-->

நீதிமன்றில் தொடர்ந்த வாதம் 1983

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

தங்கதுரை   தங்கதுரையின் நீதிமன்ற வாதம் மேலும் தொடர்கிறது - நான் வேறானாலும்கூட ஒரே தீவின் பிரஜைகள் என்ற வகையில் உங்கள் புரிந்துணர்வைப் பெற வேண்டும் என்ற நல்நோக்குடனேயே இவ்வழக்கின் விசாரணைக்கு நாம் சமூகமளித்தது மட்டுமல்லாது, இன்று எமது நிலையையும் உங்கட்கு தெளிவாய் காட்டினோம். இதனால் ஏற்படும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்தில் எம்பொருட்டு நீங்கள் குரல் கொடுப்பீர்களே ஆயின், மிக்க மனநிறைவை எய்தியவர்களாவோம்.   இல்லாவிடினும்கூட தற்போதைய சமூக, பொருளாதார நடவடிக்கைகளே தொடர்ந்து அதன் சுமை தாங்காது என உணர்ந்து அதன் தளைகளை உடைத்து உங்களை விடுவிக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் மிக உறுதுணையாய் இருப்போம் என்பதை மனப்பூர்வமாய் உங்கட்கு தெரிவிக்கிறோம்.   தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றேதான் எமது முற்றான பணி. ஈழத்திய தமிழர், தமிழராய் தொடர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி என்பதனை ஸ்ரீலங்கா அரசு எம்மைப் பல வழிகளிலும் உந்தியதன் மூலமே அவ்வழியில் மிக முனைப்பாய் உள்ளோம்.   எமது நோக்கு மிக விசாலமானது. ஆப்பிரிக்கக் கண்டம் என்றால் என்ன, லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சகதேசத்தவரான மக்களின், குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படிப் போகும்.   இப்படி இருக்கையில், ஸ்ரீலங்காவின் போலீஸப்ர் மட்டுமே உங்கள் பார்வையில் அப்பாவிகளாய் தோற்றம் தருகின்றார்களா? பச்சைக் கொலையாக 1977-ஆம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத் தீவின் மேல் கவிந்திருந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்குப் பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? தமிழ் மக்களைக் கொலை செய்தவர்கள் மட்டுமே அப்பாவிகளாகவும், குற்றம் செய்யாதவர்களாகவும் உங்களுடைய கண்களுக்கு தோற்றம் தருகின்றார்களா? தமிழ் மக்களின் உயிர், உடைமை என வரும்போது உங்கள் சிந்தனையின் மெல்லிய உணர்வுகள் அறவே மரத்துவிடுகின்றனவா? அல்லது அப்படியான ஓர் உணர்வு உங்கள் வாழ்வில் புரியாத ஒரு மொழியா?   நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மன நோயாளிகளோ அல்லர். மாறாக, விடுதலையை முன்வைத்துப் போராடும் ஒரு ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்.   சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். எமது பூமியில் மட்டுமல்லாது உங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் மீது பல தடவைகள் உங்கள் நாட்டு அதிகார அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தைச் சரி என நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அன்றியும் இவை மட்டுமல்லாது நம்மை நாம் அல்லாதவராக்கும் முயற்சியில் பல வழிகளிலும் ஈடுபட்டு வரும் உங்கள் அரசின் நாகரிகமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து எம்மக்களை மீட்க நாம் முன்னின்றமையைத் தான் தவறு என்று சொல்வீர்களா?   அப்படியான ஓர் உயர்ந்த லட்சியத்தை முன்வைத்துப் போராடிய எம் மீது பயங்கரவாதத் திரையைப் போர்த்தி, உங்கள் நாட்டுச் சட்டங்களிலும் பயங்கரவாதத்தைப் புகுத்தி புதுப் பெருமையைத் தேடிக்கொண்ட உங்கள் அதிகார அமைப்பு எம்மீது விசாரணை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்புகளையும் சரி என ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது பாதிக்கப்படுபவன் தமிழன்தானே என்ற பொறுப்பற்ற உணர்வா? அப்படியாயின் தற்போதைக்கு உங்கள்மீது எம்மால் அனுதாபம் கொள்ள மட்டுமே முடியும்.   நாம் விடுதலை பெறுவது நிதர்சனமான உண்மை. அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச்சட்டங்களும் எம்மை அணுகா. அப்படியாயின் இச்சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுப்பீர்கள் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா?   இரு அயல் தேசங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. மாறுபட்ட கொள்கை உடைய எத்தனையோ நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு என்ற விஷயங்களுக்காகச் சில பொதுக் கோட்பாடுகளுக்கு இடையில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வரவில்லையா? அதற்காக அந்நாடுகள் தமது இறைமையை விட்டுக் கொடுத்து விட்டன என நாம் சொல்ல முடியுமா?   இவ்வுலகின் வல்லாதிக்கம் கொண்ட சில சக்திகள், தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாய் மூன்றாம் மண்டல நாடுகளைப் பொருளாதார ரீதியில் தலையெடுக்க விடாது செய்து வரும் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதத்தில், இந்த உபகண்டத்தின் தன்னாதிக்கமுள்ள முற்போக்குக் குடியரசுகள், இவ்வுபகண்ட நன்மை கருதி அதற்கு ஒரு பொது அமைப்பையோ அல்லது எந்தக் குடியரசினதும் தன்னாதிக்கத்திற்கு பங்கம் வராவகையில் பல குடியரசுகள் கொண்ட ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பட்சத்தில் உபகண்ட நன்மை கருதி தமிழ் ஈழம் நிச்சயமாக தன் பங்களிப்பை வழங்கும்.   இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை. இம்மன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. எமக்குத் தெரியும் உங்களது சங்கடமான நிலைமை. சுயேட்சையான நிர்வாகம் அருகிவரும் உங்கள் அரசியல் அமைப்பில் நீதி நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் அரசைத் திருப்தி பண்ணியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருப்பது இயல்பே.   இந்நிலையில், தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மெனக்கெடுவதற்கு ஏதுமில்லை. எமது இயக்கத்தின் மீதும் இம்மன்றத்தில் நடத்தி முடிக்கப்பட இருக்கும் இரண்டாவது வழக்கு இது. இனி எத்தனை வழக்குகள் எம்மீது உங்களால் சோடிக்கப்பட்ட போதும் நாமும் விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டது எனும் நிலை இவ்வழக்குடன் பூர்த்தியாகின்றது. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு நாம் செய்யும் உதவி இதுவே.   தற்போதைக்கு இவ்வழக்கின் மூலம் உண்மை நிலையை உலகிற்கும், குறிப்பாய் இத்தீவின் மக்கள் யாவர்க்கும் உணர்த்திவிட்ட மகிழ்வே எமக்கு மேலோங்கி உள்ளது. மக்களின் மனத்தீர்ப்பே எமக்கு முக்கியமானவை. அவர்கள் தீர்ப்பு நிச்சயமாய் எமக்கே சாதகமாய் அமையும் என்ற நிறைவே எய்தியுள்ளோம்.   இனி எம்மீது எத்தனை வழக்குகள்தான் சோடிக்கப்பட்டாலும், எத்தனை அவதூறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் எமக்கு அதுபற்றிக் கவலை இல்லை. உங்களது அந்த நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறப்போவதும் நாமே. உங்கள் தீர்ப்பின் பாதிப்புகள் எம்வரை அந்நியமானவையே.   எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தைச் சிறையில் கழிக்கவோ- வேண்டுமாயின் மரணத்தைக் கூடத் தழுவவோ நாம் தயங்கவில்லை.   ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிகச் சர்வ சாதாரண சம்பவங்களே! இதை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவுமே இல்லை. எதை எய்கின்றோமோ அதுவேதான் நம்மிடம் திரும்பி வரும், எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான். நாம் விதைத்தவை விஷ விதைகளுமல்ல, எய்தவை நச்சு பாணங்களுமல்ல. அதனால்தான் இந்த நிமிடத்திலும் நான் மிகத் தெளிவாக மனநிறைவுடன் நிற்கின்றேன்.   வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஈழம் அகன்று போகட்டும் வறுமையும் அணுவாயுதப் பயமுறுத்தலும். ஒழிக பசியும் பிணியும். ஓங்கட்டும் மனித நேயம். தங்கதுரை வாதம் முடிந்ததும் நீதிமன்றம்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner