-->

போராளி. சுயந்தன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

போராளி சுயந்தன் 09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்து கொண்டிருந்தனர்.அது ஒரு நீண்ட நகர்வு. விடுதலைப் புலிகளின் போரியல் வரலயாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காகச் சண்டையை எதிர்பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத் தக்கது. எங்காவது எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்து கொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிர்களும் கேள்விக் குறியாகிவிடும. அங்கே நகர்ந்து கொண்டிருந்த அணிகளிற் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓர் அணியும் அடங்கியிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுக்குரியது. அவர்களின் அன்றைய சிக்கலான பணியில் எமக்குக் கிடைக்கப் போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கி நிற்கிறது. சண்டை தொடங்கி விட்டது. சார்ள்ஸ் அன்ரனி படையணியும் அவர்களுக்குரிய பாதை வழியாகச் சண்டையைத் தொடங்கியது. முட்கம்பி வேலிகளை „ டோப்பிட்டோ “ குண்டுகள் தகர்க்க, அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத் துப்பாக்கிகள் அவர்களை நோக்கிச் சடசடக்க அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனை அவர்களுக்குத் தெரிந்தது. ஆம் எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளை விட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள் தடையை எதிரி அமைத்திருந்தான். ஓவ்வொரு நொடியும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையைத் தகர்த்து உள்நுளையா விட்டால் எதிரி தன்னைத் தயார்படுத்தக் கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமற்கூட போய்விடும். புதிதாகத் தடையை உடைக்க „ டோப்பிட்டோ “ வும் கைவசம் இல்லை. மாற்று வழிகளைப் பரிசீலிக்கக் கூட நேரம் இல்லாத ஓர் இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச் சென்ற போராளி சுயந்தன் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவை பட்டு வீழ்ந்து விட்டான். எதிரி, அந்த இடத்தில் முட்கம்பிகளை வெட்டப் படாமல் இருப்பதையும் நாம் அதை வெட்ட முயல்வதையும் கண்டு விட்டான். அவன் தன் முழுச் சூட்டு வலுவையும் இப்போது அங்கே மையங் கொள்ள வைத்தான். அது வார்த்தைகளின் வர்ணணைக்கு அப்பாற்பட்ட இறுக்கமான சூழல். அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் அணி தடையை உடைக்க முடியாமல் நிற்க, தனியொருவனாகச் சுயாந்தன் நிலைமையை மாற்றி அமைத்தான். அந்தத் தடையை அகற்ற வேண்டிய தேவையை அவன் உணர்ந்தான். அன்றைய சண்டையின் முடிவு கண்களிற் பட சுயந்தன் உறுதியான முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட்கம்பிச் சுருளின் மீது பாய்ந்தான், நசுங்கிய கம்பியின் மேல் அவன் கிடக்க, அவன் அமைத்துத் தந்த உயிர்த்துடிப்பான பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள். அவனது அணி, கொடுக்கப்பட்ட எதிரிப் பகுதியைப் பிடித்துக் கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழ வேண்டியவர்களாய் இருந்த அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக் கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக் கணக்கான எதிரிகளை வீழ்த்தினர். எதிரியின் பீரங்கிகளை அழித்தனர். அந்த வெற்றிக்கு வழியமைப்பதற்காகத் தன் உடலால் வழி சமைத்தவன் சுயந்தன். உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் வேதனையால் துடிக்க அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு தான் நேசித்த மக்களின் வாழ்விற்காக முட்கம்பித் தடையின் மீது பாய்ந்து தன் தோழர்களுக்கு வழி சமைத்துக் கொடுத்த அவனது வீரம். தலைவரவர்களின் „ எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது “ என்ற கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன் பின் „ ஜயசிக்குறுய் “ சமரில் வித்தாகிப் போனான். இவன்போன்ற போராளிகளின் தியாகங்களே இன்றும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner