பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
அந்த இருசோடி கண்களில் ஒருசோடி கண்களுக்குரியவர் வேறு யாருமல்ல, வடிவழகியின் தந்தை அப்பாமுதலி தான். இவ்விடயத்தில் அவசரப்பட்டால் பெரிய ஆபத்தை உண்டுபண்ணிவிடும். எனவே அமைதியாக ஆராயலாம் என இருந்தார். ஒருநாள் மெல்ல தன் மனையியிடம் கதையைத் தொடக்கினார். “கனகம்! கனகம்! நீ கொஞ்ச நாளா எங்கட வீட்டில ஏதாவது வித்தியாசத்தை உணர்றியோ? ” “என்னங்க புதிராப் பேசிறீங்க, அப்பிடியென்ன புதினத்தை கண்டுட்டீங்க?” “அப்பிடியில்லையப்பா, உன் மகளின் போக்கில் ஏதாவது மாற்றம் தெரியுதா? ஏதாவது விடயங்களில் தனது நேரத்தை போக்குகின்றாளா? ஏன் கேட்கிறணென்டால் உனக்குத் தெரியாமல் இந்த வீட்டில ஒண்டும் நடவாது. பிள்ளையை ஒருவன் கையில ஒப்படைக்கிற வரைக்கும் நாங்க தான் கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கோணும்.” “ இதென்ன புதுக்கதை சொல்லுறியள், சத்தியமா எனக்கு ஒண்டும் தெரியவே தெரியாது. நீங்க தான் ஏதோ மறைக்கிறீங்க, அதை என்னெண்டு தான் சொல்லுங்கோவன்”. “என் நண்பன் முத்துலிங்க முதலியின் வீட்டுக்கு ஒரு காரியமாய்ப் போயிருந்தன். அப்போது தான் பேச்சுவாக்கில் அவன் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னவன். இவள் பிள்ளை வடிவழகியும் சங்கிலியும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிக்கினமாம். இவ்விடயத்தை இப்படியே விட்டால் எங்கள் தலையில இடியைப் போட்டுட்டு இவள் ஏதாவது செய்து விடுவாள். அது பெருத்த அவமானமாய்ப் போய்விடும்”. “ இப்படியேதாவது நடந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும்.” சிறிது யோசித்து விட்டு “எங்கள் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தோப்பில் சில நாட்களாக சங்கிலி நடமாட்டம் தெரிகின்றது. இவள் பிள்ளையும் அடிக்கடி சோலைக்கு போகிறாள். சிலவேளை இது உண்மையாக இருக்குமா?” கனகம் அங்கலாய்த்தாள். “அது தானே பார்த்தேன். நெருப்பில்லாமல் புகையுமோ? நீ இனிக்கவனமாக இருக்க வேண்டும். உன் பெண்ணை தோப்புப் பக்கம் போகாமல் பார்த்துக்கொள். அவள் வந்த நல்ல புத்திமதிகளைச் சொல்ல அவள் மனத்தை மாற்ற முயற்சி பண்ண வேண்டும்”. அவ்வேளை வடிவழகி வெளியில் இருந்து வீட்டினுள் நுழைந்தாள். அப்பாமுதலி பேச்சை நிறுத்திவிட்டு தனது மனைவிக்கு கண்ணைக் காட்டினார். உடனே மனைவி கனகம் மகளை நோக்கி “எடி! பிள்ளை… இஞ்சை ஒருக்கா வந்திட்டுப் போ” “என்னம்மா! என்ன விஷயம்?” “அது… வந்து… நான் நேரடியாக விஷயத்துக்கு வாரன். உனக்கும் சங்கிலிக்கும் ஏதாவது தொடர்பிருக்கோ? வெளியில் பலபேர் பலவிதமாக் கதைக்கினம். இறுதியில் எங்களுக்கு தானே அவமானம்”. திகைத்த வடிவு “சங்…கிலி…யுடனா? இல்..லை… அம்மா…. நான் அவரைக் காண்பதே இல்லையே” வடிவழகி மென்று விழுங்கினாள். “இதோ பார்! அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் இப்பொழுது இருந்து அதை மாற்றிக்கொள். உந்த இடம் சரிப்பட்டு வராது. சங்கிலியோ ஏற்கனவே திருமணம் ஆனவன். அவனுக்கு பட்டத்துத்தேவி இருக்கிறாள். நீ அவனைக் காதலித்து மணம் முடித்தால் அவன் ஆசை நாயகியாக தான் இருக்கலாம். அரசுரிமை உன் வாரிசுகளுக்கு கிடைக்கப்போவதில்லை. ஆகையால் உந்தத் தொடர்பை விட்டுவிடு. அப்பா உனக்கு எல்லா வகையிலும் ஏற்ற மாப்பிளை பார்த்திருக்கின்றார். அவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.” கனகம் கூறினாள். இதைக்கேட்ட வடிவழகியின் முகத்தில் இருள் குடிகொண்டது. கண்களில் கண்ணீர் சுரந்தது. அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு “யாரம்மா அவர்?” என்று கேட்டாள். சங்கிலியின் அண்ணன் மகன் பரராஜசிங்க முதலி” “பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே “நான் மாட்டன்” என வெடுக்கென பதில் கூறினாள். அதுவரை சம்பாசனையை ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அப்பாமுதலி கோபம் கண்களில் கொப்பளிக்க திடீரென உட்புகுந்தார். “ அவனுக்கென்ன குறைச்சல்?” “குறையொண்டும் இல்லைத்தான். ஆனால் எனக்கு அவரைப் பிடிக்கல. அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டன்”. வடிவழகி உறுதியுடன் கூறினாள்.ஸ “ஓகோ! பேச்சு அப்படியும் போகுதோ… எங்களையே எதிர்த்துப் பேசுற அளவுக்கு நீ பெரிய மனுஷி ஆகிட்டாய். இதோ பார், நாங்க எது செய்தாலும் உன் நன்மைக்குத் தான் செய்வம். பேசாமல் எங்கள் பேச்சைக் கேட்டு நட” அப்பாமுதலி கூறிமுடிக்க வீட்டு வாயிலின் முன் அமளிதுமளிப்பட்டது. மனைவியையும் மகளையும் உட்செல்லப்பணித்துவிட்டு வாயிலை நோக்கிச் சென்று பின் பரநிரபசிங்கன் தலைமையிலான சிறு கும்பலுடன் உள் வருகின்றார். “வாருங்கள் அரசே, வந்து உட்காருங்கள்” “ நான் என் தனிப்பட்ட விஷயமாக இவ்விடம் வந்தேன். உம்மையும் ஒருமுறை பார்த்துச் செல்லலாம் என வந்தேன்” கூறிக்கொண்டே இருக்கையில் அமர்ந்தார் பரநிருபசிங்கன். “மிக்க நல்லது” உள் திரும்பி “கனகம் அரசருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடு” என்று கூறிவிட்டு மீண்டும் பரநிரபசிங்கன் பக்கம் திரும்பி “நீங்கள் கண்டி சென்றீர்களே மருத்துவம் செய்விக்க, இப்போது அவர்களுக்கு சுகம் தானே?” “ஓம்! அவர்கள் மெத்த சுகம். சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் அந்நேரம் எங்கள் குடும்பத்தில் தான் துக்கம் நடந்துவிட்டது.” என்ன பண்டாரத்தின் கொலை பற்றி கூறுகிறீர்களா? அது இருக்கட்டும் நீங்கள் அரச பதவி துறந்தது பற்றியும் ஒருகதை உலாவுகிறதே” என தனது கதையைத் தொடக்கினார் அப்பாமுதலி. “என்ன மாதிரி?” “தாங்கள் செய்தது முறையல்ல என்று” “இல்லை.. இல்லை. அதுதான் சரி! என்னைவிட சங்கிலி ரொம்ப கெட்டிக்காரன், அவன் தான் அரசாளத் தகுதியானவன்”. “அது உண்மை தான். ஆனால் அப்பதவிக்கு அவன் தகுந்தவன் தானா என ஐயப்பட வைக்கிறது”. “ஏன் அப்படி?” “அவன் பட்டத்து ராணியின் மகனல்ல, அது தவிர ஒழுக்கத்திலும்…” “ஏன் ? அவன் யாரிடம் முறைதவறி நடந்தான். அவ்வாறு ஏதாவது நடந்திருந்தாலும் தனது நிலைக்குத் தக்கவாறு மாற்றிக்கொள்வான்”. “ அவ்வாறெனில் பறவாயில்லை. ஆனால் அவர் நாட்டிலுள்ள பெண்களையெல்லாம் தொல்லைப்படுத்தித் திரிகிறார். அது மட்டுமல்ல என் குடும்பத்திலும்….” சொல்ல முடியாதவாறு போலிக்கண்ணீர் வடித்து பரநிருபசிங்கனிடம் முறையிட்டார் அப்பாமுதலி. “என்ன சொல்கிறீர்? உமது குடும்பத்திலேயா? கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லுங்கள் பார்க்கலாம்”. “நானோ? இந்த ஏழை சொல்லப் பயமாக இருக்கின்றது” “ பரவாயில்லை. நான் இருக்கின்றேன். எதுவானாலும் வெளிப்படையாகக் கூறும்” “ அரசே! என் மகள் வடிவழகி மீதும் கண் வைத்துத் திரிகிறார். இது கைகூடுமானால் என் குடும்பமே கெட்டுவிடும்”. எனக் கூறி பரநிருபசிங்கன் காலில் விழுகின்றார். “முதலியாரே! பயப்படவேண்டாம். நான் சங்கிலியின் மற்றக்குற்றங்களை பொறுத்தாலும், வடிவழகி விடயத்தில் வாய்கட்டி நிற்க மாட்டேன்.” “நீங்கள் அரச பதவியை ஏற்றிருந்தால் இந்தக் கெடுதி ஒன்றும் வந்திருக்காது. என்ன செய்வது? எங்கள் தலைவிதி அவ்வளவு தான்”. எனப் பெருமூச்சு விடுகின்றார். “போனதைப்பற்றி கவலைப்பட்டுப் பயனில்லை. உம் மகள் வடிவழகியை எனது மாளிகைக்குக் கொண்டுவந்து எனது பாதுகாப்பில் விடும். அவளுக்கு ஒரு துன்பமும் நேராது”. பரநிருபசிங்கன் அப்பாமுதலியின் வீட்டிலிருந்து கிளம்பினான். “தாங்கள் இங்கு வந்தது நான் செய்த பாக்கியமே” எனப் பெரும்பாரம் இறங்கியது போல அப்பாமுதலி கூறினார். மற்றைய ஒருசோடி கண்களுக்குரியவன் சங்கிலியின் வாழ்க்கையிலேயே சூறாவளியை உண்டு பண்ணிவிட்டான். சாதிக்க வருவான்
0 Comments:
Post a Comment