-->

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 16- பறங்கிக் கோட்டை)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

இளவேனிற் காலத்தின் சுகந்தவளி சுகமாக வீசிக் கொண்டிருந்த ஒரு பொழுது, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல நிகரற்ற சௌந்தர்யத்துடன் மலர்கள் மொட்டு விரித்து முறுவலித்துக் கொண்டிருந்தன. உதிர்ந்த மலர்களை மரகத வண்ணப் பசும்புல் தரை ஏந்தி தன் மடியில் கிடத்திக் கொண்டு தாய்மை எழிலுடன் காட்சி தந்தது. அவ்வற்புத அழகு இரகசியங்களை கவிதையாக்கி தம் தீங்குரலால் வானவர்க்குப் பாடிக் காட்ட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் நீல விண்ணின் விசும்பு மேல் ஏற முயன்று முயன்று தோல்லியடைந்து கொண்டிருந்தன சில வானம்பாடிகள்… இந்த அற்புதங்களையெல்லாம் தாங்கி வீராப்புடன் நிமிர்ந்து நின்றது யாழ் மண். வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற பறங்கியர்கள் தமது மரக்கலம் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தாம் கொண்டு வந்த பொருட்களை நகருக்குள் விற்றுச் சென்றனர். இவ்வாறே சில காலங்கள் சென்றன. பின் அவர்கள் தாம் தந்த வேலையைக் காட்டத் தொடங்கினர். பறங்கிய முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசித்த தளபதி பிரகன்சா அவர்களைப் பார்த்து “இப்பொழுது சங்கிலிக்கு எம்மீது பூரண நம்பிக்கை வந்துவிட்டது. இதனால் இனி நாம் வந்த வேலையைக் காட்டத் தொடங்கலாம்.” எனக் கூறினான். “அதற்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?” பறங்கிய முக்கிய தளபதிகளில் ஒருவனான தொன்பிலிப்பு கேட்டான். “நாம் மெதுவாக மரக்கலங்களை விட்டு நகருக்குள் காலூன்ற வேண்டும்” “முடியுமா?” “முயன்றால் முடியும். எம்மீது உள்ள நம்பிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சங்கிலியிடம் சென்று நமக்காக நிலம் கேட்க வேண்டும்.” “அவன் கடுமையானவனாயிற்றே! நமக்கு அனுமதி தருவானா?” “கேட்கின்ற விதத்தில் கேட்டால் நிச்சயம் தருவான். அந்த வேலையை நான் பார்த்துக் கொள்கின்றேன். நாம் முதலில் நல்ல ஒரு நாளில் சங்கிலியை சந்திக்க வேண்டும்” “வெறுங்கையுடன் சென்று சந்தித்தால் அவ்வளவு நல்லாயிராதே!” “அதற்கும் ஏற்பாடு செய்து விட்டேன். இந்தியாவிலிருந்து விலையுயர்ந்த திரவியங்களை இறக்குமதி செய்து விட்டேன்.” எனப் பெருமையுடன் கூறினான் பிரகன்சா. “அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. நாம் விரைவாகவே சங்கிலியைச் சந்திப்போம்” என்றான் தொன்பிலிப்பு. பறங்கிகள் தமக்குள் நடந்த ஆலோசனையின்படி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த பட்டாடைகள், பல வாசனைத்திரவியங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் சங்கிலியை கோட்டையில் வந்து சந்தித்தார்கள். “என்ன வீரர்களே! யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? ஏதாவது வசதிக்குறைவு ஏற்பட்டுவிட்டதா?” என வந்திருக்கும் பறங்கியர்களை ஒருமுறை அலசிப்பார்த்து கேட்டுக் கொண்டான். வந்திருந்தவர்களில் அன்று வந்த வெள்ளைக்காரியைக் காணாததால் சிறு ஏமாற்றத்துடன் சம்பாசனையைத் தொடர்ந்தான். “இல்லைப் பிரபு! உங்கள் உதவியால் நாம் பெரிதும் மகிழ்ச்சியாகவே உள்ளோம். உங்களுக்கு நிறையவே கடன் பட்டுள்ளோம். அதற்கான சிறிய உபகாரமாக நாம் கொண்டு வந்திருக்கும் பொருட்களை ஏற்க வேண்டும்” என பிரகன்ஸா கூறினான். அவன் வேண்டுகோளின் படி அப்பொருட்களை ஏற்றுக் கொண்ட சங்கிலி “உங்களுக்கு ஏதாவது குறை ஏற்படுமிடத்து தயங்காமல் என்னிடம் தெரிவியுங்கள்” எனக் கூறினான். நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பறங்கியத் தளபதி “மகாராசாவே! பகலெல்லாம் உணவின்றி நகருக்கு வந்து வர்த்தகம் செய்தவிட்டு இரவில் எங்கள் மரக்கலங்களுக்கு சென்று போசனஞ் செய்து நித்திரை கொள்கின்றோம். அது பெருங்கஷ்டமாகவே இருக்கின்றது. ஆதலால் நாம் கரையிலேயே ஒரு வீடு கட்டி அதிலிருந்து நகர்வந்து வர்த்தகம் செய்ய அனுமதி தரவேண்டும்” எனத் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டான். இவ்வேண்டுகோளைக் கேட்ட சங்கிலி தனது சந்தேகக் கண்களை தனது தளபதி மீது நாட்டினான். அவன் கண்களிலும் சஞ்சலம் நிறைந்திருப்பதைக் சங்கிலி கண்டான். இதனை அவதானித்த சபையிலிருந்த பரநிருபசிங்கன் “ சங்கிலி என்ன யோசிக்கின்றாய்? அவர்கள் கேட்பது நியாயம் தானே! பாவம்! அவர்களுக்கு இந்தச் சிறு உதவியையாவது செய்யாவிடின் நாம் மனித இனம் என்பதை வெளியில் கூறமுடியாது. இதற்கு அனுமதியை வழங்கு” எனக் கூறினான். “இல்லை அண்ணா!...” எனத் தொடங்கிய சங்கிலியின் வார்த்தையை இடைமறித்த மந்திரி அப்பாமுதலி “அண்ணா சொல்வது சரி, சங்கிலி அவர்களுக்கு அனுமதி வழங்கு” எனக் கூறினார். வேறு வழியில்லாது முதன் மந்திரி தனிநாயக முதலியும் சங்கிலியை அனுமதி வழங்குமாறு கூறினார். சபையினரது ஆலோசனைக்கு ஏற்ப சங்கிலியும் பறங்கியினருக்கு மிருகங்கள் சஞ்சரிக்கும் அடர்ந்த காடாயிருந்த பண்ணைக் கடலுக்கு சமீபமான நிலப்பரப்பை வழங்கினான். மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்ற பறங்கிகள் காடாயிருந்த அப்பிரதேசத்தை துரிதமாக துப்பரவு செய்து, வீடு கட்டுவது என்ற போர்வையில் மண்ணாலான சிறு கோட்டை ஒன்றைக் கட்டினார்கள். காலப்போக்கில் அதைப் பலப்படுத்திக் கொண்டார்கள். கோட்டையின் பாதுகாப்பிற்காக பெரிய அகழிகளைத் தோண்டினார்கள். அத்துடன் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், போதியளவு சேர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிலிருந்து படைவீரர்களையும் கடல் மார்க்கமாக வரவழைத்துக் கோட்டைக்குள் இருத்திக் கொண்டார்கள். இந்த நடவடிக்கைகள் சங்கிலிக்கு புலப்படாத வகையில் வழக்கம் போல நகருக்கு வந்து வர்த்தகம் செய்து வந்தார்கள். யாழ்ப்பாணம் எதிர்நோக்கியிருந்த பேரவலத்தை அறியாத சங்கிலி நிம்மதியாக யமுனா ஏரியின் அழகைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனை நோக்கி வந்தது பேரழகு அதிர்ச்சி. சாதிக்க வருவான்…


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner