-->

துணை தளபதி கேணல். ரமணன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

துணைத் தளபதி கேணல். ரமணன் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு - 14.10.1965 வீரச்சாவு - 21.05.2006 பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்து வைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ. கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம். படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து, அந்தப் பாடசாலை உருவாவதற்கு அத்திவாரமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனை வருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு மைதானமும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் பரிசோதனைச் சாலையுமாக அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள். அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப் போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பாடசாலையை ஒரு உழவு இயந்திரம் நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையா விட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழவு இயந்திரத்தை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் திருப்தி தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின் புறத்தில் பதுங்கிக் கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக்குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு. உழவு இயந்திரத்தின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்து கொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் சாதாரண உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்து கொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதே போல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக் கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்து கொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழவு இயந்திரத்தைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல். தலை தெறிக்கத் தப்பி ஓடியோர் போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப் பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்து கிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன். அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் வயது அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல வருடங்களை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாக இருந்து இப்போது காவற்றுறையில் பணியாற்றுபவர். போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் அனுபவித்த வேதனைகளும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்து கொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டியவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு. நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல்களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப்பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்திரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். "ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று" என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு.


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner