-->

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ( 29.07.1967 -02.11.2007) நேற்றுவரை புன்னகை பூத்தபடி ஊடகவியலாளர்களையும், சர்வதேச இராசதந்திரிகளையும் ஏன் தனது எதிர்தரப்பில் உள்ள சிறிலங்கா அரசியல் தலைவர்களையும் எதிர்கொண்ட, அரசியற்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் கடந்த 2007 நவம்பர் 2ம் திகதி வெள்ளியன்று காலை சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். உண்மையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பொறுப்பாளர். ஆனால் எங்களின் பிரதிநிதியாக உலக அரங்கில் செயற்பட்டவர் என்பதனால் அவர் எங்களில் ஒருவராய், ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதியாக எங்கள் உணர்வுகளில் நிறைந்திருக்கிறார். இதன் தாற்பரியத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ, சிங்கள தேசம் நன்றாகப்புரிந்து கொண்டிதிருந்தது. அதானால்தான், அவர் மரணத்தையிட்டு மகிழ்ந்து ஆரவாரித்தது. இந்த மனிதாபிமானமற்ற செய்கைகள் மூலம் சிங்களம் தன்னை இனங்காட்டிக் கொண்டதுடன், உலகத்தமிழனத்தின் உணர்வுகளை உலுப்பிவிட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் என்ற தமிழர்களின் புதல்வன் தன் மரணத்தின் மூலமும் தன்னினத்தின் மனக்கதவுகளைத் தட்டிச்சென்றிருக்கிறான். 1993 ல் என நினைக்கிறேன் தமிழ்ச்செல்வன் அவர்கள் அரசியற்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது, அவரை முதன் முதலில் பி.பி.சியின் தமிழ்ச்சேவை பேட்டி எடுத்திருந்தது. " இதுவரை ஒரு இராணுவத்தளபதியாக இருந்த நீங்கள் இப்போது அரசியற்துறை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இரண்டுக்குமிடையில் வேறுபாட்டைக் காணவில்லையா" என வினவியபோது, அப்படியெதுவும் வித்தியாசமில்லை இரண்டுமே விடுதலைப்போராட்டத்திற்கானது என்பதாக அவர் பதிலளித்திருந்தார். தமிழ்ச்செல்வனைப் பொறுத்தவரை இவை வெறும் வார்த்தைகளல்ல, அவர் விடுதலைப்போராட்டத்தில் எக்காலத்திலும், எந்தப்பணியையும் செய்யத்தயாராய் இருந்தார் என்பதனை தனது 23 வருடகால விடுதலைப்பணியில், அவரது இறுதி நிமிடம் வரையும் செய்துகாட்டினார். அந்த இளவயதில், அவருக்கு தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்ட இயக்கத்தின் பெரிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டபோது அது பலருக்கு வியப்பாகவும் அதே சமயம் ஏற்புடையதாகவும் இருக்கவில்லை. அவர் அரசியல் விஞ்ஞானத்தையோ சர்வதேச உறவுகள் பற்றியோ எந்தப் பல்கலைக்கழகத்திலும் கற்கவில்லை என்பது கூட சிலருக்கு அவர்மீது அசிரத்தையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் கால ஓட்டத்தில் ஈழத்து இராசதந்திரியாக, அவர்பேச்சுவார்த்தை மேசையிலும், சர்வதேச அரங்கிலும் சாதித்தவை, இன்று அவருக்கு மாற்றீடு இருக்கிறதா என்று கவலைகொள்ள வைத்துள்ளது. 1967 ம் ஆண்டு யூலை 29ம் திகதி மட்டுவிலில் அரசியல் பிரதிக்ஜை கொண்ட தொழிலாளியான திரு. பரமு, திருமதி விசாலாட்சி பரமு தம்பதியினரின் ஐந்தாவது பிள்ளையாக பிறந்த தமிழ்ச்செல்வன் மட்டுவில சாந்தநாயகி வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் உயர்கல்வியையும் கற்றார். 1983 ம் ஆணடு இனக்கலவரத்தினை தொடர்ந்து பல தமிழ் இளைஞர்கள் விடுதலைப்போராட் இயக்கங்களில் இணைந்து கொண்டதுபோல், 1984ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தமிழ்ச்செல்வன் இணைந்து கொண்டார். தமிழ்நாட்டில்; இயக்கத்தின் நான்காவது பயிற்சி அணியில் பயிற்சி பெற்ற அவர்ஆரம்பத்தில் தேசியத்தலைவர் திரு. பிரபாகரனின் தொடர்பாளராகச் செயற்பட்டார். பின்னர் மருத்துவப் போராளியாகவும் செயற்பட்டுள்ளார். 1987 ல் இந்திய இராணுவம் நிலைகொண்ட காலத்தில், தென்மராட்சிப் பிரதேசப் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் அவருக்கு முன்னர் அப்பிரதேசப் பொறுப்பாளராகவிருந்து கைதடியில் விபத்தொன்றில் வீரச்சாவடைந்த மேஜர் கேடில்ஸ் போன்று தென்மராட்சி மக்களின் மனங்களில் இடம்பிடித்துக் கொண்டார். விடுதலைப்புலிகள் இயக்கம் ஆனையிறவு படைத்தளம் மீது நடாத்திய முதல் மரபுவழிப்போரிலும், பூநகரி சிறிலங்கா இராணுவ முகாம் மீதான ஈருடகத் தாக்குதலிலும் பங்கெடுத்துக் கொண்ட தமிழ்ச்செல்வன்; இச்சமர்களில் விழுப்புண் அடைந்தார். காலில் ஏற்பட்டகாயத்தினால் அதன்பின்னர் அவர் கைத்தடியினுடனேயே இயங்கவேண்டியதாயிற்று. இருப்பினும் கடைசிவரை கைத்தடியின் உதவியுடனே வன்னியின் மூலை முடுக்களிலிருந்து உலகத்தலை நகரங்கள் வரை வலம் வந்;தார். இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற சிறிலங்கா அரசுடனான பேச்சுவாரத்தையில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சுகயீனம்காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. பேச்சுவார்ததை மேசைகளில் ஒரு புலியாக இருந்த பாலசிங்கம் கலந்து கொள்ளாதமை சிறிலங்கா தரப்பிற்கு ஆறுதலைக் கொடுத்தபோல் தமிழ் மக்களுக்கும் கவலையைத் தோற்றுவித்திருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு தலைமையதாங்கிய தமிழ்ச்செல்வன் அதனை மிகவும் கனகச்சிதமாக கையாண்டு தனது ஆளுமையை வெளிப்படுத்தினார். இறுக்கமானதும், பேச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்காததுமான விடுதiலைப்புலிகள் இயக்கத்திற்கும் வெளியுலகிற்குமான தொடர்பாளராய் எப்போதுமே முகமலர்ச்சியுடன் செயற்பட்ட திரு.தமிழச்செல்வன்; இப்போது எங்களுடன் இல்லை. இழப்புக்கள் இந்த இனத்திற்கு புதியன அல்ல, இழப்புக்களிலிருந்து உறுதிபெறும் ஒரு இனத்திலிருந்து இன்னும் பல தமிழ்ச்செல்வன்கள் உருவாகுவார்கள். எனினும் தமிழ்ச்செல்வனின் நினைவுகள் எப்போதும் எங்களுடன் வாழும். அந்த உணர்வு என்றும் எங்களை செயற்படவைக்கும்.


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner