-->

கௌசல்யன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2005 பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப். கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஆண்டு ஜந்தாகின்றது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன் விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான். மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது. காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவன், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறான். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டான். காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினான். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை. ஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டான். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர். தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார். கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டான். திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005 ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது. 2005 மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தான். இவனுடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் ( தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ். விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர். போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் அமரத்துவமடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது. ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுபடுகொலை செய்யப்பட்டதுடன். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் இன்றுவரை காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது. இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு 2005 பெப்ரவரி 8 ம் நாள் மரணமடைந்தார். இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06. 40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார். இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார். இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார். எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார். சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார். இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும். ஆண்டு ஜந்தாகின்றது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம். "நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்… ஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன் இவன் நினைவாய்....... கவிதாஞ்சலி எங்கள் கண்களுக்குள் இன்னமும் தரிசனம் தந்துகொண்டிருக்கும் கந்தர்வன்! பொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன்! புதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்! காலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக் காடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன. செங்குருதி வெறிபிடித்து அலைகின்ற சிங்களக் கழுகுகளின் அலகுகளில் மீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்... இனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில் இதோ! இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்... என்ன செய்வதடா? எதுவரை பொறுப்பதடா? ஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே அந்தப் போதிமரத்தான் போதித்தான்?.. அழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள், அவனுக்கு எப்படியடா பின்காமிகள்? "இனியொரு விதி செய்வோம்!" என்ற உணர்வோடு இறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு, "இனியொரு சதி செய்வோம்!" என்பதுதானா? என்ன செய்வதடா? எதுவரை பொறுப்பதடா? உலக நாடுகளே! உதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள், ஒன்றும் பேசாமலிருப்பதேன்? தவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத் தம்பட்டம் அடிக்கின்ற "சட்டாம்பிள்ளை" தேசங்களே! எங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை? ஈழத் தமிழனே! என்னருமைச் சோதரனே! - நீ கீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து கிட்டே வந்துவிட்டான் பார்த்தாயா, சிங்களத்துச் செந்நாய்ச் சேய்? வீழத்தான் வேண்டுமோ? - உனக்கு விழுப்புண்தான் மீண்டுமோ? ஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன் எத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ? என்ன செய்வதடா? எதுவரை பொறுப்பதடா? - தொ. சூசைமிக்கேல் -


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner