-->

கரும்புலிகள் வரலாறு <ஜுலை.05>

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற


ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது. வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது. கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார். இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான். இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990 ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற ' எடித்தரர்" என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது. இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ. என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989 ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார். இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984 ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987 அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார். இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார். இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19 ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள். 18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18 மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே. ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது. விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000. 04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25. 04.2001 இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அதனைக்கூட நிராகரித்துவிட்டு மஹிந்தராஐபக்ச போர் புரிகிறார். இதன்நடுவே இந்தப் போரை தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்ச்சியை முறியடிக்க தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை போராளிகள் வழங்கி வருகின்றனர். இந்த வீரர்களின் இலட்சியக்கனவு ஒருநாள் நிறைவேறும். இந்நேரத்தில் கடந்த ஆண்டில் அனுராதபுர கூட்டுப்படைத்தள தாக்குதலில் 23 கரும்புலிகள் செப்டெம்பரில் வவுனியா படைமுகாம் தாக்குதலின் 10கரும்புலிகளும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இப்போதும் எம்மனதில் நிற்கிறார்கள். இந்த வேளையில் போரின் அனைத்து வழிகளிலும் நம்முடன் நின்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனும், பிரிகேடியர் பால்ராஐ்சுக்கும் இந்தப் போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் இந்த மாவீரர்கள் நாளில் எங்கள் வீரவணக்கத்தை வழங்கி நிற்போம். இந்தத் தேசம் விடியும் என்ற கனவுடன் சென்ற அந்த மாவீரர்களின் இலட்சியத்தைப் பின்தொடர்வோம். - கலியுகன்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner