-->

கப்டன். அறிவு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கப்டன் அறிவு தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது. எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக் கிராமம். வவுனியாவிலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்து முன்னேறும் இராணுவத்தைப் புளியங்குளம் வரை கட்டம் கட்டமாகத் தடுத்துத் தாமதப் படுத்துவதே திட்டம். முன்னேறும் இராணுவத்தைத் தாக்கிக் தடுத்துத் தேவையான போது நகர விட்டு, மீண்டும் தாக்கி, புளியங்குளத்தில் அமைக்கப்பட்ட „ கொலைப் பொறி “ வரை கவர்வதற்காகத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 06.06.1997 , விளக்குவைத்தகுளம் முன்னரங்க நிலைகளிற் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் நின்றார்கள். அதிகாலை முதல் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சத்தம் மெல்ல மெல்ல அவர்களை நோக்கி நகர்வதாகத் தெரிந்தது „ மச்சான், டாங்கி சத்தம் போல கிடக்குது “ அவர்களில் ஒருவன் காவலரன் ஒன்றின் மேல் ஏறி நின்று அவதானித்து விட்டுச் சொன்னான். „ இண்டைக்குத் திருவிழாப் போல இருக்கது “ அவர்கள் தங்களுக்குட் கதைத்துக் கொண்டார்கள். “ டேய் வந்தா வரட்டும். எங்கட பொசிசனைக் கடந்து போறதை ஒருக்காப் பாப்போம்! “ இப்படித்தான் எப்பவுமே அவர்கள் கதைத்துக் கொள்வார்கள். இன்றும் அதே போலவே கதைத்தவாறு காலைக் காவலுக்கான ஒழுங்குகளில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் எதிர்பார்த்த „ திருவிழா “ விரைவிலேயே தொடங்கி விட்டது. எதிரி ஏவிய பீரங்கிக் குண்டுகள் அவர்களின் முன்னரங்க நிலைகளைச் சுற்றி வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. இதுவரை தூரத்தே கேட்ட இயந்திரங்களின் உறுமல் ஓசை அவர்களிருந்த திசையில் நெருங்கத் தொடங்கியது. முறிந்து விழுந்த காட்டு மரங்களினூடக வெடித்துச் சிதறிய எறிகணைகளின் கந்தகப்புகை பரவிக் கொண்டிருந்தது. அறிவு அவன்தான் காவலரண் துவாரத்தினூடாகத் தூரத்தே தெரிந்த கரிய உருவத்தை முதலில் அவதானித்தான். டாங்கி! அவனுடைய நிலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. சண்டையின் தீவிரம் சற்றுக் கடுமையாவது தெரிந்தது. தோழர்கள் தமது துப்பாக்கிளினால் எதிரிமீது சுடத் தொடங்கினர். சண்டை உக்கிரமானது. கனரக ஆயுதங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களும் இல்லை. இலகு இயந்திரத் துப்பாக்கிகளாற் சுடப்பட்ட ரவைகள் வெறுமென டாங்களியிற் பட்டுத் தெறித்து விழுந்தன. முன்னரங்கில் இருந்த எமது நிலைகள் ஒவ்வொன்றாய் எதிரியாற் சிதைக்கப்பட்டன. வீரர்கள் வீழ்ந்து கொண்டிருந்தனர். டாங்கி ஏவிய ஓர் எறிகணை அறிவினுடைய தோழர்களை வீழ்த்தியது. சிதைந்த நிலைகளிலிருந்து சென்று கொண்டிருந்த இறுதி எதிர்ப்புகளும் குறைந்து கொண்டிருந்தன.எதிரி உற்சாகமடைந்தான். வேகமாக டாங்கியை நகர்த்தினான். அறிவினுடைய சிதைந்த காவலரணில் வீரச் சாவடைந்திருந்த தோழர்களின் வித்துடல்களும் ரவை முடிந்துவிட்ட துப்பாக்கிளும் மட்டுமே இப்போது இருந்தன. அந்தக் காவலரண் வரிசையில் அவன் மட்டுமே தனிததிருந்தான். எதிரியின் நகர்வைத் தடுத்தேயாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. முறியடிப்பு அணிகள் அங்கே வரும் வரை இராணுவத்தின் குறைந்த பட்சம் தாமதப் படுத்த வேண்டிய நிலையை அவன் உணர்ந்தான். கைவசம் இருந்த குண்டுகள் இரண்டுடன் சிதைந்த நிலையை விட்டு வெளியே வந்தான். அவனது நிலையை நோக்கி வந்த டாங்கி இப்போது மிகவும் நெருங்கி விட்டது. அறிவு எறிந்த முதலாவது குண்டு டாங்கியின் முன்னால் வெடித்துச் சிதறியது. டாங்கி அதிர்ந்து நின்றது. ஆனால் விரைவிலேயே அதன் சக்கரங்கள் மீண்டும் உருளத் தொடங்கின. இறுதியாக அவனிடம் இருந்ததோ ஒரேயொரு கைக்குண்டு. அவனுக்கிருந்த கடைசித் தெரிவு டாங்கியை மிக நெருங்கிக் குண்டை எறிவது, அல்லது சொற்ப கணத்தில் இடித்துச் சிதைக்கப் பட்ட இருந்த நிலையின் அருகிலிருந்து பின்வாங்கிச் செல்வது. இறுதி முயற்சி எமது மரபுக்கேயுரிய தெரிவு. டாங்கி அவனது காவலரணை முட்டி மோத இருந்த கடைசிக் கணத்தில் தன்னிடமிருந்த கையெறிக் குண்டை வெடிக்க வைத்தான். தனது சாவிற்கான முடிவு அவனுக்குத் தெரிந்தேயிருந்தது. எனினும் அவன் கோழையாகிப் போக விரும்பவில்லை. டாங்கியின் சக்கரங்களாற் சிதைக்கப் பட்ட அவனது வித்துடல் அவன் நேசித்த மண்மீது கிடந்தது. இறுதிவரை அவனிடம் இருந்த துணிவு வரலாற்றில் அவனை உயர்த்தி நிற்கின்றது.


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner