பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
கரும்புலி மேஜர் சிறீவாணி சாந்தினி சின்னத்தம்பி மட்டக்களப்பு 23.11.75 - 5.7.2000 அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது. அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எதற்காகவும் கண் கலங்குவதில்லையே. அவள் தன்னுடன் நிற்கின்ற அணிகள் செல்லும் சண்டைகள் அனைத்திற்கும் தானும் சென்றுவரவேண்டும், தன்னால் அதியுச்சமாய் தேசத்திற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவிட வேண்டும் என்ற ஆவலும் தான் நிறைந்திருந்தது. அந்த ஆவலும் சுறுசுறுப்பும் அவள் இயக்கத்தில் இணைந்த நாளிலிருந்து என்றும் குறைந்ததே இல்லை. அணிகள் வேவிற்காகவோ அல்லது தாக்குதலுக்காகவே புறப்படுகிறது என்றால் அவள் ஆவல் மேலெழ தானும் அந்தக் களங்களிற்குச் செல்லவேண்டுனெத் துடித்துக் கொண்டிருப்பாள். அவளின் இடைவெளியில்லாத வேண்டுதலினால் பொறுப்பாளர் அவளிற்கு அந்த தாக்குதலில் சந்தர்ப்பம் கொடுத்தால் அவளது முகம் அடுத்த கணமே எண்ணற்ற மகிழ்ச்சியால் மலரும். புன்னகை தவழும் முகத்தோடு மற்றவர்களிற்கும் சிரிப்பூட்டிக் கொண்டு தானும் சிரித்து கலகலப்பாக இருப்பாள். இப்படி சண்டை ஒன்றிற்குச் செல்வதற்காய் சண்டை செய்பவள்தான் ஸ்ரீவாணி. அவள் அதிக உயரம் இல்லாத தோற்றம், சிரித்து எல்லோரோடும் பழகுகின்ற சுபாவம். மற்றவர்களைப் புரிந்து கொண்டு அன்பாய்ச் சண்டை செய்வது, அவர்களைக் கோபப்படுத்தி பின்பு அன்பு வார்த்தைகளால் நெகிழச்செய்து, தாயாய் அரவணைக்கும் இயல்பு, அடிக்கடி மகிழ்வாய்க் குறும்பு சொல்லி எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்கவேண்டும் என்ற துடிப்பு எல்லாம் அவளிற்கு உரிய பண்புகள். சிரித்து கலகலப்பாய் அவள் திரிகின்ற போது மனதில் சிறுதுளிக் கவலையும் இல்லாதவளைப் போல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் அவளிற்கு மட்டுமே அடையாளம் தெரியும் சோகங்கள் எத்தனையோ..?! அவள் ஊரை விட்டு இயக்கத்திற்குப் புறப்பட்டு பத்து வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த நீண்ட கால இடைவெளியில் மீண்டும் ஒரு தடவை அவள் நேசித்த ஊரையோ வீட்டார்களையோ பார்க்க முடியவில்லை. இந்த ஏக்கம்தான் மழை விட்ட பின்னும் சூழ்ந்திருக்கும் கருமேகமாய் நினைவில் எங்கும் படர்ந்திருந்தது. என்ன செய்வது? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அவளின் ஊரும் உறவுகளும். விடுமுறையில் சென்றாலும் அவள் எப்படி அவளின் 'கழுதாவளை' கிராமத்தைச் சென்று பார்ப்பாள்? அங்கிருக்கும் உறவுகளோடு எப்படிக் கதைப்பாள்? அதுதானே பகலில் போராளிகள் நடமாட முடியாத இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமாயிருக்கிறதே. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும்... அவர்களோடு பேச வேண்டும் என்ற மனக் குமுறலோடு, அவள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடி பாசம் கொட்டி வளர்த்த ஆசைத் தம்பியைப் பார்த்துவிட வேண்டும் என்ற நினைவுகளும் நெஞ்சில் பலமாக அடித்துக் கொண்டிருந்தன. மனம் விம்மி வேதனையில் தவிக்கின்ற போது அவளுக்குள் எழுகின்ற எண்ணங்களை கடிதமாக்கி அப்பா அம்மாவிற்கு அனுப்புவதற்குக் கூட முடியாது. அவள் அனுப்புகிற கடிதங்கள் இராணுவத்திடமோ அல்லது தேசத் துரோகிகளிடமோ அகப்பட்டு விட்டால் வீடு எதிர்நோக்கும் அவல நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் மனச்சுமையை தனக்குள்ளேயே சுமந்தபடி மற்றவர்களிற்காகச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். இராணுவங்கள் செய்யும் அநீதிகளுக்குப் பயந்து இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்று நொந்து போகாமல், வேதனையத் தந்தவர்களையே வேக வைத்துவிட துடித்துக் கொண்டிருந்தாள் அந்த உன்னதமான போராளி. "வண்டு" அவளை இப்படித்தான் செல்லமாக எல்லோரும் அழைத்துக் கொள்வார்கள். அது அவளுக்கு பொருத்தமாக வைக்கப்பட்ட காரணப் பெயர். சின்ன உருவம், திருதிருவென விழித்தபடியும், சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டும் துடியாட்டமாய் திரிகின்ற அந்த குறுப்புக்காரியின் செல்லப் பெயராக அது நிலைத்துவிட்டது. இப்போதெல்லாம் அவள் ' வண்டக்கா' என்றுதான் எல்லோருக்கும் அறிமுகம். எல்லாப் போராளிகளையும் தன் சொந்தங்கள் என நினைத்துக் கொள்ளும் அவள் சண்டையில் அல்லது மற்ற எந்தச் சூழ்நிலை என்றாலும் ஒவ்வொரு போராளிகளையும் அவதானமாகவும், அன்பாகவும் பார்த்துக் கொள்வாள். அவளின் வாழ்க்கையே அதிகம் வேவு நடவடிக்கைகளிலேயே கழிந்தது. வேவு எடுக்கின்ற நாட்களிலும் அவளின் துடியாட்டத்திற்கும், கலகலப்பிற்கும் குறைவே இல்லை. இரவு வேவிற்காய்ச் செல்வதற்கு முன் ஓய்வாக கிடைக்கின்ற சிறு நேரத்திற்குள்ளும், எதிரியின் பிரதேசத்திற்குள்ளும் அருகில் இருக்கின்ற குளம் ஒன்றிற்குச் சென்று தாமரைக் கிழங்கு தோண்டிக் கொண்டு வந்து அதைச் சுட்டு எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்டு மகிழ்வதில் அவளுக்கோர் திருப்தி. தாமரைக் கிழங்கிற்காகச் சென்றால் இராணுவத்தின் பாதுங்கித் தாக்கும் அணியோ, அல்லது வேவு அணியோ அவர்களைக் கண்டு தாக்குதம் சந்தர்பங்கள் இருந்தாலும் அதை முறியடித்து அந்தக் கிழங்குகளை எடுத்து வந்து சாப்பிடுவது அவளிற்கு ஒரு சவாலைப் போல விளையாட்டாகவே நினைத்து தோழிகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்தாள். இருளே இல்லாத நிலவு நாட்களில் கூட வேவிற்காக அவள் சென்று வந்திருக்கிறாள். வேவு பார்ப்பது, பாதை எடுப்பது இப்படி எதுவென்றாலும் அவளும் அந்தப் பணிகளில் ஒருத்தியாக முன்னிற்பாள். சரியான துணிச்சல்க்காரி. எல்லாவற்றையும் விட அவளுக்குள்ளேயே குமுறுகின்ற தேசப்பற்று, அதை விரைவாக வென்றுவிட வேண்டும் என்கின்ற ஆர்வம், நினைத்ததை உறுதியாக செயற்படுத்தி விட வெண்டும் என்கிற தீவிர எண்ணம் எல்லாம்தான் அவளை அவளின் பக்கத்தில் வேகமாகிக் கொண்டிருக்கிறது. மட்டக்களப்பிலிருந்து தாக்குதல் அணிகள் யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தப்பட்டபோது இவள் வேவு அணியோடு இணைந்தே வந்திருந்தாள். மட்டக்களப்பின் காட்டுப்பாதைகள் வழி எம் - 70 துப்பாக்கியைத் தோளிலே சுமந்தபடி அலைந்து திரிந்த அவளது பாதங்கள் பல களத்தில் கலந்து கொண்ட அவளின் கால்கள் யாழ். களமுனைகளிலும் நடந்தன. யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்த ஆரம்ப நாட்களிலேயேதான் அவள் கரும்புலியாக வேண்டு என்ற விருப்பத்தை தலைவருக்குத் தெரிவித்தாள். ஒருநாள்..... இவள் நிற்கின்ற முகாமிலே அணிகள் ஒன்றானபோது சிறு பிரிவாய் இன்னுமொரு அணியும் ஒன்றாகி இருந்தது. "வண்டு" அருகில் நிற்பவர்களிடம் இரகசியமாக கேட்டு அவர்கள் எந்த அணியினரென தெரிந்து கொண்டாள். அவர்கள்தான் கரும்புலி அணிக்குத் தெரிவாகி இருப்பவர்கள் என்று அறிந்ததும் உடனேயே அந்த அணியோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சிற்குள் நெடுநாளாய்ப் பூட்டி வைத்திருக்கும் இலட்சியம் அதுதானே... ஆனால், அவளது வேண்டுதல்களை அப்போது யாரும் ஆதரிக்கவில்லை. மிகச் சிறிய தோற்றம். சண்டைகளில் முதிர்ச்சி பெறாத நிலை இப்படி எவ்வளவோ காரணங்களைக் கூறினாலும் அவள் கேட்பதாக இல்லை. "கரும்புலியாய்ப் போய் நிறையச் சாதனைகள் செய்யவேணும்" இந்த உறுதியில் சிறிதும் குறையாது இருந்தாள். அன்றில் இருந்து தலைவரின் அனுமதியைப் பெற்று ஆரம்பமான அவளின் கரும்புலியான பணிகள் பல களங்களிலும் தொடர்ந்தன. அனைத்து ஆயுதங்களையும் சிறப்பான முறையில் கையாளக் கூடியவளும் சிறந்த நீச்சல்காரியாகவும் திகழ்ந்த ஸ்ரீவாணி அதிகமான களங்களிற்கு 'லோ' வுடனேயே சென்று வந்தாள். "நான் எல்லாப் பொசிசனில் இருந்தும் 'லோ' வால அடிச்சிட்டன்" இப்படிக் கூறினாலும் அவளும் அந்த ஆயுதமும் நிறைய தேசத்திற்கு செய்து காட்டவேண்டும் என்ற இலட்சிய வேட்கை அவள் வார்ததைகளில் யாருக்கும் தெரியாமல் மெல்லியதாய் இழையோடும். கரும்புலியாய் இணைந்து இலக்குத் தேடி அலைந்த நாட்களில் ஆனையிறவு தளத்தினுள் இலக்கிற்காக வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாள். மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைக்கேணி இராணுவ முன்னரங்க நிலைகளை ஊடுருவி மணல் பிரதேசத்திலும் கால்தடம் படாது நடந்து சென்று, சின்னச் சின்ன நாவல் மரங்களையும் கன்னாப் பற்றைகளையும் மறைப்பாக்கி மணல் திட்டுக்களில் மறைவாகத் தங்கியிருந்து, கொண்டு சென்ற சிறிதளவு தண்ணீரையே கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்து, நாக்கு நனைத்து உலர் உணவுப் பைகளோடே ஐந்தாறு நாட்களின் பசிப் பொழுதுகளைப் போக்கி, இராணுவ முகாமிற்குள்ளேயே இநருந்து வேவுத் தகவல்களைத் திரட்டி மீளுகின்ற சிரமமான பணியது. ஸ்ரீவாணிக்கு அந்தப் பணியே நன்கு பிடித்திருந்தது. மண்ணிற்காகச் சுமந்து கொள்கின்ற ஒவ்வொரு துன்பங்களும் இன்பமானவைகள் தானே... சுமைகளைச் சுகமாக நிதை;த பின் சுமப்பது அவளிற்கு சிரமமானதாக இருக்கவில்லை. அந்த ஆனையிறவின் வேவிற்காக அலைந்த நாட்களில் ஒரு நாள் முன்னரங்குகளால் ஊடுருவி உள்நுளைந்த போது எதிரி விழிப்படைந்து விட்டான். அவர்கள் முன்னணி நிலைகளிலிருந்து, சில காலடி து}ரம் நடந்திருப்பார்கள் காவலரண்களில் இருந்து செறிவான சூடுகள் அவர்களை நோக்கி வந்தன. நிதானித்து எதிர்ச் சூடுகளை வழங்கி நிலைமைக்கு ஏற்றவாறு நிலையெடுத்துக் கொள்ள நேர அவகாசம் இருக்கவில்லை. எதிர்பாராத இந்தக் தாக்குதலினால் அணி நிலை குலைந்து போயிருந்தது. தாக்குதலின் எதிர்ச் சூடுகளை வழங்கிய படி இவளும் இன்னும் இரு போராளிகளும் சற்றத் து}ரம் தள்ளி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒரு தோழிக்கு காலில் ரவை பட்டிருந்தது. அவளால் காலை எடுத்து வைக்கவோ அசைக்கவே முடியாது இருந்தது. பல தடவை முயற்சி செய்து பார்த்தாள். அதுவும் பலனளிக்கவில்லை. இந்தக் களச் சூழலில் அணியின் மற்றவர்களைத் தேடுவதற்கும் எதிரியின் நிலைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கண்டறிவதற்கும் ஸ்ரீவாணி தனித்து ஒருத்தியாகவே செயற்படவேண்டியிருந்தது. எந்தவித தயக்கமும் இல்லாது கடும் சிக்கல் நிறைந்த இராணுவப் பிரதேசத்தினுள் தன் தேடுதலை நடாத்தி இன்னுமொரு போராளியையும் கண்டு கொண்டாள். அதன் பின்னும், அங்கே நிற்பவர்கள் ஒவ்வொருவரினதும் செயற்பாடும் மிக முக்கியமானதாய் இருந்தது. இராணுவப் பிரதேசத்தைக் கடந்து விழுப்புண் பட்ட போராளியை கவனமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். ரவை பட்ட காலில் பெரிதான சிதைவை ஏற்படுத்தி இருந்தது. எலும்பை உடைத்து தசைகள் வெளியே தெரிய இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் அந்தப் புண்ணுடன் எழுந்து நடக்க முடியாது தவழ்ந்து செல்வதென்றாலும் தவழ்கின்ற போது காயப்பட்ட இந்தக் காலை வெப்பில் கொடிகள் பிய்த்திழுக்கும். தடிக்குச்சிகளும் மண்ணும் காயத்தோடு உரசி வேதனையை இன்னும் அதிகமாக்கும். ஒவ்வொரு தடவையும் காயம் பட்ட அந்தப் போராளி தவழ்கின்ற போதும் அவளுடன் வர மறுக்கின்ற காலை கையால் இழுத்தபடி நகரும் அந்தப் போராளியின் நிலை வேதனையாய் இருந்தது. ஸ்ரீவாணி அந்தப் போராளிக்காக தானும் அந்தப் போராளியைப் போலவே தவழ்ந்து வந்தாள். தோழியின் கால் சிக்குப்படுகின்ற நேரங்களில் அவற்றில் நோவேற்படாது பக்குவமாய்த் து}க்கி விட்டபடி தொடர்ந்தாள். காயப்பட்ட போராளியின் ஆயுதமும் வேறு பொருட்களும் சேர்த்து ஸ்ரீவாணிக்கு பாரம் அதிகமானாலும் அவள் மற்றவர்களுக்காக உதவுகின்ற செய்கையிலிருந்து தளரவில்லை. அந்த மணற் பிரதேசத்தில் அவ்வளவு அவ்வளவு பொருட்களோடும் காயபட்ட தோழிக்காகத் தவழ்ந்து வருவது சுலபமானதாக இருக்கவில்லை. பெருங்கடலில் இறங்கி நடக்கத் தொடங்கிய போது இவளின் குறைந்த உயரம் இடையிடையே தண்ணீரில் மூழ்கி எழத்தான் செய்தது. இரவிரவாக தண்ணீருக்குள்ளால் நகர்ந்து கரையை வந்தடைந்த போது காயப்பட்ட போராளி நினைவிழந்து இருந்தாள். எல்லோரதும் விறைத்த உடல்கள் குளிர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் அவர்கள் போய்ச்சேர வேண்டிய தூரமோ அதிகமாய் இருந்தது. காயப்பட்ட போராளிக்கு முதலுதவி செய்ய வேண்டும். நிலைமையை உடன் கட்டளை மையத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். தொலைத் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைத் தொடர்பு சாதனம் தண்ணீர் பட்டதால் செயலற்றுப் போயிருந்தது. ஆனால் இன்னும் சில மணித்துளிகளில் விரைவாகச் செயற்படாவிட்டால் சக தோழியின் நிலை ஆபத்தாகிவிடும் என்பதை அந்தச் சூழல் தெளிவு படுத்திக் கொண்டிருந்தது. இந்தத் தகவல்களைச் சொல்லி உடனே முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நீண்ட தூ}ரம் பயணிக்க வேண்டியிருந்தது. இத்தனை உடற் சோர்வுகளோடும் ஸ்ரீவாணிதான் அந்த நீண்ட து}ரத்தை விரைவாய் ஓடிச் சென்றடைந்து நிலைமையைச் சொல்லி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து உரிய நேரத்தில் உதவினாள். இப்படி எந்த நேரத்திலும் சோராதவள், எவ்வளவு இறுக்கத்திலும் சளைக்காதவள், தேச விடுதலையென்ற ஒன்றையே மூலதனமாக்கி இயங்கிக் கொண்டிருப்பவள், மற்றவர்களின் துன்பங்களுக்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் காரணங்களைத் தீர்ப்பதற்கு உழைத்துக் கொண்டிருப்பவள், அதனால்தானே தனக்கு எவ்வளவு வேதனைகள் இருந்தாலும் மற்றவர்களின் வேதனைகளை, துன்பங்கைளப் போக்குவதற்கு போரை விரைவாய் முடித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாள். ஆனையிறவுக் களத்திற்கு அவளோடு களமாடச் சென்றவர்கள் திரும்பவில்லை என்ற ஏக்கம் நெடுநாளாய் நெஞ்சுக்குள் உறங்காமல் இருந்தது. அவர்களைப் பிரிந்து அவள் சாதனை புரிந்து விட்டு வந்திருந்த நாட்களில் அவளின் முகத்தில் மலர்ச்சியே இருக்கவில்லை. சோகம் சூழ்ந்து வாடிப்பொய் இருக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பூப்பறித்து வந்து மாலை தொடுத்து அவர்களுக்குச் சூட்டிய பின்னர்தான் வழமையான பயிற்சிப் பணிகளில் ஈடுபடுவாள். பலவர்ணப் பூக்களிலும் மாலை மிக அழகாகக் கட்டுவாள், தன் கூடவே இருக்கின்ற போராளிகளுக்கும் மாலை கட்டப் பழக்குவாள். (இப்போது அவள் மாலை கட்டப் பழக்கிய தோழிகள் அவளின் திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டுகின்றனர்.) அந்த தோழிகளின் நினைவினிலேயே மூழ்கியிருப்பவள் நெஞ்சுக்குள் விடுதலைக் கனவின் கனதி இன்னும் அதிகமானது. அவள் நினைத்து வந்த இலட்சியத்திற்காக உழைக்க வேண்டும். கூடவே அவளோடு களமாடிப் போனவர்களின் விடுதலைக் கனவையும் சுமக்க வேண்டும். அதற்காக தான் ஒவ்வொரு சண்டைகளிலும் தவறாது பங்கெடுத்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வாள். ஸ்ரீவாணி கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்வதற்கு முன்னும் கரும்புலிகள் அணியில் இணைந்து செயற்படத் தொடங்கிய நாட்களிலும் அவள் பல சண்டைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியுள்ளாள். அவள் கரும்புலியாகக் கலந்து கொண்ட இறுதித் தாக்குதல் பளை ஆட்டிலறித் தளங்கள் மீதான கரும்புலித் தாக்குதலாகும். பதினொரு ஆட்டிலறிகளைத் தகர்த்து புதியதொரு பரிமாணத்தை ஓயாத அலைகள் - 3 காலப்பகுதியில் ஏற்படுத்திய கரும்புலிகள் அணியில் ஸ்ரீவாணியும் ஒருத்தி. அவள் அந்தத் தாக்குதலுக்கு "லோ" வோடுதான் சென்றிருந்தாள். அணிகள் வேகமாக அந்தத் தளப்பிரதேசத்திற்குள் நுழைவதற்கு இவளின் இலக்குத் தவறாத சூடு மிக முக்கியமானது. கரும்புலி மேஜர் சுதாஜினி இக் களத்தில் வீரச்சாவடைய அவளது பணியை இவளே ஏற்றுத் தொடர்ந்தாள். முதல் பெண் தரைக் கரும்புலி வீரச்சாவடைந்த தாண்டிக்குளச் சண்டை தொடக்கம் கரும்புலிகள் அணி கலந்து கொண்ட அதிகமான தாக்குதல்களில் இவளும் பங்கெடுத்திருக்கிறாள். ஆனால், இந்தக் களத்தில்;தான் களம் ஏற்படுத்திய வீரவடுவாக வெடியதிர்வுகள் பாரிய உடற்தாக்கத்தை விளைவித்திருந்தது. காதுகளிற்குள்ளிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடல் தனது இயல்பான சமநிலையை இழந்திருந்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஸ்ரீவாணி தொடர்ந்தும் தன் பணிகளில் விரைவானபடியே இருந்தாள். தனது இருபத்தைந்து வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்ககையை போராட்டத்தில் கழித்தவள், அவளிற்கு இந்தக் களச் சூழல் புதிதாக இருக்கவில்லை, களத்தில் ஒவ்வொரு அங்குலத்தையும் நுட்பமாக அறிந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு களங்களிலும் அவள் சென்று வருகின்ற போது வீரத்தின் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறந்துவிட்டே வந்தாள். அவளது வாழ்க்கையில் ஐந்து வருடங்களைக் கரும்புலியாய்க் கடந்தவள், நீண்ட நாட்களாக அவளின் (கரும்புலிக்கான) இலக்கிற்கான காத்திருப்பு, அதற்காக அவள் பெற்றுக் கொண்டிருந்த கடுமையான பயிற்சிகள் எல்லாமே அவளிற்குள் இந்த வைரமான உறுதியை வெளிக்காட்டின. "நிறையச் செய்ய வேணும், தேசம் எதிர்பார்ப்பது போல சாதிக்க வேணும். அதற்குப் பிறகுதான் கதைக்கவேணும்" இதுதான் அவள் தனது அடக்கமான வீரத்திற்கு கூறுகின்ற முன்னுரைகள், அவள் தன்னைப்பற்றி தான் சென்ற தாக்குதல்கள் பற்றி யாரோடும் பேசியதில்லை. தன் கூட இந்தவர்களைப் பற்றியே எப்போதும் போசிக் கொள்வாள். ஓயாமல் வீசிக் கொண்டிருந்த இந்தப் புயல் ஓய்ந்துவிடப் போகின்றதை யாருமே எதிர்பார்த்திராத அந்த நாள். வழமைபோல முகமலர்ச்சியோடு கறுப்பு வரிச் சீருடையோடு எல்லாத் தோழிகளுடனும் சிரித்துக் கலகலத்த படி இருக்கிறாள். 05. 07.2000 அன்று கரும்புலிகள் நாளல்லவா.. .? கூட இருந்தவர்களை நினைத்து அஞ்சலிப்தற்காய் அந்த மைதானத்தில் கூடியிருந்தார்கள். நிகழ்வோடு ஒன்றாய் எல்லோரையும் போலவே அவளும் மெய்சிலிர்த்துப் போயிருந்தாள். அந்தக் கணத்தில்தான் எதிர்பாராத விபத்து அங்கே நிகழ்ந்து விடுகிறது. சாதாரண காயம் என்றுதான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவளிற்குத் தெரியும்... நெஞ்சில் ஆழமாய் பதிந்து விட்ட காயமென்று. தன் சாவின் விளிம்பைத் தெரிந்து கொண்டும் சாதிக்கத் துடிக்கின்ற கரும்புலியல்லவா அவள். சாவு நெருங்கி விட்டது, அவள் நினைத்தது போல களத்தில் சாதிக்கவில்லையே... களத்திலேயே தன்சாவு வரவில்லையே... என்ற ஏக்கம் முகத்தில் வாட்டமாய் இருந்தது. விழிகள் எதையோ ஆர்வமாகத் தேடின. அவள் அருகில் நின்ற தோழியிடம் சத்தமற்ற குரலில் "அண்ணாட்டச் சொல்லுங்கோ நான் பொய்சன் எடுத்துக் கிடந்துதான் காயப்பட்டனான் என்று..." அந்த இறுதிக் கணத்திலும் தலைவரிற்கு இறுதியாக இந்தச் செய்தியைத்தான் சொல்லி விட்டாள். காயப்பட்டதிலிருந்து அவள் மூச்சு வாழ்ந்த ஒரு சில மணி நேரத்திற்குள் அவள் திரும்பத் திரும்ப உச்சரித்த வார்த்தைகள் இரண்டு, ஒன்று அவள் இதயம் முழுவதும் சுமக்கின்ற தலைவனை, மற்றது அவள் பார்க்கத் துடித்த ஆசைத் தம்பியை. தேசத்தின் வடிவாய் தலைவனை நினைத்தாள். தலைவனின் முகத்தில் தேசத்தைப் பார்த்தாள்
0 Comments:
Post a Comment