-->

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 17- வெண்புறா)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

நீலவான் நெடுமஞ்சத்தில் ஆடையற்ற நிலவுப் பெண் மோகாவேச போதையுடன் அழகாகப் படுத்துக்கிடந்தாள். அவ்வப்போது தன் குலைந்த தோற்றத்தைக் கண்டு நாணிக் கண்புதைத்து ஓடி வெண்முகில் ஆடையை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றாள். அவள் போர்வை கொள்ள மறுத்தாலும் அவளுடைய மூத்த சகோதரியான காற்றுப் பெண் அரக்கப் பறக்க ஓடிவந்து கருநிற முகில்களை இழுத்து அவளை மூடி உள்ளே அனுப்பி விடுகிறாள். ஒன்றின் துன்பத்தைக் கொண்டு இன்னொன்று இன்பம் அனுபவிப்பது நடைமுறைத்தத்துவம் அல்லவா? விரக வேதனையுறும் வெண்ணிலவின் காம ஒளியால் உலகம் ஓர் ஒப்பற்ற காட்சியைச்சாலையாக திகழ்ந்தது. எங்கும் அழகின் பூரிப்பு. இந்த இயற்கையைப் பருகிக் கொண்டு நின்ற சங்கிலி தனக்கு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த யமுனா ஏரியின் குளிர் நீரில் தன் கால்களை அலசிக் கொண்டான். இயற்கையின் இன்பப் பூரிப்பால் திளைத்திருந்த சங்கிலி திடீரென்று வீசிய சுகந்த வாசனையால் பெரிதும் கவரப்பட்டு அது என்னவாக இருக்கும் என அறிய ஆவலில் தலையைத் திருப்பியவன்.. திருப்பியபடி திகைத்து நின்றான். அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அந்த அழகுச்சிலை மெதுவாக சங்கிலியை நெருங்கி வந்தது. இதனால் பெரிதும் சஞ்சலமடைந்த சங்கிலி “இவள் இங்கு எதற்கு வருகிறாள்? அன்று அரச சபையில் பார்த்ததை விட எத்தனை மடங்கு அழகாக இருக்கிறாள்” என நினைத்துக் கொண்டான். பக்கத்தில் வந்துவிட்ட அந்த பறங்கியப் பெண்ணை தீராத ஏக்கத்துடன் ஒருமுறை கண்களால் அளவெடுத்தான் சங்கிலி. வெளேரெனத் தெரிந்த அவள் கன்னப் பகுதிகளும் கழுத்தும் இருந்த வழவழப்பு சலவைக்கல்லுக்குக் கூட இராதென்று நினைத்தான். சிவந்த சிறு பூவைப் போலிருந்த உதடுகளில் தெரிந்த ஈரம் அவற்றுக்கு தனி மெருகைக் கொடுத்து தேனை உள்ளடக்க முடியாத மலரிதழ்களுக்கு உவமை காட்டியது. வெள்ளைக்காரியாதலால் அவள் கேசம் தங்கநிறம் பெற்றிருந்தது. கண்களும் இமைகளும் வெள்ளைக்கன்ன முகப்புகளில் படுத்துக்கிடந்தன. திண்ணிய மார்பும் இருபுறமும் உட்புறமாக வழித்துவிடப்பட்ட இடைப்பகுதியும் லேசாக எழுந்து பிறகு கீழ்ப்புறம் விர்ரென்று சரிந்து இறங்கிவிட்ட வயிறும் சற்றே அகன்று கிடந்த அழகுக் கால்களும் ஏதோ புதுத் தேவதை மண்ணில் இறங்கியதைப் போல அவளைக் காட்டியது. தன்னை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்ததை ரசித்த வெள்ளைக்காரி பெரிதும் மகிழ்ந்து அவன் அருகில் வந்து தன் அழகுகள் அவன் மீது உராயும் வண்ணம் நெருங்கி நின்றாள். இதனால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி சிறு நிதானத்துடன் சற்று விலகி “தேவி இங்கு வந்திருக்கும் காரணம் யாதென அறியலாமா?” எனப் பெரும் சிரமத்தின் மத்தியில் வாயிலிருந்து சொற்களை உதிர்த்தான். “உன்னைப் பார்க்கத்தான்” என்ற வெள்ளைக்காரியின் உரையாடலில் கொஞ்சமும் மரியாதை இல்லாததை கவனித்த சங்கிலி உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “என்ன விடயம் தேவி?” “உன்னைப் பார்க்க வேண்டும் போலத் தோண்றியது, அது தான்..” என அவன் உடலுடன் மீண்டும் உராய்ந்தாள். என்ன செய்வதென்றறியாத சங்கிலி உணர்ச்சிகள் கட்டுமீறிப் போவதை உணர்ந்து கொண்டதுடன் தன்னைச் சமாளித்துக் கொண்டு “ ஏன் தேவி?” எனக் கேட்டான். அவன் தன்னை நிமிடத்துக்கு ஒரு தடவை ‘தேவி! ’ என்றழைப்பதை விரும்பாத அவள் “நீ என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம்” என்றாள். “முன் பின் தெரியாதவர்களை எவ்வாறு பெயர் சொல்லி அழைக்க முடியும்?” “பழகிக் கொள்” “எனக்கு உன் பெயர் தெரியாதே” எனச் சங்கிலியும் மரியாதையைக் கைவிட்டான். சற்று யோசித்த அவள் “ஓ! உனக்கு என் பெயர் தெரியாதல்லவா?” எனக் கேட்டாள். “ஆம்” “எலியானா” “நல்ல பெயர்” “நீ வேண்டுமானால் என்னை ‘எலி’ என சுருக்கியும் அழைக்கலாம்” “ஹா ஹா! அவ்வாறு கூப்பிட்டால் நம்மூரில் அசிங்கமாகிவிடும்.” என நகைப்புக்கிடையில் கூறினான். அவன் ஏன் நகைக்கின்றான் என்பதை அறியாத எலியானா, அவன் தோள் மீது தன் இரு கைகளையும் போட்டாள். “இது முறையல்ல..” என்றான் சங்கிலி. “எது?” “இவ்வாறு ஆடவர் மேல் கை போடுவது” “அதனாலென்ன?” “இல்லை! நான் திருமணம் ஆனவன்” “அதனால்…??” என குதர்க்கமாக பேசிய எலியானா “உன்னைப் போல் அழகனுக்கும் வீரனுக்கும் எங்களுரில் ஆயிரம் பெண்டாட்டிகள் இருப்பார்கள்” என்றாள். “இங்கு அவ்வாறில்லை” “உன்னை என்ன ஆயிரம் பெண்ணையா திருமணம் செய்யச் சொன்னேன். என்னை மட்டும் தானே? அதுவும் திருமணம் அல்ல.. சில நாட்கள் என்னுடன் சந்தோஷமாக இரு. பிறகு நான் எங்கள் ஊர் சென்று விடுவேன்” எனக் கூறினாள். “தப்பு” “எது?” “அப்படிச் செய்வது” “உங்கள் ஊர் அரசர்களும் அப்படித் தானே!” “நான் அவ்வாறல்ல…” வடிவழகி மீது கொண்ட தீராத காதலே தன்னை இவ்வாறெல்லாம் பேச வைக்கின்றது என்பதை உணர்ந்த சங்கிலி “ வடிவழகி மட்டும் இல்லையெனில், இப்பொழுது என்னவாயிருக்கும்” என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டான். தனக்கு மசியாமல் தன்னுள்ளேயே சிரித்துக் கொள்ளும் சங்கிலியைக் கண்ட எலியானா ஆத்திரத்துடன் அவனை இறுக அணைத்துக் அவன் இதழ்களுடன் தன் பூவிதழைப் பதித்தாள். திடீரென நடைபெற்ற இந்நிகழ்ச்சியால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி வெடுக்கென எலியானாவை பிடித்துத் தள்ளிவிட்டு அரண்மனை நோக்கிச் சென்றான். நிலத்தில் விழுந்த எலியானா “உன்னை அடையாமல் விடமாட்டேன்” என மனதில் கறுவிக்கொண்டாள். தன்னை வருங்காலத்தில் காப்பாற்றப் போகின்றவள் அவளென அறியாத சங்கிலி கோபத்துடன் அரண்மனை சென்ற போது அங்கு நண்பன் மாப்பாணன் ஒரு செய்தியுடன் காத்திருந்தான். சாதிக்க வருவான்…


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner