பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
குரலின் இனிமைக்கு எந்த விதத்திலும் குறையாமல் அப்பாமுதலியிடம் இரு குவளைகளையும் நீட்டினாள் ஒரு பைங்கிளி. எவ்வளவு தான் கூட்டிப்பார்த்தாலும் வயது பதினெட்டைத் தாண்டமாட்டாது போலிருந்தது அப்பைங்கிளியின் வனப்பு. அந்தப் பூவுடலில் தான் எத்தனை வளைவுகள்!, எத்தனை சுழிவுகள்!, எத்தனை எழுச்சிகள்! முகத்தில் தான் எத்தனை விற்கள்! எத்தனை மலர்கள்! இவற்றையெல்லாம் சங்கிலியின் கண்கள் ஆராயத்தான் செய்தன. புருவங்கள் மாத்திரம் விற்கள் என்று வர்ணித்த பழம் புலவர்கள் எத்தனை அறியாதவர்கள் என்று அந்தச் சில வினாடிகள் நினைத்துப்பார்த்தான். புருவங்கள் விற்களென்றால் இமைகள் மாத்திரம் என்ன விற்களில்லையா? மேலும் கீழுமாக சிறியதும் பெரியதுமாக கண்ணைக் காக்கும் நான்கு விற்கள் இல்லையா? இந்த நான்னையும் புருவ விற்களுடன் சேர்த்தால் விற்கள் ஆறு ஆகுமே! இப்படி ஏன் புலவர்கள் கணக்குப் போடவில்லை. இவற்றுடன் செழுமையான கன்னத்தாமரைகள், கருங்கண்கள், உதட்டுச் செம்பருத்தி இப்படிப்பல மலர்களைக் கொண்டு காதலின் விளையாட்டுத் தோட்டம் போலிருந்த முகத்தை ஒருவேளை அந்தக்காலத்து கவிஞர்கள் பாத்திருக்க மாட்டார்களோ? என்றெல்லாம் தன்னைத் தானே கேட்டுக் கொண்ட சங்கிலி, ஆராய்ச்சி வெளிப்படையாகத் தெரிந்த முகத் தோட்டத்தின் சிறு மலர்க்குவியலில் இருந்து கீழிறங்கி மறைந்திருந்தாம் மதியை மயக்கிய செண்டுகளையும் தண்டுகளையும் ஆராயத் தொடங்கியதும் அப்பைங்கிளி வீட்டினுள் சென்று விட்டாள். நண்பனது ஆராய்ச்சி தோல்வியடைந்ததை கடைக்கண்களால் கண்டுகொண்ட வீரமாப்பாணன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அப்பாமுதலி தந்த சூடான பானத்தை அருந்திவிட்டு, நன்றி கூறிக்கொண்டு இருவரும் புறப்பட்டார்கள். போகும் வழியில் சங்கிலியின் மனது அவனிடம் இல்லை என்பது வீரமாப்பாணனுக்கு புரிந்தது. இடையில் திடீரென சங்கிலி நண்பனைப் பார்த்து “மாப்பாணா! எனது புரவி தான் வேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றது. எனது இதயம் பின்நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது” எனக் கூறினான். “ஏன்? மீண்டும் தாகமா? தண்ணீர் வேண்டுமா?” என நண்பன் கேலியுடன் வினவினான். “இல்லையடா நண்பா! உயிர் வேண்ட…” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான் சங்கிலி. “உயிர் வேண்டவா?...” “ ஆமாம் நண்பா! அவளைக்கண்ட மாத்திரத்திலேயே அவள் கண்களுக்குள் என் உயிர் ஓடி ஒழிந்து கொண்டது. அந்த தொலைந்த உயிரை வேண்டி வரத்தான் என் இதயம் தூது போய்க்கொண்டிருக்கின்றது”. “நீங்கள் இப்படி இலகுவில் மயங்கி விடுவீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை”. என போலி மரியாதையை மாப்பாணன் காட்டினான். “நானும் தான் எதிர் பார்க்கவில்லையடா இப்படி எல்லாம் நடக்கும் என்று, எல்லாம் சொப்பனத்தில் நடந்தது போல இருக்கின்றது. அப்பாமுதலி அழைத்ததும் இப்படியொரு பேரழகி வருவாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. உலகத்து அழகை எல்லாம் உருக்கிச் செய்யப்பட்ட அழகுச் சிலை அவள்” என்று சங்கிலி சிலாகித்தான். “தாங்கள் பாராத அழகா?” என சினேகிதத்தின் உறவை பாணன் வெளிப்படுத்தினான். “ பார்த்திருக்கின்றேன், நிறையவே கண்டிருக்கின்றேன். எத்தனையோ வெளிநாட்டுக்கிளிகள், உள்நாட்டுக்கிளிகள் என பல கிளிகளைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் என் குருதியில் உலை மூட்டி உயிர் சுட வைத்தவள் அவளே! என் ஆண்மைக்கு அறைகூவல் விடத்தக்கவள் அவளே! நான் துரத்திப்பிடிக்க நினைத்தது இப்படி ஒரு பொற்சிலையைத் தான்”. “நீ கண்ணசைத்தால் ஆயிரங்கிளிகள் வந்து அரண்மனையில் அணிவகுக்குமே! நீயாக ஏன் உன் மதிப்பைக் கெடுத்துக் கொள்கிறாய்”. “ஓடும் மீனையெல்லாம் விடுத்து உறுமீனுக்காக தவமிருக்கவில்லை இந்தச்சங்கிலி, ஒரு விண்மீன் கிடைக்க வேண்டுகிறேன்”. இவ்வாறாக பேசிக் கொண்டே சிறிய தூரம் சென்ற இருவரில் திடீரென கடிவாளத்தை இழுத்ததால் சங்கிலியின் குதிரை தடுமாறி நின்றது. என்னவென்று புரியாமல் வீரமாப்பாணனும் தனது குதிரையை நிறுத்தினான். “என்ன சங்கிலி குதிரையை நிறுத்திவிட்டாய்? அதற்குத் தண்ணீர் காட்டப் போகின்றாயா?”. “நண்பா! வடிவழகியின் மனதை வெல்லாமல் நான் அரண்மனை வர இஷ்டப்படவில்லை. நீ அரண்மனை சென்று சேர், நான் இரு தினங்களில் திரும்ப முயற்சி செய்கின்றேன். “இளவரசே! இது இளவரசிக்குத் தெரிந்தால்….” என்று பேரிடியை சங்கிலியின் தலையில் பாணன் இறக்கினான். வடிவழகியின் பித்தத்தால் திணறியிருந்த சங்கிலி சுயநினைவு பெற்றான். ஆனபோதும் அதை லட்சியம் செய்யாமல் “அந்தப்பேரழகு எனக்குப் பித்தேற்றி விட்டது. அவளோடு வாழ்ந்தாலும் இன்பம் தான், இறந்தாலும் இன்பம் தான்” என்று கூறினான். “நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். போரையும் காதலையும் அவசரத்தில் தொடங்கிவிடக் கூடாது” நண்பன் ஆலோசனை கூறினான். “என்ன ஆனாலும் சரி நான் வடிவழகியின் மனதை வென்று வருகின்றேன், நீ அரண்மனை செல்!” எனக்கூறிவிட்டு சங்கிலி குதிரையைத் திருப்பினான். அவன் குதிரை பஞ்சகல்யாணியும் தலைவனது ஆசையைப் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக வேகமாக சோழியர்புரம் நோக்கிச் சென்றது, பிற்காலத்தில் நிகழப்போகும் விளைவுகளை அறியாமல். சாதிக்க வருவான்… பி.கு : தற்போது சுழிபுரம் என்று அழைக்கப்படும் பகுதியே சோழியர்புரம் என அன்று அழைக்கப்பட்டது
0 Comments:
Post a Comment