பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
யாழ் நல்லூர்க் கோட்டை பகுதியெங்கும் மக்கள் சுறுசுறுப்புடன் இயங்கினர். சட்டநாதர் கோயிலும், வீராகாளியம்மன் கோயிலும் பக்தர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. பல அரண்மனை வாசிகளும், அரச குடும்பங்களை சேர்ந்தவர்களும் இக்கோயிலை வழிபடுவர். இது தவிர யாழ் வீதிகளில் வீணாக பொழுதைப் போக்குபவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. எல்லோரும் சுறுசுறுப்புடன் எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுவந்த கரைப்பிட்டி வன்னியன் ‘வாழ்ந்தால் இவ்வாறான ஒரு இடத்தில் தான் வாழவேண்டும்’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். கோட்டையை அண்மித்த வன்னியன் அதன் அழகைக் கண்டு சிறுவர்களைப்போல் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு நின்றான். இந்தியக் கோட்டைகளைப்போல் எதிரிகளை இலகுவாகச் சமாளிக்கும் வகையில் மிக நுட்பமாக கட்டப்பட்டிருந்த நல்லூர்க் கோட்டையையும் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் ஜமுனா ஏரியின் அழகையும், அதன் குழுமையால் கோட்டையைச்சுற்றி வளர்ந்திருந்த மரஞ்செடி கொடிகளையும் கண்ட கரைப்பிட்டி வன்னியன் ‘யாழ் மக்கள் கலாரசனையுடையவர்கள் தான்’ என நினைத்தான். அந்தநேரத்தில் அவ்வழியால் வந்த வீரமாப்பாணன் கோட்டையையே துருவித்துருவி பார்க்கும் வன்னியனைக் கண்டதும் சந்தேகம் கொண்டு அவ்விடத்தில் பணியிலிருந்த காவலாளிகளிடம் கண்ணைக்காட்டினான். உடனே இருவர் ஓடிவந்து ஈட்டி முனையில் அவனைத் தடுத்து நிறுத்தினர். அந்த திடீர் கைதால் வெலவெலத்துப் போன கரைப்பிட்டி வன்னியன் மிரள மிரள விழித்தான். அவனிடம் வந்த மாப்பாணன் அவனை நோக்கி “யார் நீ எனக் கேட்டான்” . நடுங்கியபடியே “நான் வன்னியன், அரசவேலை தேடி இங்கே வந்தேன்” எனக் கூறினான். அவன் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மாப்பாணன் அவனைக் கைது செய்து சங்கிலி இருக்குமிடம் கொண்டு சென்றான். சங்கிலி அந்தப்புரத்திலிருந்ததால் அவனை நந்தவனத்திற்கு வரும்படி மெய்க்காப்பாளனை மாப்பாணன் அனுப்பினான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சங்கிலி மாப்பாணனுடன் கூடவே ஒருவன் நிற்பதைக் கண்டு “என்ன மாப்பாணா! சிறிது காலம் நான் உன்னுடன் ஊர்சுற்ற வரவில்லை. அதற்குள் கோபம் கொண்டு நண்பனை மாற்றி விட்டாயே” எனச் செல்லமாகக் கடிந்து கொண்டான். “அவ்வாறில்லை அரசே! இவன் அரண்மனைக்கு வெளியே சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினான். விசாரித்ததில் இவன் வன்னியன், இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றான். பெயர் கரைப்பிட்டி வன்னியன் என்றும் அறியமுடிந்தது” என்றான். “ஓகோ! அப்படியா?” எனக் கூறிக்கொண்டு வன்னியன் மீது விழிகளை நாட்டி “நீ எப்பொழுது இங்கு வந்தாய்?” என சங்கிலி வினவினான். தனது நிலையை அழுகையுடன் ஒருவாறு கரைப்பிட்டி வன்னியன் கூறிமுடித்தான். அவன் கதையைக் கேட்ட சங்கிலி ஆதரவாக அவன் தோளைத்தட்டி “வீரனே! பயப்படாதே, அடைக்கலம் தேடிவந்தவரை காப்பது எம் கடமை. நான் உனக்கு அரண்மனையிலேயே வேலை ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றேன்”. எனக் கூறினான். இதைக்கேட்ட கரைப்பிட்டி வன்னியன் பெரிதும் சந்தோசமடைந்தான். மன்னனைத் தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டான். மன்னன் ஆணைப்படி கரைப்பிட்டி வன்னியனுக்கு சங்கிலி படையில் ஒரு பதவி வழங்கப்பட்டது. இந்த சம்பவங்களையெல்லாம் இருப்பிடம் சென்று தன் மனைவி அம்மை நாச்சியிடம் கூறிச் சந்தோசமடைந்தான் வன்னியன். நாட்கள் நகர்ந்து செல்ல கரைப்பிட்டி வன்னியன் மனதில் தீய எண்ணங்கள் குடிகொண்டது. தான் அரச பதவியில் இருந்ததால் அதைத் தவறாகப் பயன்படுத்த நினைத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துன்பங்களை விளைவித்தான். தன் கட்டளைக்குப் பணியாதவர்களை தண்டித்துவந்தான். அதுமட்டுமல்லாமல் பெண்களுடனும் தகாத முறையில் நடந்து கொண்டான். ஒருமுறை தன் சூழலில் வசித்து வந்த நம்பி ஒருவருடைய மகளின் அழகைக் கண்டு மயங்கி அவள் பின்னாலேயே அலைந்தான். அரசாங்கப் பதவியைக்காட்டி அவளை மயக்க முயன்றான். ஒன்றுக்குமே அவள் மசியாததால் தனது அதிகாரத்தைப் பாவித்து அவளை அச்சுறுத்தி வந்தான். அவள் பற்றிய தவல்களை அறிந்த போது அவள் தம் குலத்தில் ஒரு ஆடவனைக் காதலிப்ப தெரிய வந்தது. இதனால் வெகுண்ட வன்னியன், அவள் காதலனை அறிந்து, அவனைச்சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்தான். அவன் இருக்கும் நிலை பற்றி நம்பியின் மகளுக்குச் சொல்லியனுப்பினான். தன் காதலன் நிலையறிந்து, சொல்லமுடியாத கவலை அடைந்த அவள், ஓடோடி வன்னியன் சிறையிலிருந்த காதலனைக் கண்டாள். கடுமையாகத் தாக்கப்பட்டதால் நினைவிழந்து மயங்கிச் சரிந்த அவனைப் பார்த்து கதறியழுதாள். அவன் தலையைத்தூக்கி தன் மடியில் வைத்தாள். அவன் “தண்ணீர்! தண்ணீர்!” என முனகினான். அவ்வேளை அங்கு வந்த கரைப்பிட்டி வன்னியன், அவ்விடத்திலிருந்து நம்பி மகளை பலாத்காரமாகத் தூக்கிச் சென்று தன் பஞ்சணையில் எறிந்தான். கதறக்கதற அவள் கற்பைச் சூறையாடினான். நாயைப் போல கடித்துக்குதறி அவளைச் சின்னாபின்னமாக்கினான். பின் அவளையும், அவள் காதலனையும் அங்கிருந்து அடித்துத் துரத்திவிட்டான். தள்ளாடித்தள்ளாடி இருவரும் தம்மிடம் வந்து சேர்ந்தனர். கற்பிழந்து உருக்குலைந்து தன் முன் வந்து நின்ற மகளைப்பார்த்த நம்பி, செய்வதறியாது பித்துப்பிடித்துப் போனார். இதற்கெல்லாம் காரணமான வன்னியனைப் பழிவாங்கியே தீருவது என்று சபதமெடுத்துக் கொண்டார். அரச பதவியில் இருக்கும் அவனைப் பழிவாங்குவது அவ்வளவு இலேசான காரியமல்ல என்பதை அறிந்த நம்பி, குறுக்கு வழியில் அவனைக் கொல்லத்திட்டமிட்டார். இதன்படி தனித்து வீடுவந்த கரைப்பிட்டி வன்னியனை நாள் பார்த்து முதுகில் குத்திக் கொன்றார். நடந்த சம்பவங்களை அறிந்த கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைநாச்சி அவமானம் தாங்கமுடியாமல் வாழ மனமற்று வாளால் வயிற்றில் குத்து தற்கொலை செய்து கொண்டாள். நடந்த விடயங்களை முழுமையாக அறியாத சங்கிலி தன் படையின் முக்கிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்து வெகுண்டெழுந்து ஒரு கொடுங்காரியத்தைச் செய்து விட்டான். இதனால் அவன் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டியதாயிற்று. சாதிக்க வருவான்…
0 Comments:
Post a Comment