பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
பொற்பழம் போலிருந்த சூரியன் அக்கினிக் கனியெனச் சிவந்து அடிவான மடியில் அவரோகணமாகிக் கொண்டிருந்தான். ஒளிவற்றிச் சுருண்டு மிக லேசான இருள் தூற்றலிடத் தொடங்கும் வேளை அண்மித்துவிட்டது. இந்த மாலைவேளையிலும் அவசர அவசரமாக அரச சபையை கூட்டவேண்டியதாயிற்று சங்கிலிக்கு. அந்த அவசரத்திற்கு காரணம் ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி. பறங்கிகள் படையொன்று யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுத்து வருவதா, இதனால் அரசசபையில் அன்று அனைத்துத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். லஸ்தர் விளக்குகளினாலும் மெழுகுவர்த்திகளாலும் வெளிச்சமூட்டப்பட்ட அந்த சபா மண்டபம், தேவர் சபைபோலக் காட்சியளித்தது. வேகமாகச் சங்கிலி அவையினுள் பிரவேசித்தான். எல்லோரும் எழுந்து வணக்கம் செலுத்திவிட்டு அவன் அரசுக்கட்டிலில் அமர்ந்ததும் அமர்ந்தனர். சபையில் உள்ளோரைப்பார்த்து சங்கிலியே பேச்சைத் தொடங்கினான். “பறங்கிகள் பெரும்படையுடன் யாழ்நோக்கி வருகின்றார்கள். நான் போருக்கு அஞ்சுவதில்லை. ஆனால் நாட்டு நலனுக்கு ஏற்ப உங்களுடனும் கலந்தாலோசிப்பதற்காக சபையைக் கூட்டியுள்ளேன். நாம் இப்போது வேண்டுமானாலும் போருக்கு புறப்படலாம். ஆனால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். எமது படையை என்றுமே தயாராக வைத்திருக்கின்றார் நம் தளபதி இமையாணன்” என்றான். இதைக்கேட்ட முதன் மந்திரி தனிநாயக முதலி எழுந்து “மகாராஜா! பறங்கிகளுடன் போர் செய்வதற்கு முன் நாம் யோசித்துத் தொடங்குதல் சிறந்ததாகும். அவர்கள் தென்பகுதியிலும், இந்தியாவிலும் மிகுந்த பலத்துடன் இருக்கின்றார்கள்.” எனக் கூறினார். இதனை அவைக்களத்துப் புலவரும், மந்திரி அடியார்க்கு நல்லானும் ஆமோதித்தனர். அத்துடன் நல்லான் எழுந்து “ அரசே! பறங்கியருடன் போரிடுவதற்கு முன்னர் நாம் சில உபாயங்களைச் செய்தல் வேண்டும். அவர்களுக்கு எல்லா திசைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.” “என்ன செய்யலாம் கூறுங்கள்” சங்கிலி வினவினான் தளபதி இமையாணன் எழுந்து “அரசே! வடக்கே தஞ்சை நாயக்கருக்கு ஓலை அனுப்பி அவர்களோடு சண்டையிட ஏற்பாடு செய்ய வேண்டும். கள்ளிக்கோட்டை சமோரினையும் அவ்வாறே பறங்கியருக்கு எதிராக போரிடுமாறு தூண்ட வேண்டும். தெற்கே கோட்டை இராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்டார்கள். அங்கே நீர்கொழும்பு, சிலாபம் முதலிய பகுதிகளில் உள்ள மக்களை பறங்கியருக்கு எதிராக கலகம் பண்ணும்படி தூண்டிவிடலாம். பறங்கியரை திணறச்செய்வதற்கு இவை நல்ல உபாயங்கள்” எனக் கூறினான். இதுவரை பேசாதிருந்த அப்பாமுதலி “அரசே! பறங்கியருக்கு மாறாக இவ்வளவு நடவடிக்கைகள் வேண்டுமா? அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இங்கு வியாபாரம் நடத்த வருகின்றார்களாக்கும். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா? நாம் அவர்களை வாழவைக்க வேண்டும். அந்தப் பெருமை எதிர்காலத்தில் உங்களையே வந்துசேரும்” என தன் போலி அனுதாபத்தைக் காட்டினார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலி இறுதியாகத் தீர்மானமாக எல்லோரையும் பார்த்துக் கூறினான் “நான் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன், நான் போருக்கு அஞ்சவில்லை. அதனால் நாட்டுமக்கள் படும் துன்பத்தை நீக்க வேண்டும். எனவே எதற்கும் ஒருமுறை பறங்கித்தளபதிகளுக்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக போரைத்தவிர்க்கும் விதமாக தூதொன்றினை அனுப்பிப் பார்ப்போம்” எனக் கூறியதுடன் ஒரு மூலையில் இருந்த தன் நண்பனைப்பார்த்து “மாப்பாணா! நீதான் இதற்குப் பொருத்தமானவன். உடனே சென்று எனது விருப்பத்தை அவர்களுக்கு தெரிவித்து வா” எனக் கூறினான். அதன்படி வீரமாப்பாணனும் மன்னாருக்கு அருகில் உள்ள தீவுகளில் முகாமிட்டிருந்த பறங்கியத்தளபதிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் சங்கிலியை வந்து சந்தித்தான். “என்ன மாப்பாணா! போன காரியம் எவ்வாறு முடிந்தது” சங்கிலி வினவினான். “வெற்றி தான், ஆனால் நாம் எமது பொக்கிஷத்தின் சிறுபகுதியை இழக்க வேண்டிவரும்” என்று கூறினான். “பூ! இவ்வளவு தானா? மனித உயிருடன் ஒப்பிடும் போது இது எவ்வளவு அற்பமானது” எனக் கூறி ஒரு தொகை திரவியங்களை அரச கஜானாவில் இருந்து படைவீரர்கள் மூலம் பறங்கிகளுக்கு கொடுத்தனுப்பினான். அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோர் ஒரு குடையின் கீழ் சங்கிலியின் ஆட்சியில் குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்தனர். அடிக்கடி யாழ்ப்பாணத்தைச் சூழும் போர் மேகங்களால் பெரிதும் கவலையுற்ற சங்கிலி, இவர்களை இங்கு வைத்திருப்பது சிரமம் என யோசித்தான். அதை அரசசபையிலும் தெரிவித்தான். அதற்கு பலபேர் வரவேற்புத் தெரிவித்தனர். முதன் மந்திரி தனிநாயகமுதலி “அரசே! இவர்களது சனத்தொகை பெருகும் போது பறங்கிகள் போல் இவர்களும் எமக்கெதிராக போருக்கு எழுவார்கள். உள்நாட்டுப்போர் வெளிநாட்டுப் போரிலும் மிகக் கொடியது. இதனால் பல உயிர்சேதம் ஏற்படும்” என தன் ஐயத்தைத் தெரிவித்தார். அரசகேசரியும் “ இவர்கள் கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தையே பிடிக்கக் கூடியவர்கள். இவர்களால் நாம் பரதேசிகளாக வாழவேண்டி நேரிடலாம்” எனக் கூறினார். அடியார்க்கு நல்லான் “மன்னா! அவர்களுக்கென்று சொந்த இடங்கள் இருக்கின்றது. இதனால் அவர்களை இங்கிருந்து வெளியேற்றினாலும்; பெரிதாகக் கஷ்டப்படமாட்டார்கள். நாட்டு நன்மை கருதி அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதே சிறந்த முடிவாகும்” எனக் கூறினான். எல்லோரது ஆலோசனைகளையும் ஏற்ற சங்கிலி சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோரை எந்தவித சேதமும் இல்லாமல் அவர்கள் சொந்தப்பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தான். இந்த சமயத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஒரு அபாயம் யாழ் நோக்கி வந்துகொண்டிருந்தது.
0 Comments:
Post a Comment