பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
லெப்டினன்ட் கேணல் ஜீவன் பிள்ளையான் சந்திரமோகன் கதிரவெளி, மட்டக்களப்பு. மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும். கடந்த ஒரு சகாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம். ##### அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான். இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். சிங்கபுர விடுதிப்பகுதி சிங்களச் சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992 ஆம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத் தளபதி. இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப் படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது. எதிரியின் கவச வண்டியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் ரீ55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்ää அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். " எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூள் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல. ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, ஆர்ப்பாட்டமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன். போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாறää சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர் பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பங்கர் வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள். வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்துää பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும்ää சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. 87 இன் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90இன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது. எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு. மூன்றாம் ஈழ யுத்தம் ஆரம்பத்திற்கும் 97 இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய அனு கூலஙக்ள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது. அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக் காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக் கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை." சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான். "ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்." இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதிää தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்" அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன. தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது. "ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்." புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது. "எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்" இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான். "பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு. நீங்கள் எழும்பலாம்." இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள். ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போலää பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார். ##### ரோட்டில் ஜீவன் கம்பீரமாய் கால்பாவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது. "நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழ யுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை. ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமே காரணம். பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடபினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது. ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திரு நாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.
0 Comments:
Post a Comment