பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
சங்கிலி, அப்பாமுதலியின் மகள் வடிவழகி மீது ஒரு கண்ணை வைத்திருப்பதை அறிந்த பரநிருபசிங்கன் பெரிதும் வெகுண்டான். “ இவனெல்லாம் ஒரு அரசனா? நல்ல படியாக ஆட்சி செய்வான் எனக்கருதி எனது அரசுரிமையை அவனிடம் ஒப்படைத்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டதே! எமது குலத்திற்கே அபகீர்த்தி தேடித்தரப் போகிறானே!” என்று கடுஞ்சினங் கொண்டு, ஊர்காவற்துறையில் அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்த காக்கைவன்னியனுக்கு ஒரு ஓலை எழுதி முத்திரையிட்டு தனது அந்தரங்கத்திற்கு பாத்திரமான ஒரு தூதனிடம் இரகசியமாகக் கொடுத்தனுப்பினான். ஏற்கனவே சங்கிலி மீது பகைபூண்டிருந்த காக்கைவன்னியன் பரநிருபசிங்கனின் தூதுவனை சிறப்பாக வரவேற்று அவன் கொணர்ந்த ஓலையை ஆவலாகப் பிரித்துப் படித்தான். அது கீழ்க் கண்டவாறு இருந்தது. காக்கைவன்னியனுக்கு, சங்கிலி முறைதவறி ஆட்சி நடத்துகின்றான். அவன் ஆட்சியில் மக்கள் சந்தோசமாகவே இல்லை. அவன் ஆட்சியை ஒழிக்க வேண்டும். ஆனால் அது கடினம். மந்திரிகளும் பிரதானிகளும் அவன் பக்கம் இருக்கின்றார்கள். நாட்டில் ஏற்பட்ட பல கலகங்களையும் அடக்கி விட்டான். ஆதலால் அவனை நானோ, நீயோ வெற்றி காண முடியாது. இதனால் நீ பறங்கிகள் உதவியை நாடு. விரைவாக இதற்கான முடிவைக்காண். பரநிருபசிங்கன். ஓலையைப் படித்த காக்கைவன்னியன் உடனடியாகவே பறங்கித் தளபதிகளை சந்திப்பதற்காக மரக்கலமேறித் தரங்கம்பாடியை அடைந்தான். அவனை வரவேற்ற பறங்கியத் தளபதி பிரகன்ஸா “என்ன சகோதரரே! திடீர் விஜயம். ஏதேனும் எங்களால் ஆதாயம் கிடைக்க வேண்டுமா?” என்றான். “ஆதாயம் வேண்டும் தான். ஆனால் அதனால் என்னைவிட உங்களுக்கு தான் பயன் அதிகம்” என்றான் வன்னியன். “என்ன கூறுகிறாய்… எமக்கு ஆதாயமா?” “ஆம்…” “விளக்கிக் கூறு பார்ப்போம்” “நீங்கள் யாழ்ப்பாணம் மீது படையெடுத்து வரவேண்டும்” “வேண்டவே வேண்டாம். சங்கிலியைப் பற்றி எங்களுக்கு உன்னைவிட நிறையவே தெரியும். அவனை எதிர்க்க முடியாது. எங்களை நீ கட்டாயப்படுத்தாதே. எங்களுக்கு எங்கள் உயிர் முக்கியம். பேராசைப்பட நாம் தயாராக இல்லை” எனத் தீர்மானமாகக் கூறினான். “நீங்கள் நினைப்பது போலில்லை. அங்கு இப்பொழுது அவனுக்கு பல எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. அவன் அண்ணன் தான் எங்களுக்கு இந்த திட்டத்திற்கான அனுமதியையே தந்தான். உங்களுக்கு பல முனைகளில் ஆதரவு கிடைக்கும். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு உங்களுக்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது” எனப் பறங்கியர்களின் மனதை மாற்றினான். இதனால் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரச் சம்மதித்தனர். “எப்பொழுது யாழ் வருவீர்கள்?” ஆவலுடன் வன்னியன் கேட்டான். “சீக்கிரமே புறப்பட்டு விடுவோம். எப்படியும் அடுத்தவாரமளவில் வருவதற்கு முயற்சிக்கின்றோம். சங்கிலி அண்ணனிடம் யாழில் எங்களுக்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தச் சொல்லு” என பிரகன்சா கூறினான். இந்த சந்தோச செய்தியை காக்கை வன்னியன் ஊர்காவற்துறை திரும்பிய உடனேயே ஒரு தூதுவனிடம் கூறி பரநிருபசிங்கனிடம் அனுப்பினான். திட்டமிட்டபடியே உரிய காலத்தில் பறங்கியர்கள் வர்த்தக வேடமிட்டு விநோத பண்டங்களுடன் பண்ணைத்துறையில் வந்திறங்கினார்கள். அவ்வாறே யாழ் கோட்டைக்கும் வந்து சங்கிலியைச் சந்தித்தான் பிரகன்சா. அவனுடன் பறங்கிகளின் உயர்மட்ட தலைவர்களும் வந்திருந்தனர். இவற்றைவிட பிரகன்சாவின் காதலியான ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும் சங்கிலி அரசசபைக்கு வந்திருந்தாள். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்களைக் கவர்ந்திழுக்கும் நீலக்கண்களுடனும், பொன்னிற முடியுடனும் காணப்பட்ட அவளைப்பார்த்த சங்கிலியே ஒருமுறை நிதானம் தவறிப்போனான். முழங்காலுக்கு மேல் தொடையின் அரைப்பகுதிவரை ஏறியிருந்த வெள்ளைநிறக் கவுனுடன் கழுத்திலிருந்து மார்புவரை அர்த்த சந்திர வடிவமாக வெட்டிவிடப்பட்ட கவுனின் மேற்பகுதியும், அறவே கைகளற்ற தோள்வரை மட்டுமே தழுவி நின்ற அந்தக்கவுனினால் அவளது திண்ணிய பருத்த மார்பகத்தின் பெரும்பகுதி வெளிப்படையாகவே தெரிந்தது. விலையுயர்ந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட சங்கிலியொன்று அவர் மார்பைத் தழுவியிருந்தது. இவற்றை ஓர் பார்வையிலேயே அளவெடுத்த சங்கிலி “இரத்தினத்திற்கு அடித்த யோகம்” என ஆதங்கத்துடன் மனதில் கூறியதோடு தன் மனதையும் திடப்படுத்திக் கொண்டான். பேச்சை ஆரம்பித்த பிரகன்சா, “ வணங்குகிறோம் பிரபு! உங்கள் நாட்டின் வளம் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வியாபாரம் செய்தால் நிறையச் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் இங்கு வந்து இறங்கினோம். நாங்கள் உங்கள் நாட்டில் வியாபாரம் செய்ய நீங்கள் அனுமதி தரவேண்டும்” எனக் கோரினான். அவனைக்கண்களாலேயே அளவெடுத்த சங்கிலி “ நீங்கள் கூறுவதை எவ்வாறு நம்புவது. வியாபார நோக்கோடு வந்த நீங்கள், உங்களை வளப்படுத்திய பிறகு எங்களுக்கு எதிராகத்திரும்புவீர்கள்” என தனது ஐயத்தைத் தெரிவித்தான். இதற்கிடையில் அவையிலிருந்த பரநிருபசிங்கன் “சங்கிலி! இவர்கள் மன்னாரில் வந்திறங்கிய பறங்கிகள் அல்ல. இவர்களது நோக்கமும் எங்களுக்கெதிரானது அல்ல. பாவம்! வயிற்றுப்பிழைப்புக்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா?” எனக் கூறினான். அப்பாமுதலியும் அவன் கூற்றை ஆதரித்தார். இதனால் மனம் மாறிய சங்கிலி பறங்கித் தளபதியைப் பார்த்து “நீங்கள் கூறவது உண்மையானால் பகற்காலத்தில் மட்டுமே, நகர்வந்து வியாபாரம் செய்ய வேண்டும். இரவில் மீண்டும் உங்கள் கூடாரங்களுக்கு திரும்பிவிட வேண்டும். இதற்குச் சம்மதமானால் எங்கள் நாட்டில் தங்குங்கள்” என்று கூறினான். அதற்கு உடன்பட்ட பறங்கிகள் அவ்வாறே செய்வதாகக் கூறிச்சென்றனர். பறங்கிகளுக்கும் தனக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தயின்போது அவர்களுடன் வந்திருந்த தங்க விக்கிரகம் தன்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்த சங்கிலி ஏக்கப்பெருமூச்சொன்றை வெளிவிட்டான். அண்ணன் பேச்சைக் கேட்டு பறங்கிகளை குடியமர்த்தியதன் விளைவை சிறிது காலத்திலேயே சங்கிலி உணர்ந்தான். அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கே வில்லங்கமாகிவிட்டது. சாதிக்க வருவான்…
0 Comments:
Post a Comment