பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
மன்னாரில் இருந்து மீண்ட சங்கிலி ஒரு ஓய்வு நேரத்தில் வீரமாப்பாணனுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றான். “அரசே! நீங்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றை மறந்து விட்டீர்கள். இராஜாங்க காரியங்களிலேயே ஈடுபடுகிறீர்கள்” என நகைத்தான். அவன் என்ன கூறுகின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சங்கிலி “அப்படியில்லையடா! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவள் நினைவாகத் தான் இருக்கின்றேன். அரச காரியங்கள் அவளை என்னிடம் இருந்து பிரிக்கின்றன. இந்த அரசுப் பொறுப்பை ஏன் ஏற்றேன்? என இப்பொழுது மனம் நினைக்கின்றது” என்று கூறினான். “அரசே! இப்பொழுது தான் உங்களுக்கு நல்லது. அரசன் ஆனபடியால் யாரையும் எங்கும் நீங்கள் சந்திக்கலாம். புறப்படுங்கள் போவோம். எனக்கும் கடற்கரையில் நீந்த வேண்டும் போல் இருக்கின்றது. இருவர் ஆசையும் நிறைவேறும் வாருங்கள்” எனத் துரிதப்படுத்தினான். சோழியர்புரத்திலே அப்பாமுதலியின் வீட்டில் வடிவழகியும் செங்கமலமும் உட்கார்ந்து அளவளாவுகின்றனர். “ஏன்டி வடிவு! வீட்டை அப்பா, அம்மா இல்லையா?” “ இல்லையடி அவர்கள் அரண்மனைக்கு சென்றவர்கள் இரண்டு நாட்களாகியும் வரவேயில்லை” என்று அலுத்துக் கொண்டாள். தோழியின் மனநிலையைப் புரிந்த செங்கமலம் “ பெற்றோரை மட்டும் தான் காணவில்லையா? அல்லது உற்றோரையுமா?....” இழுத்தாள். அவள் என்ன குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்த வடிவழகியின் முகம் குங்குமச் சிவப்பானது. வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள். “அட! வெட்கத்தைப் பாரேன். பூப்படைந்த போது கூட நீ இப்படித் தலை குனியவில்லை.” எனக் கிண்டலடித்தாள். “அது கிடக்கட்டும் மன்னர் கடைசியாக எப்பொழுது உன்னைக் கண்டார்” செங்கமலம் கேட்டாள். “ அவர் மன்னராவதற்கு முன்னால்” என ஒரு ஏக்கப் பெருமூச்சை விட்டாள். “அது தானே! அவக்கு நிறைய ராஜ காரியங்கள் இருக்கும், உன்னை நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறாரா? இப்ப எந்த மயிலுடன் நடனமாடுகிறாரோ” என செங்கமலம் சீண்டினாள். இந்தச் சம்பாசனையை அறவே ரசிக்காத வடிவழகி கோபத்துடன் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டாள். “அட! மகாராணிக்கு கோபத்தைப் பாரேன். நான் விளையாட்டாக கூறினேன். நீ உண்மை என நம்பிவிட்டாயா?” என வினவினாள். “அவர் அப்படிப்பட்டவர் அல்ல” எனக் கூறினாள் வடிவு. “ஏய்! நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவர் அல்ல, திருமணத்திற்கு முன் உன்னைக் காணாமல் விட்டு விட்டாரே என்றுதான் கவலையாக இருக்கின்றது. ஆனால் உன்னைக் கண்ட பின் வேறு எந்தப் பெண்களையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டர். இது அவர் முகத்திலேயே தெரிகின்றது. நீ பயப்படாமல் இரு! அவர் நிச்சயமாக உன்னைச் சந்திக்க வருவார்” என செங்கமலம் தைரியம் கூறினாள். அந்தவேளை வீட்டு வாசலிலே குதிரைக் காலடி ஓசை கேட்டது. நிமிர்ந்து பார்த்த இரு பெண்களும் ஆச்சரியப் பட்டார்கள். வாயிலில் சங்கிலி அரசன் நின்றிருந்தான். இதைக் கண்டவுடன் செங்கமலம் எழுந்து பின்பக்கமாக ஓடி விட்டாள். என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குமுக்காடிப் போன வடிவழகி எழுந்து வீட்டினுள் சென்று கதைவைச் சாத்திக் கொண்டாள். வாசற்கதவைத் திறந்து கொண்டு உட்சென்ற சங்கிலி வடிவழகியைத் தேடிய போது உள் அறைக்கதவு ஒன்று சற்றத் திறந்திருந்தது. மஞ்சத்தில் தேவேந்திரச் சிற்பி செதுக்கிய சிலையென வடிவழகி ஒருக்களித்துப் படுத்திருந்தாள். மொகலாயர் காலத்தில் பிரசித்தி பெற்ற லஸ்தர் விளக்கு ஒன்றின் மங்கலான வெளிச்சம் அந்த அறையின் மூலையில் இருந்து அவள் மேல் லேசாக விழுந்தது. அவள் உடுத்தியிருந்த சேலை கூட விலகாமல் அவள் உடல் பூராவையும் நன்றாக மறைத்தே நின்றது. அவள் சுந்தர வதனத்தில் இருந்த தெய்வீக அழகில் ஈடுபட்டு சங்கிலி சிறிது நேரம் நின்றான். அவள் முகத்தில் பல உணர்ச்சிகள் வந்து பிரதிபலித்தன. புருவங்கள் நானேற்றும் வில்லைப்போல் நன்றாக ஒருமுறை வளைந்து நெருங்கின. அவற்றைத் தொடர்ந்து திலகப்பிரதேசம் சிறிது சுளித்தது. துக்கம் நிறைந்த முகத்தில் அடுத்தபடியாக மகிழ்ச்சிக் குறி படர்ந்தது. இதழ்கள் மந்தகாசத்தால் விரிந்தன. தேகம் பூராவும் சந்தோசத்தின் ஆனந்தச் சாயல்! கன்னங்களில் இரு ரோஜா மலர்கள் வெட்கமளித்தன. இவற்றை அவதானித்த சங்கிலி “பாரேன் நான் வந்தது கூடத் தெரியாமல் படுத்திருக்கிறாள். இவளுக்கு இவ்வளவு வெட்கமா?” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவள் படுத்திருந்த பஞ்சனையை அணுகி ஓர் ஓரத்தில் இருந்தான். மெல்ல தன் ஒரு கையை அவள் தோள் மீது வைத்து “வடிவழகி …” என அழைத்தான். பதிலுக்கு “ உம்….” என்ற ஒற்றைச் சொல்லே அவள் வாயிலிருந்து வெளிவந்தது. மெல்ல தன் தலையைக் குனிந்து அவள் கன்னத்தில் உதட்டைப் பதித்தான். அவனது ஒரு கை அவள் இடையில் தவழ்ந்தது. அவள் மார்போ பயத்தால் மிக வேகமாக எழுந்து தாழ்ந்தது. அப்படியே அவளை வாரி அணைத்துக் கொண்டான். மஞ்சம் சிருஷ்டித்த மணவறையிலே மகிழ்ந்து இணைந்து விட்ட காதலர்கள் இருவரும் மறுநாள் வௌ;வேறு அலுவல்களில் ஈடுபட்டாலும் அவ்விருவர் மனங்களிலும் முந்திய இரவின் இன்ப நினைப்புகளிலேயே ஈடுபட்டுக்கிடந்தது. இதனால் அவ்விருவரும் மறுநாள் சற்றுத் தடுமாற்றத்துடனேயே நடந்து கொண்டார்கள். இரவில் பஞ்சனையிலே உறங்கிவிட்ட இருவருள் பொழுது புலருவதற்குள் வெகு நேரமிருக்கையிலேயே கண்விழித்துவிட்ட வடிவழகி விளக்கின் ஒளியில் அருகே கிடந்த ஆடவன் மீது கண்களை ஓட்டினாள். அவன் அலுத்துக் களைத்து உறங்குவதைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு புதுப்பொழிவும் பெருமையும் துலங்கின. சற்றுத்தடுமாறி எழுந்து உட்கார்ந்து கொண்ட அவள் பல வினாடிகள் தன் முந்தாளைக் கட்டிக்கொண்டு அந்தக் கட்டிளங்காளையைப் பார்த்த வண்ணமே உட்கார்ந்திருந்தாள். பிறகு மெல்ல ஒருமுறை அவன் உடல் மீது கையை வைத்து உலுக்கிப் பார்த்தாள். அவன் சிறிதும் அசையாமல் அயர்ந்து தூங்குவதைக் கண்டதும் சிறிது புன்முறுவல் கொண்டு தலையை அண்ணாந்து பின்னலைப் பிரித்து குழல்களை முடிந்து கொண்டு எழுந்திருந்து வெளிச்சென்றாள். எத்தனையோ இன்ப எண்ணங்கள் மனதில் அலைபாய அந்த எண்ணங்களால் உடல் பலவிதமாய் ஒய்யார அசைவு அசைய, இடைதுவள, கால்கள் சரியாக நடக்கமுடியாமல் பின்ன அவள் தன் காலைக்கடன்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தின் பின் கண்விழித்த சங்கிலி தன் பக்கத்தில் வடிவழகி இல்லையெனக் கண்டதும் அவளைத் தேடாது விட்டு வெட்கத்தில் அரண்மனை செல்வதற்காக குதிரையேறினான். அவ்வாறு அவன் வெளியேறியதை இருசோடி கண்கள் மறைந்து நின்று பார்த்தன. சாதிக்க வருவான்…
0 Comments:
Post a Comment