து இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலிலும் திறம்படப் பங்காற்றினார். 'இடிமுழக்கம்' என்ற பெயரில் எதிரி ஒரு வலிந்த தாக்குதலை செய்தபோது இவரின் கண்ணிவெடிப்பணி அங்கிருந்தது. சூரியகதிர்-01,02 என எதிரி மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களானது இவர் போன்ற கண்ணிவெடிப்போராளிகளின் சண்டைத் திறமையை வளர்ப்பதற்கும் மேன்மேலும் திறம்பட வளர்ச்சி அடைவதற்கும் உரைகற்களாய் அமைந்தன. தேவையான இடங்களில் கண்ணிவெடி, மிதிவெடி, பொறிவெடிகள் என்பவற்றை வைப்பதும அவ விடத்தில் எதிரி வரும்போது ஏற்படும் இழப்புக்களை அவதானிப்பதுமாக கடும் பணிகளுடன் இவரது களமுனைக்காலம் நகர்ந்தது. சாந்தகுமாரி ஒரு நாள் களமுனைப்பகுதியில் மிதிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது இரண்டு கைகளையும் மென்மையான துணியால் சுற்றி பந்தமாய் கட்டியிருந்தார். அவர் அருகில் சென்ற பொறுப்பாளர், "என்ன சாந்தகுமாரி? கையில் காயமா?" எனக் கேட்டபடி அருகில் வந்தார். "ஒன்றும் இல்லையக்கா" என மழுப்ப முயன்ற சாந்தகுமாரியின் கைகளில் சுற்றப்பட்ட துணிப்பந்தத்தை அவர் விலக்கியபோது கைகள் இரண்டும் கொப்புளங்கள் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது. கவலையுடன் நோக்கிய பொறுப்பாளரிடம் " ஒன்றுமில்லையக்கா. கையில கொப்புளங்கள். துணியைச் சுற்றினால் வலிக்காது என்று துணியைச் சுற்றிவிட்டு வேலை செய்கின்றேன்" என்றார் தன் வழமையான சிரிப்புடன. தன் வேதனைகளைக்கூட களமுனைக் கடமைகளில் மறந்து சிரிக்கும் ஒரு போராளியாகவே இவர் இருந்தார். அத்துடன் இரவில் வேவுக்கு சென்று எதிரியின் பிரதேசத்துக்கும், எமது பிரதேசத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரி வரக்கூடிய இடங்களில் வெடிக்கக்கூடிய மாதிரி சூழ்ச்சிப் பொறிகளை வைத்துவிட்டு வருவார். பகலில் தான் வைத்த சூழ்ச்சிப் பொறிகளை அவதானிப்பு இடத்தில் இருந்து அவதானித்தபடி இருப்பார். எதிரி முட்டுப்பட்டு வெடிப்பதை பார்த்துவிட்டுத்தான் உரிய இடத்திற்குத் திரும்புவார். சூரியகதிர் - 02 முடிந்து படையணிகள் வன்னிக்கு வந்து ஓயாத அலைகள் - 01 நடைபெற்ற காலப்பகுதியில் சாந்தகுமாரியின் தலைமையிலான கண்ணிவெடி அணி முல்லைத்தள மீட்பின் பின் அங்குள்ள கண்ணிவெடி, மிதிவெடிகளை பல நாட்களாக நின்று அகற்றியது. பின் சத்ஜெய 01,02,03 எதிர்ச்சமர்க்களங்களில் இவர்கள் விதைத்த ஜொனி மிதிவெடிகள் எதிரிக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. தொடர்ச்சியாக அயராது எம் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி. களமுனைகளை தன் வீடாகவும் சண்டைகளை தன் வாழ்நாளாகவும் கொண்டவர்தான் சாந்தகுமாரி. இவர் சண்டைகளோடு மட்டும் அல்லாது குறும்புத்தனங்களும் செய்வார். வகுப்புக்கள் என்றால் ஈடுபாடு குறைவு. ஆயினும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் மனதில் பதிய வைத்துவிடுவார். அப்போது எமதணிகள் கிளிநொச்சி காவலரண்பகுதிகளில் நின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போராளிகளை பின்னணிக்கு எடுத்து படிப்பிப்பார்கள். அதில் இவரும் ஒருவர். வகுப்பு என அறிவித்த நேரத்திற்கு அரை மணிக்கு முன் எதிரியின் பிரதேசம் மீது தாக்குதலை செய்வார். அவ வளவுதான், அலறித்துடித்து எதிரியானவன் எமது பிரதேசம் மீது தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதலோடு துப்பாக்கிப் பிரயோகமும் செய்வான். இதனால் வகுப்புக்கள் நடைபெறாது. இப்படியாக இவர் செய்த குறும்பு வேலைகளால் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை. இது எப்படியோ அப்பகுதியின் பொறுப்பாளருக்கு தெரிந்துவிட்டது. அதன்பின் சண்டை நடந்தாலும் வகுப்புக்கள் நடைபெறும் எனக் கூறிவிட்டார். ஒருநாள், அடுத்த வகுப்பில் பரீட்சை நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருந்தார். இவரால் தப்ப முடியாத நிலை. பொறுப்பாளர் விடமாட்டார் என்பதற்காய் வகுப்புக்கு வந்தவர் இடையில் ஒருவருக்கும் தெரியாமல் ஜம்பு மரம் ஒன்றில் ஏறி ஒழிந்துவிட்டார். இவருடன் சென்ற போராளிகள் அனைவரும் இவரைத் தேடிவிட்டு பரீட்சை எழுதிவிட்டு திரும்பியபோது ஜம்பு மரத்திலிருந்து குதித்து, "அப்பாடா! இப்பத்தான் நிம்மதி" என்றவாறு போராளிகளுடன் சேர்ந்து காவலரண்பகுதிக்கு சென்றார். எப்படியாவது குறும்புத்தனங்கள் செய்து படிக்காவிட்டாலும் அனுபவத்தால் திறம்படச் செய்வார். இவரைப் பொறுத்தளவில் அனுபவமே மிகப்பெரிய ஆசானாய் இருந்தது. இவ் வாறாக இவரின் களப்பணி எமது போரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. ஆனையிறவு-பரந்தன் சமரின் போது மிதிவெடிகளை விதைத்து எதிரிக்கு பெரிய இழப்பை இவரது அணி ஏற்படுத்தியிருந்து. ஜெயசிக்குறு களமுனையில் லெப்.கேணல் தட்சாயிணிக்கு தொலைத்தொடர்பாளராய் இருந்து கொண்டு எதிரியின் பிரதேசத்திற்குள் சென்று வேவு பார்த்து வருவதோடு, கண்ணிவெடிகளையும் விதைத்து வருவார். இவர் சிறந்த துப்பாக்கிச்சூட்டாளர் நன்றாக குறிதவறாது சுடுவார். ஒரு தடவை படையணியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் மூன்று பரிசில்களையும் தேசியத்தலைவரின் கையால் பெற்றார். பின்னர் நடந்த போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். படையணியில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றவர் என்ற பெருமை லெப்.கேணல் சாந்தகுமாரியையே சாரும். இவரின் திறமைகண்டு இவருக்கு 1996ம் ஆண்டு 40மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கிளிநொச்சி- பரந்தன் சமருக்கு சென்றபோது 01.02.1998 அன்று முதுகிலும் வாயிலும் காயப்பட்டும் தன் எறிகணை செலுத்தியைக் கைவிடவில்லை. சிகிச்சைக்காய் மருத்துவமனை சென்றவர், மீண்டும் உடற்காயங்கள் மாறும் முன்னே களமுனைக்கு வந்தார். ரணகோச சண்டைக்காலப்பகுதியில் தன் சொந்த மண்ணான மன்னாரில் குறிப்பிட்ட அணிகளுக்கு பொறுப்பாக நின்றார். பழக்கப்பட்ட இடம் ஆதலால் நீண்ட தூரம் காட்டுக்குள் சென்று வேவு பார்ப்பது என ஓயாது செயற்பட்டார். இவர் சிந்தனைகள் யாவும் சண்டையைப் பற்றியதாகவே இருக்கும். இவரது கனவுகளிலும் நினைவுகளிலும் சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கும். வோட்டஜெற் எதிர்ச் சண்டையில் தனது கள வேலைகளைத் திறம்படச் செய்தாh பின் 1999 ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணிப்பகுதியில் நின்ற ஓயாத அலைகள்-03 சிறப்பு அணிகளுக்குப் பொறுப்பாய் நின்றார். அப்போது நத்தார் காலம். கிளிநொச்சியில் நின்ற எமது அணியினர் தொலைத் தொடர்புக் கருவியில் சாந்தகுமாரியிடம் "நத்தாருக்கு என்ன விசேடம்" எனக் கேட்க, "பெரிசா ஒண்டுமில்லை. எங்கட பகுதிக்கு நத்தார் கொண்டாட வாற விருந்தாளிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து, 50 பேற்ற பொடியை எடுத்து வைக்கவேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறோம்" என்றார். உண்மையில் அவர் சொன்னதற்கேற்ப செயலிலும் காட்டினார். உலகமே ஆவலுடன் 2000ம் ஆண்டின் வரவிற்காய் காத்திருக்க இவரோ தனது அணியுடன் எதிரியின் வரவிற்காய் காத்திருந்தார். அந்தப் புதிய நூற்றாண்டின் முதல் நாளில் அவருக்கு அருமையான சண்டை வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளம் போல் வந்த எமது பிரதேசத்துள் நுழைய, இவரோடு நின்ற மேஜர் வேழினியின் அணி தனித்துவிட்டது. எதிரியோ அவர்களைச் சுற்றி வளைத்து விட்டான். இந்த இக்கட்டான நிலையிலும் இவா ஒரு கணமும் பதட்டப்படாமல் தன் 40 மில்லி மீற்றரால் அடித்து எதிரியைச் சமாளித்தபடியே தொலைத் தொடர்புக் கருவியில் கட்டளைகளை வழங்கி எம்மவர்களை ஒருங்கிணைத்து எதிரியை அவ்விடத்தில் இருந்து முற்றாகத் துரத்தி, அங்கிருந்த கட்டளை அதிகாரியோடு அணிகளையும் காப்பாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதனால் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதல் ஒன்று இவரது துணிகர செயற்பாட்டால் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது. அத்தாக்குதலை முடித்துக் கொண்டு வன்னிக்கு வந்து தலைவரின் சிறப்பான பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். ஓயாத அலைகள் - 03 இன் கட்டம் 4ற்கான திட்டமிட்ட தாக்குதல் பயிற்சிகளை உடல் இயலாத நிலையிலும் ஆர்வத்துடன் எடுத்தார். பயிற்சி முடிந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச்சண்டைக்குச் சென்றார். தரையிறங்கிய அந்நாளே நெஞ்சில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வன்னிக்கு வந்தார். எப்போது காயம் மாறுமெனக் காத்திருந்து காயம் மாறியவுடன் அதே கள முனைக்குச் சென்றார். 2000 ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோயில் முன்னணிக் காவலரண் பகுதியில் எமது அணிகளுக்கு பிரதான பொறுப்பாளராக இருந்தார். இவர் ஒருபோதும் கட்டளைப் பீடத்தில் நின்றதில்லை. அடிக்கடி காவலரண் பகுதியைச் சுற்றி வருவதோடு காவலரண் வேலைகளையும் போராளிகளோடு சேர்ந்து செய்வார். அப்பகுதியில் போராளிகள் வேவுக்குச் சென்றால் அவர்கள் திரும்பி வரும்வரையும் கண்விழித்து அவர்கள் சென்ற பாதையருகே காத்திருப்பார். அவர்கள் திரும்பி வந்ததுமே தானும் நித்திரைக்குச் செல்வார். ஓயாதஅலைகள் - 04 திட்டமிட்ட தாக்குதலுக்கான பயிற்சி நடைபெற்றது. உடற் காயங்களால் இயலாத நிலையிலும் பயிற்சி முடித்து 05.10.2000 அன்று பகல் 1.00 மணிக்கு சண்டைக்கான அணிகள் இவரின் தலைமையில் இறங்கின. இவருக்கு அடுத்த பொறுப்பாளராக உள் நுழைந்து தாக்கிய மேஜர் வேழினியின் தொடர்பை எடுக்க முடியவில்லை. அவர் எதிரிக்கு நெருக்கமான எல்லைக்குள் உக்கிரமாய் தாக்குதலைத் தொடுத்தபடியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சிறு அணி ஒன்றுடன் சாந்தகுமாரி முன்னேறினார். நாகர்கோயில் பகுதி சிறு சிறு பற்றைகளும் தென்னை, பனைகளும் இடையிடையே காணப்படுகின்ற வெட்டையான மணல் பிரதேசம் ஆகும். அப்படியான இடத்தில் எதிரியின் குண்டு மழை நடுவிலும் எமது அணிகள் விடாப்பிடியாக சமராடியபடி நகர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கணம் ஏன் வந்ததோ தெரியாது. வேழினியின் தொடர்பை எடுப்பதற்காய் சென்ற சாந்தகுமாரியை வேழினிக்காகப் பதுங்கி இருந்த எதிரியின் ரவைகள் பதம் பார்த்தன. முதலாவது வேட்டில் நெஞ்சில் காயப்பட்டு எமது பகுதியை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு, அடுத்த வேட்டும் துளைத்ததில் நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார். சாகும் வேளையிலும் கூட, "அடிச்சுக் கொண்டு இறங்குங்கோ, இறங்குங்கோ" என்று கத்தியபடி எதிரியின் பிடியில் உள்ள எமது பிரதேசத்தை மீட்கவேண்டும் என்ற ஆக்ரோசத்துடன் முன்னோக்கி ஓடியபடி செங்குருதி சிந்த எம்மண்ணில் 06.10.2000 அன்று சரிந்தார். வித்துடலை மீட்கும்போது மூடியிருந்த இவரின் இரு கைகளிலும் எமது மண் இறுகப் பற்றப்பட்டிருந்தது. மன்னார் மண்ணுக்கே உரித்தான அவரது தமிழ் இரசிக்கத்தக்கது. தலைவர் கூட அவரின் உரையாடலை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரியின் இழப்பு எம் தேசத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும். எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக்கொண்டிருக்கின்றன.
0 Comments:
Post a Comment