-->

தங்கதுரையின் சூளுரை <1983 நீதிமன்றில்>

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

  தங்கதுரை   கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, விசாரித்தபோது ஈழத் தமிழர்களின் பிரச்னை என்ன என்பதைத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை தெரிவித்த கருத்துகள் வரலாற்றுப் புகழ்பெற்றவை. அந்த உரை, தனக்கு மரண தண்டனை நிச்சயம் என்பது தெரிந்திருந்தும் தனது கொள்கைகளிலிருந்து மாறாது உறுதியாய் நின்ற சாக்ரட்டீஸின் உரைக்கு நிகரானது அந்த உரை. நவீன கால உதாரணம் சொல்ல வேண்டுமானால், கியூபாவின் விடுதலைக்காக ஆயுதமேந்தி அப்போதிருந்த அரசிடம் மாட்டிக் கொண்டு நீதிபதிமுன் நிறுத்தப்பட்ட ஃபெடல் காஸ்ட்ரோவின் உரைக்கு ஒப்பானவை எனலாம்.   1983- ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை நிகழ்த்திய வாதத்திலிருந்து: *   ''கனம் நீதிபதி அவர்களே!   ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.   நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம்.   எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு.   வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.   இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல.   இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?   நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.   இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன?   காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.   இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர்.   இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?   பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு.   இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?   பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.   ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை.   இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று.   இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.   எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.   எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.   ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.   வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு - நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு - தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.   தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.   உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே.   இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.   விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ''இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?'' என்றார்.   ''எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது.   நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?   மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸப்ரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம்.   * நாம் வன்முறைமீது காதல் கொண்ட  


1 Comment:

Santhosh said...

மேற்கூறிய கருத்துைர செய்திக்கு நன்றி . வார பலன், மாத பலன், வருட பலன் மற்றும் காதல் ராசி பலன்,ஆன்மீகம் போன்றவற்றை பற்றி தகவல் பெற www.yourastrology.co.in என்ற தளத்திற்கு சென்று பார்க்கலாம். மேலும், 'ஜாமக்கோல் ஜோதிடம் சாப்ட்வேர்' இந்த தளத்தில் தான் முதல் முறையாக வெளியிட பட்டுள்ளது.

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner