பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
லெப்.கேணல் கிறேசி கணபதிப்பிள்ளை கோபாலபிள்ளை இல.187, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி 19.08.1960 - 19.04.1991 மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். களமுனைகளில் தொடர்ச்சியாக ஓய்வு ள் ஒளிச்சலின்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மைந்தன் அவர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணுhறுகளின் ஆரம்பம் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப். கேணல் கிறேசி வகித்துள்ளார். 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் வட மராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன் பின்னர் லெப். கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்திய இராணுவக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லாமூலையிலும் இந்திய இராணுவம் தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர். களமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் இராணுவமும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம். தனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது. இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ் வேளையில் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார். 19.04.1991 அன்று மன்னர் பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிங்கள இராணுவம் முன்னேற முற்பட்டது. சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம்தானும் பறி போய்விடக்கூடாது என்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டி ருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார். 1990.05.25 ஆம் திகதி லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஒரு வருடம்கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப். கேணல் கிறேசி. இவர் அணையாத தீபமாகிய பத்தாம் ஆண்டு நினைவில் நினைந்துறைவோம்.
0 Comments:
Post a Comment