பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
லெப்டினன்ட் சீலன் லெப்.சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை) வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983 ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது. தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார். 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை. அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன். 1982 இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது. 1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ. தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது. 1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர். 1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது. 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார். திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர். லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றும் வீறுநடை
0 Comments:
Post a Comment