பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
நல்லூர் அரசிலே சிறப்புற்று விளங்கியது யாதெனில் சட்டநாதர் ஆலயத்திற்கு சற்றுத் தெற்காக வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட மந்திரிமனையாகும். இக்கட்டடத்தின் அமைப்பும், மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைப்பண்பை வெளிப்படுத்துகின்றன. அதில் நம் சுதேச மரபு கலந்திருந்தது. மந்நிதிமனைக்கு உள்ளிருந்து வெளியே யமுனா ஏரிக்கு வந்து சேரும் வகையில் மிக நுட்பமாக ஒரு சுரங்க வழி அமைக்கப்பட்டிருந்தது. இது நல்லூர்க் கோட்டைக்கு மிகவும் பாதுகாப்பாக விளங்கியது. சுரங்கவழியின் பாதுகாப்பையும் உறுதியையும் ஆராயவென தளபதி இமையாணனும், சங்கிலியும் சுரங்க வழிக்குள் இறங்கி நின்றனர். இந்த வேளையில் சங்கிலியைப் பல இடங்களில் தேடிய வீரமாப்பாணன், கடைசியாக சுரங்க வழிக்குள் வந்து சங்கிலியைச் சந்தித்தான். “என்ன மாப்பாணா! புரபரப்புடன் வருகின்றாய்? உன்னுடன் என்றுமே ஒரு தகவலைக்கூட வைத்திருப்பாயே! இன்று என்ன கூற வந்தாய்… என்னை எங்காவது கூட்டிக்கொண்டு போகப்போகின்றாயா? நான் பாதுகாப்புப் பற்றிய ஆலோசனைகளில் இருக்கின்றேன். நாளை போவோமா?” என மாப்பாணன் வந்த விடயத்தை தானாக ஊகித்துக் கூறினான். நிலமை தெரியாமல் சங்கிலி கூறியதைச் செவிமடுத்த தோழன் “நான் வந்திருக்கும் விடயம் சந்தோஷமானதல்ல, துக்கமானதாகும்” எனக் கூறினான். “என்ன! என்ன விடயம்?” சுதாகரித்துக் கொண்டான் சங்கிலி. “நம்மிடம் புதிதாக இணைந்த வன்னியன் இறந்துவிட்டான்”. “யார்… நம் தளபதிகளில் ஒருவனான கரைப்பிட்டி வன்னியனா?” “ஆம் அரசே!” “என்ன விடயம் என விசாரித்தாயா?” “இல்லை, ஆனால் அவன் கீழ் வேலை செய்யும் நம்பி ஒருவன் தான், அவனை யுத்த நெறிமுறைகளுக்கு புறம்பாகக் கொன்றான்”. “நம்பியா கொன்றான்! நம் படைத்தலைவன் என்று தெரிந்தும் நம்பிக்கு எவ்வாறு அவனைக் கொல்ல தைரியம் வந்தது” “தெரியவில்லை மன்னா!” சங்கிலி கோபம் கண்களில் கொப்பளிக்க தளபதி இமையாணனைப் பார்த்து “சங்கிலி படைத்தளபதி ஒருவனை அடிமை ஒருவன் சாய்த்து விட்டான். அவனுக்கு தக்க தண்டனையை நாம் வழங்க வேண்டும். நம்பரை வீரரை அனுப்பி அந்த நம்பியை கொல்லும் படி ஆணையிடு” எனக் கூறினான். “அரசே! எதையும் தீர விசாரித்து அறியாமல் ஒரு முடிவுக்கு வருவது தப்பு” என மாப்பாணன் ஆலோசனை கூறினான். ஆனால் ஏற்கனவே வெளிநாட்டவர் மீது ஆத்திரம் கொண்டிருந்த சங்கிலி அவனது ஆலோசணையை ஏற்கவில்லை. இதனால் அநியாயமாக ஒரு உயிரை எடுக்க வேண்டியதாயிற்று. சில நாட்களின் பின்பே உண்மை நிலையைச் சங்கிலி அறிந்தான். இதனால் பெரிதும் வருந்தினான். நம்பிகளுக்கு ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நம்பிகள் இருந்த இடத்தைத் தேடிச் சென்றான். சங்கிலியின் தண்டணையால் பெரிதும் மனமுடைந்த நம்பிகளில் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலூன்றி பல சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்ததால் அந்த அனாதைச் சொத்துக்களை எல்லாம் அரச உடமை ஆக்கினான். தன் மனநிம்மதிக்காக பல ஆலயங்களில் விசேட பூஜைகள் பலவற்றை ஏற்பாடு செய்தான். தன் ஆத்திரப்புத்தியை மிகவும் நொந்து கொண்டு அந்தப்புரம் சென்றான். கவலைகளை மறக்கடிக்கும் அவ்விடமும் அவனுக்கு சுமையாகவே தோண்றியது. தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு பஞ்சணையில் உட்கார்ந்திருந்த மாதேவி, சங்கிலியைக் கண்டதும் வழக்கமான நாணத்துடன் பெரிய எதிர்பார்ப்புடனும் மெல்லிய திரைச்சீலையால் சுற்றவரக் கட்டப்பட்டிருந்த அந்தத் திரு மஞ்சத்தில் உட்கார்ந்திருந்தாள். சங்கிலியை கண்ட தோழிகள் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு மெதுவாக வெளியேறினார்கள். மஞ்சம் நோக்கி வந்த சங்கிலி பஞ்சணையில் இருந்த பைங்கிளியை ஏறெடுத்தும் நோக்காமல் பஞ்சணையின் ஒரு ஓரத்தில் இருந்தான். சங்கிலியின் கொஞ்சல்களையும், குழாவல்களையும் எதிர்பார்த்திருந்த மாதேவி சிறிது நேரம் எந்தவித சலனத்தையும் காணாததால் விரக்தியடைந்து, ஏமாற்றத்துடன் பஞ்சணை முகப்பிலிருந்த மெல்லிய திரையை விலக்கிக் கொண்டு தலையை நீட்டி “என்ன நடந்தது? ஏன் குழம்பிய மனத்துடன் காணப்படுகின்றீர்கள். வழமையாக நான் உங்களை இப்படிக் கண்டதே இல்லையே” என சோகமாக வறட்சியான குரலில் கூறினாள். அவளுக்கு உடனடியாகப் பதில் சொல்லாத சங்கிலி திரைகளுக்கு இடையே தெரிந்த அவள் சுந்தர முகத்தையும், விலகிய சேலையின் விளைவாக தெரிந்த மேல் அழகுகளையும் சில வினாடிகள் உற்று நோக்கினான். “இந்த சௌந்தர்யங்களையெல்லாம் ஆள இப்போது என்னால் இயலாது” என மனதுக்குள் சொல்லிக் கொண்டு பஞ்சணையை அணுகி மாதேவியை அப்படியே தனது கைகளில் அள்ளித் தூக்கித் தனது இதழ்களை முரட்டுத்தனமாக அவள் கழுத்தில் பதித்தான். அங்கிருந்து மீண்ட உதடுகள் அவள் செவ்விய அதரங்களுடன் ஒரு வினாடி இழைந்தது. அடுத்து எந்த சரசத்திலும் ஈடுபடாத சங்கிலி வெடுக்கென எழுந்திருந்தான். “தேவி! ஏன்னால் இன்று இன்பமாக இருக்க முடியாது. என் மனம் இன்று ஒரு நிலையில் இல்லை. சங்கடப்பட்டுக் காணப்படுகின்றது” எனக் கூறினான். தரையில் நின்றபடி அவன் உடல் மீது சாய்ந்து தனது உடலை அவன் உடலுடன் முற்றும் இழைத்துக் கொண்டாள் மாதேவி. அந்த ஒரு வினாடி அவன் மனதை மாற்றியது அந்த அணைப்பு. அவளை அணைத்துக் கொண்ட சங்கிலி “தேவி! என் அவசரப்புத்தியால் அநியாயமாக ஒரு உயிரைப்பறித்து விட்டேன்” என சோகமாகக் கூறினான். நடந்ததைக் கேட்டறிந்து கொண்ட பட்டத்து ராணி, அவனை ஆதரவாக அணைத்து அவன் மார்மேல் தலையைச் சாய்த்துக் கொண்டு “நீங்கள் என்ன தெரிந்தா இப்படிச்செய்தீர்கள். மேலே கடவுள் என்று ஒருவன் இருக்கி;ன்றான். அவனுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என அவன் மனப்பாரத்தை இறக்க முயன்றாள். ஆனால் சங்கிலி மனம் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடித்தது. அதற்குள் சங்கிலிக்கு சவால் விடும்படியாக உள்நாட்டில் சிக்கலான சூழ்நிலை உருவானது.
0 Comments:
Post a Comment