பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
பகல் பொழுது முடிவுற்று நள்ளிரவுக்கு இடைப்பட்ட முன்னிரவுப் பகுதியில் இரவின் இருளாட்சியில் உலகம் சிறிதுநேரம் கட்டுண்டு கிடந்தபின், நிலவின் வருகையால் மீண்டும் அது மலர்ச்சி பெறத் தொடங்கியது. சுவைத்துப் பருகி ருஷி பார்க்க வேண்டும் என்ற வேட்கையை உண்டுபண்ணும் விதமாக அந்நிலவின் அடர்த்தியான பாலொளி எங்கெங்கும் பிரவாகித்து பொங்கிக் கொண்டிருந்தது. ஆரவாரம் மிகுந்த இடங்களில் இருந்து நிலாப்பொழுதைக் காண்பதில் எவ்வித இன்பமும் இருப்பதில்லை. ஆனால் இம்மாதிரி எளிமையில் அழகு சேர்ந்து அமைதியும் உடன் இணைந்து இழையும் இடங்களில் இந்த நிலாப்பொழுது கூடித்தரும் இன்பம் எழுத்தில் கூறிவிட முடியாது. இந்த நிலப்பொழுதின் எழில் ஜாலங்களை எல்லாம் ஓர் உயரிய காவியத்தை படித்துச் சுவைப்பது போலச் சுவைக்க வேண்டும். சில்லென்று வீசும் சீதளத் தென்றலிலே அசைந்தாடும் இலைமலிந்த மரக்கிளைகளும், மலர் சுமந்த செடி கொடிகளும்ஏதோ ஒரு புதிய நடனத்தை அரங்கேற்றிக் காட்டுவது போலத்தான் இருந்தது. பகல் பொழுதில் கேட்காத நானாவித ஒலிகள் அதற்கு முன் கேட்டறியாத ஏதோ ஒரு புதிய இசையாகவே இசைத் இன்பம் தந்தது. அந்த இன்பமயமான வேளையில் இரு வீரர்கள் குதிரை மீதமர்ந்து மிகச் சந்தோசமாக சோழியர்புர வீதியில் வலம் வந்தார்கள். அவர்களை அருகே போய்க் கவனித்தோமானால் ஒருவன் அரசனைப்போல் தோற்றமளித்தான். மற்றன் அவன் நண்பனாக இருக்க வேண்டும். அவ் அரசிளங்குமரன் சராயை மட்டுமே அணிந்திருந்தான். அந்த வாலிபனின் உடலின் மேற்பகுதி திறந்தே கிடந்தது. திறந்திருந்த மார்பு விசாலமாகவும் திண்ணிய தசைகளுடன் இரும்பெனக் காட்சியளித்தது. அதில் வளர்ந்திருந்த கறுத்த முடிகளிடையே ஆடிய பெரும் மரகதக்கல் ஒன்றைத் தாங்கியிருந்த பொற்சங்கிலி ஒன்று அவன் கழுத்தைச் சுற்றியிருந்தது. இரும்பென நீண்ட மெல்லிய கரங்களில் குதிரையின் கடிவாளத்தைப்பிடித்திருந்த தோரணை எல்லாமே அவன் அசுவ சாஸ்திரத்தை நன்கு அறிந்தவன் என்பதை மட்டுமின்றி அவன் உடலின் உறுதிக்கும் வலுவுக்கும் சான்று கூறின. அவன் விசால வதனத்தில் தலையிலிருந்து தொங்கிய ஓரிரு சுருட்டை முடிகள் அவ்வதனத்திற்கு தனி அழகைக் கொடுத்தன. அவன் கண்களிலும் ஏதோ தனிப்பட்ட வசியம் காணப்பட்டது. அவன் இதயத்தில் மகிழ்ச்சி வெள்ளம் புரண்டதன்றி அந்த வெள்ளத்தின் அலைக்கோடுகள் முகத்திலும் உருண்டதால் அவன் வீர உதடுகளும் ஆனந்த நகை பூத்தன. அந்த அர்த்த ஜாமத்தில் மிகவும் சர்வ சாதாரணமாக எதிலும் சிரத்தை காட்டாமல் உலகத்தையே அலட்சியமாக நினைத்து யாழ் மாநகரின் பிரதான ராஜ வீதிகளில் ஒன்றான சோழியர்புர வீதியிலே குதிரையில் தன் நண்பனுடன் சென்ற வாலிபன் தன்னைவிட அதிர்ஷ்டசாலி உலகில் இல்லை என்றே நினைத்தான். இரு வாலிபர்களது சம்பாசனையில் இருந்தும் அவர்கள் பால்ய சினேகிதர்கள் என்பதும் பொழுது போக்கிற்காக ஊரைச்சுற்றுகின்றார்கள் என்பதும் தெளிவாகின்றது. அதில் அரசிளங்குமரன் போலிருப்பவன் நண்பனைப் பார்த்துக் கேட்கின்றான். “வீரமாப்பாணா! இயற்கை அழகு நிறைந்த இலங்காபுரிக்கே தனி அழகு சேர்க்கும் ஒரு அழகு யாழ்ப்பாணத்தில் இல்லை. அது என்னவென்று கூறு பார்ப்போம்?”. வீரமாப்பாணன் பலமாக யோசித்துவிட்டு “நீ இங்கிருக்கின்றாய், அவ்வாறிருக்க எந்த அழகு யாழ்ப்பாணத்தில் குறைந்து விட்டது”. என தனது விகடப் பேச்சைக் காட்டினான். “ இவ்விடத்தில் உனது நகைச்சுவை எனக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை. விளையாடாமல் நான் கேட்ட கேள்விக்குப் பதிலைச்சொல்லு. உனக்கு கண்டுபிடிப்பதற்கு வேண்டுமானால் சான்று தருகின்றேன். அது ஒரு இயற்கை….” “இயற்கையா?.... அவ்வாறானால் அழகான பெண்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்கிறாயா சங்கிலி” “நல்லதொரு அழகைக் கண்டு பிடித்தாயடா அடிமுட்டாள், உனக்கு சிறிதளவேனும் முளை இருக்கின்றதா?” “எனக்குத்தான் புரியவில்லையே, நீயே கூற வேண்டியது தானே! இரவு நேரத்தில் உனது கேள்வி புத்தியை மழுங்கடிக்கின்றதடா” “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன்னுடன் சேர்ந்த என்னைச் சொல்ல வேண்டும். சரி.. நானே கூறுகின்றேன். இனியாவது பாடமாக்கி வைத்துக்கொள், இலங்கையின் மத்திய பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் அழகான மலைத் தொடர்களும் சிகரங்களும் உள்ளன. இங்கு ஒன்றுமே இல்லையடா, ஒரு மலையாவது இருந்திருந்தால் யாழ்ப்பாணம் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்” “பூ… இவ்வளவு தானா…? நான் என்னமோ… ஏதோ… எனப் பெரிதாகக் கற்பனை பண்ணிவிட்டேன்”. “உனக்கெங்கேயடா இருக்கப் போகின்றது கலா ரசனை” சங்கிலி கடிந்து கொண்டான். “சரி நேரமாகின்றது… நித்திரை கண்களைச் சுழற்றுகின்றது. குதிரையில் இருந்தே விழுந்து விடுவேன் போலிருக்கின்றது. வா எங்காவது சத்திரத்தில் உறங்குவோம்”. மாப்பாணன் அவசரப்படுத்தினான். “எனக்கு அரண்மனையை விட வேறு இடங்களில் உறங்கிப் பழக்கமில்லை. தாகமாக இருக்கின்றது. வா… இவ்விடத்தில் தான் நம் மந்திரி அப்பாமுதலியின் வீடு இருக்கின்றது. அங்கு சென்று ஏதாவது அருந்துவோம். அவர் நீண்ட நாட்களாக என்னைத் தனது வீட்டுக்கு வரும்படி அழைக்கின்றார். எனக்கோ நேரமே கிடைப்பதில்லை. மீண்டும் நாம் எப்போது சோழியர்புரப்பகுதிக்கு வருவோமோ தெரியாது. ஆகவே சென்று வருவோம்”. “நான் வேண்டாம் என்றால் நீ விடவா போகின்றாய். வா… போவோம்”. இருவரும் நள்ளிரவில் அப்பாமுதலியின் வீட்டை விசாரித்துக்கொண்டு போய் கதவைத்தட்டுகிறார்கள். “யார்… யாரது இந்த நேரத்தில்?...” உள்ளிருந்தவாறே அப்பாமுதலி குரல் கொடுத்தார். “நான்…. நான் தான்…” “நான் தானென்றால்… யார்?.. ..” என்று கூறியவாறே அப்பாமுதலி வந்து கதவைத்திறக்கின்றார். “யாரது… ஓ..! இளவரசரா… வாருங்கள் வாருங்கள். இப்பொழுதுதான் இந்த ஏழையின் வீடு தெரிந்ததோ?”. திறந்த வீட்டினுள் சென்ற சங்கிலி தனது கண்களாலேயே வீட்டை அளவெடுத்தான். சிறிய வீடென்றாலும் அப்பாமுதலி சொல்வதைப் போல் அது ஏழை வீடாக தெரியவில்லை. “அது… வந்து… இவ்விடம் ஓர் அரசாங்க அலுவலாக வந்தோம். மிகுந்த தாகமாக உள்ளது. அதுதான் உங்கள் வீடு தேடி வந்தோம். அருந்துவதற்கு ஏதேனும் கிடைக்குமா?” சங்கிலி வினவினான். “உங்களுக்கில்லாத பானமா? இரவு வேளையாதால் சூடாகவே ஏதாவது கொண்டுவரக் கூறுகின்றேன்” எனக்கூறிக்கொண்டு உட்பக்கமாகத்திரும்பி “வடிவழகி… வடிவு… சூடாக ஏதாவது அருந்துவதற்கு இரண்டு கோப்பைகள் கொண்டு வா” எனக்குரல் கொடுத்தார். ‘ அப்பாமுதலிக்குக்கு மகள் இருக்கிறாளா? இது எனக்கு இவ்வளவு நாளும் தெரியாதே, ஒருவேளை சிறு பிள்ளையாக இருக்குமோ?” என சங்கிலி எண்ணமிட்டான். “இந்தாருங்கள் அப்பா!” என்ற தேனிலும் இனிய குரலைக்கேட்டு நிமிர்ந்து பார்த்த சங்கிலி மிதமிஞ்சிய ஆச்சரியத்தை அடைந்தான். சாதிக்க வருவான்
0 Comments:
Post a Comment