-->

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 4 – அரசபாரம்)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

உச்சிவானில் ஏறி நின்று உலகத்தின் தலைமீது உருகிய தீக்குழம்பை சூரியன் வாரி ஊற்றிக் கொண்டிருந்தான். எங்கும் அனல் மூட்டம் எங்கும் கனல் கொந்தளிப்பு. எந்தக்கணத்திலும் எரிந்து சாம்பலாகிவிடலாம் என்று அஞ்சத்தக்க அத்தனை உக்கிரமான கோர வெயில். அந்த வேளையில் வேர்க்க விறுவிறுக்க வீரமாப்பாணன் தன் நண்பனைத் தேடி சோழியர்புரம் வருகின்றான். ஒருவாறு சங்கிலியைத் தேடிப்பிடித்து மூச்சிரைக்க அவன் முன் வந்து நிற்கின்றான். “என்னடா மாப்பாணா! நீ இன்னும் அரண்மனை செல்லவில்லையா? ஏன் இந்தப்பதற்றம், என்ன நடந்தது?” “அது… வந்து அரசர் உன்னை உடனடியாக அழைத்து வரக்கூறினார்.” “ என்னையா?... ஏன் என்ன அவசரம்?” “உன் மனதைத்திடப்படுத்திக்கொள், அரண்மனையில் ஒரு சோக நிகழ்வு இடம்பெற்றுவிட்டது.” சங்கிலி பதைபதைப்புடன் “என்ன?... சோக நிகழ்வா?.. என்னடா கூறுகிறாய். விளக்கமாகத்தான் கூறேன்.” “உன் அண்ணன் பண்டாரத்தை பகைவர்கள் சூழ்ச்சியால் கொன்றுவிட்டார்கள்.” “ஐயோ! என்ன கொடுமையிது, சற்று இரு நான் வடிவழகியிடம் கூறிவிட்டு வருகின்றேன்.” கிளம்பினான். அவனை மறித்த மாப்பாணன் “அவளிடம் பிறகு சொல்லிக்கொள்ளலாம். நீ முதலில் அரண்மனைக்கு வா” நண்பன் துரிதப்படுத்தினான். நல்லூர்க்கோட்டையிலே அரசனின் பிரதான மண்டபத்தில் சிம்மாசனத்தில் மன்னன் பரராஜசகரன் வீற்றிருந்தான். அவனுக்கு இருமருங்கிலும் முதன் மந்திரி தனிநாயகமுதலி, அவைக்களத்துப்புலவர் அரசகேசரி, மந்திரிகளான அப்பாமுதலி, முத்துலிங்கமுதலி, அடியார்க்கு நல்லான் அத்துடன் யாழ் கோட்டைத்தளபதி இமையானன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். சபையோ எந்தவித ஆரவாரமும் இன்றி சோகமயமாக சங்கிலியின் வருகைக்காக காத்திருந்தது. அப்பொழுது கோபம் கண்களில் கொப்பளிக்க ஆவேசமாக சங்கிலி அரசசபைக்குள் நுழைகின்றான். கூடவே வீரமாப்பாணனும் “மந்திரிகளே! பண்டாரம் கொல்லப்பட்டு விட்டானா? என் அண்ணனைக் கொண்டவர்களைப் பிடித்துவிட்டீர்களா? நான் இல்லாதபோது என்ன நடந்தது? விரிவாகச் சொல்லுங்கள்” என சபையே அதிரும்படி ஆவேசமாகக் கத்தினான். அவனைநோக்கிய முதன் மந்திரி தனிநாயக முதலி “சங்கிலி அவசரப்பாடாதே! நம் தளபதி இமையாணன் உடனடியாக கேட்டைக்குள் வைத்தே அப்பாதகனை கைது செய்துவிட்டார். ஆனால் அவன் வெறும் அம்புதான். எய்தவர்கள் வன்னியர்கள். இளவரசர் தனது அரச பணிளை முடித்துக்கொண்டு நந்தவனத்தில் இளைப்பாறிக்கொண்டிருந்த போது மிகவும் கோழைத்தனமாக இக்கொலையை அவன் புரிந்திருக்கின்றான்.” “இதைக்கேட்ட சங்கிலி சீறி எழுந்து தன்வாளை உறையிலிருந்து உருவினான். அதைக்கண்ட அவைக்களத்துப்புலவர் அரசகேசரி “சங்கிலி நீ ஆத்திரப்பட்டு பிரையோசனமில்லை. விசாரணை ஒழுங்காக நடக்கின்றது. நிச்சயம் இக்கொலையின் சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படுவார்கள்” எனக்கூறி அவனை இருக்கையில் இருத்தினார். இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரசன் பரராஜசேகரன் தன் சோகத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு “புலவர் பெருமான் கூறுவது முற்றிலும் உண்மை. சங்கிலி நீ அவசரப்படாதே! விசாரணை நடக்கின்றது. இளவரசரைக் கொன்றது துரோகம் என்றாலும் நெறிமுறையில் இருந்து நாம் சற்றேனும் தவறலாகாது தண்டிக்கவேண்டும்” என்றார். இதைக்கேட்ட சங்கிலி தந்தையைப் பார்த்து “ அரசே! இந்தக் கொலைகாரனைத் தண்டிப்பதோடு நாம் நின்றுவிடக்கூடாது. இவனை ஏவிய வன்னியருக்கும் நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்” எனக்கூறினான். அந்தவேளை கண்டி மாநகருக்கு அவ்வரசனின் வேண்டுகோளின் பேரில் ராணிக்கு சிகிச்சை செய்வதற்காக சென்றிருந்த சங்கிலியின் இன்னொரு அண்ணன் பரநிருபசிங்கன் அரசசபைக்குள் நுழைகின்றான். அப்போது அரசனைத்தவிர எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவிக்கின்றனர். தமையனைக்கண்ட சங்கிலி கண்களில் இருந்து நீர்வழிய “அண்ணா! எமது தமையனார் நயவஞ்சகரால் கொல்லப்பட்டார்” என்று கூறினான். “தெரியும் தம்பி. வரும்போது எல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். இனிப்பேசிப்பயன் என்ன? அந்தக் கொலைகாரன் எங்கே?” என வினவினான். அவனை இடைமறித்த சங்கிலி “அண்ணா உண்மைக் கொலைகாரன் அவனல்ல, அவனை ஏவியவர் வன்னியர். அவர்கள் மீது நாம் போர் தொடுத்து வென்று எம் அண்ணன் ஆத்மாவைச் சாந்திப்படுத்த வேண்டும். அரசரின் உடல் பலவீனம் காரணமாக அரசபொறுப்புக்களை இதுவரை பண்டாரம் கவனித்துக்கொண்டான். இப்போது அந்தப்பதவிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். போருக்கான சகல ஏற்பாடுகளையும் நானும் தளபதியவர்களும் கவனித்துக் கொள்கின்றோம்” என்று கூறினான். “தம்பி! வரும்வழியில் பண்டாரத்தின் கொலைச்செய்தியை கேட்டதில் இருந்து என் மனம்குழப்பமடைந்து காணப்படுகின்றது. எனக்கு அரசவாழ்க்கையே வெறுக்கின்றது. ஆன்ம ஈடேற்றத்துக்கு வேண்டிய வழியையே என் மனம் நாடுகின்றது. ஆகவே இவ் அரசபாரத்தை நான் தாங்கவில்லை. நீயே இதற்கு என்னைவிடப் பொருத்தமானவன். ஆதலால் நீயே இனி அரசபொறுப்பை ஏற்றுக்கொள்.” என்றான் பரநிருபசிங்கன். “அண்ணா! இதுமுறையா? தமையன் இருக்க நான் எப்படி அரசுக் கட்டில் ஏறமுடியும். இது தவறு” எனச் சங்கிலி சுட்டிக்காட்டினான். இடைமறித்த அரசகேசரி “இளவரசே! அண்ணன் சொல்வதைக்கேட்டு அரசை ஏற்றுக்கொள்வது குற்றமல்ல, உங்களுக்கு நாங்கள் அனைவரும் எங்கள் பூரண ஆதரவைத்தருவோம்” எனக்கூறினார். இதைக்கேட்ட அரசன் “என் புதல்வர்களின் விருப்பம் எதுவோ அதன்படி எல்லாம் நடக்கட்டும், எனக்கோ வயதாகிவிட்டது. ஆகவே நிச்சயம் ஒருவர் அரசுப்பொறுப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும். சங்கிலி! நீ உன் அண்ணன் விருப்பப்படியே அரசுப்பொறுப்பை பெற்றுக்கொள். யாழ்ப்பாணத்தரசரின் புகழும், வீரமும் குறையாத வகையில் பரிபாலிப்பது உன் கடன்” எனக் கூறிமுடித்தார். இதைக்கேட்ட மந்திரிகளும் அவையோரும் ஒருமித்த குரலில் “யாழ்ப்பாணத்தரசன் சங்கிலி வாழ்க!” என ஜய கோஷமிட்டனர். சங்கிலியை நோக்கிவந்த பரநிருபசிங்கன் “ தம்பி எல்லோரும் வியக்கும் படி நல்லாட்சி புரி. வன்னியர் மீதான படையெடுப்பை கொஞ்சம் தாமதப்படுத்து. போரெனில் இருபக்கமும் அழிவுகள் நிறையவே ஏற்படும். நீ அரசேற்ற கையுடன் பல இளம் பெண்களை விதவைகள் ஆக்காதே! இது எங்கள் குலத்திற்குத் தான் அவமானம்” எனக்கூறிச்சென்றான். அவை கலைந்ததும் தனித்துவிடப்பட்ட சங்கிலியும் வீரமாப்பாணனும் பெரும்பாரம் தலைமீது இறங்கியதால் பிரமை பிடித்துப்போய் நின்றார்கள். “அரசே! இனி உங்களுடன் ஊர் சுற்ற முடியாது” என நகைச்சுவையுடன் மாப்பாணன் கூறினான். “அதிருக்கட்டும் இந்த புதியபதவியை வடிவழகி அறிந்தால் பெரிதும் சந்தோஷப்படுவாள். அவளைக்காணச் செல்லவேண்டும்” என நினைத்தான் சங்கிலி. ஆனால் அதற்கு மாறாக பெரிய ராஜாங்க சுமை அவன் தலையில் விழுந்தது. அந்தச் செய்தியுடன் ஒற்றர் படைத்தலைவன் சங்கிலியைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்.


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner