-->

கரும்புலிகள் உயிராயுதத்தின் முதல் வித்து-கப்டன் மில்லர்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கரும்புலிப்போர் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. வீரத்தினதும் - உயிர்ஈகத்தினதும் - மனஉறுதியினதும் அதிஉயர்வடிவமாக கரும்புலிப் போர்முறை உள்ளது. தன்னோடு எதிரிஇலக்கையும் சேர்த்தழிக்கும் ஓர்மம் நிறைந்த போர்முறையாக அது அமைந்துள்ளது. அதனால்தான் உயிராயுதம் என்ற பொருள் பொதிந்த பெயர்சூட்டலுடன் கரும்புலிப்போர்வடிவம் இனங்காணப்பட்டுள்ளது. கடலிலும் - தரையிலும் இந்தப்போர்முறையை புலிகள் இயக்கம் பல்வேறு உத்திகள் வாயிலாக நடைமுறைப்படுத்திவருகின்றது. தமிழரது வீரமரபின் மகுடமாக கரும்புலிகள் திகழ்கின்றனர். கரும்புலிப்போர்முறையின் தேவை என்ன? கரும்புலிகள் எவ்வாறு உருவாகின்றனர்.? கரும்புலிப்போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்குகின்றது? இனக்கொலைபுரியும் சிங்களப்படைமீது இந்தப் போர்முறை ஏற்படுத்தும் தாக்கம் என்ன? தமிழரது தேசிய அரசியலில் கரும்புலிகள் ஏற்படுத்திவரும் தாக்கம் என்ன? என்பன போன்ற வினாக்களுக்க இந்தக்கட்டுரை விடையளிக்க முயல்கின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பான புறநிலை உண்மைகளைக் கருத்திற்கொண்டு, போரியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழீழதேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் கரும்புலிப்போர்முறை உருவாக்கப்பட்டது. தமிழீழப்போர் அரங்கில் இந்தப் புதிய வகைப்போர்முறை அறிமுகப்படுத்தப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. 1987 அம் ஆண்டு ~விடுதலை நடவடிக்கை| என்ற பெயரில் யாழ். குடாநாட்டின் வடமராட்சிப்பகுதியை ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் படையெடுத்தன. நெல்லியடியில், பாடசாலை வளாகத்தில். முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் மீது முதலாவது கரும்புலித்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. வெடிமருந்து நிரப்பிய பாரவூர்தி ஒன்றை அந்தப் படைமுகாமிற்குள்ளே ஓட்டிச்சென்று தடைகள் பல கடந்து, தாக்குதல்புரிந்த கரும்புலி வீரன் மில்லரால் இந்தப் போர்வடிவம் தொடக்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, 21 வருடகாலத்தில் 329 கரும்புலிவீரர்கள் இந்தப் போர்முறையில் பங்கெடுத்துக் காவியமானார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கரும்புலிப்போர் முறைக்கான தேவை என்ன என்ற கேள்வி முக்கியமானது. சிங்களப்படையுடனான போரில் வெற்றிபெறத் தேவையான சில முக்கிய இராணுவத்தேவைகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே இந்தப் புதியபோர் முறையை தலைவர் பிரபாகரன் உருவாக்கியிருந்தார். குறைந்த உயிரிழப்பை விலையாகக்கொடுத்து எதிரிப் படைக்கு நிறைந்த சேதத்தை உண்டுபண்ணுவது இப்போர்முறையின் நோக்கங்களில் ஒன்றாகும். தமிழினத்தின் பரமவிரோதியாக சிங்கள- பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தனது அரசியல் இலட்சியமாகக் கொண்ட சிறிலங்கா அரசு உள்ளது. தமிழினத்தை இன அழிப்புச்செய்து இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள - பௌத்த பூமியாக்குவதே பேரினவாதிகளின் அரசியல் இலட்சியமாகும். சிங்கள மக்களிடமிருந்து உருவாக்கப்பட்ட சிறிலங்காவின் முப்படைகளையும் - தமிழினத்தை இனக்கொலை செய்து அழிக்கும் - ஒரு கருவியாக சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது. எண்ணிக்கையில் தமிழர்களைவிட அதிகூடிய சனத்தொகையை சிங்கள மக்கள் கொண்டிருப்பதால் சிங்களப்படைகளின் ஆள் எண்ணிக்கையும் மிக அதிகமானதாகும். எண்ணிக்iயில் அதிகூடிய சிங்களப்படையை வெற்றிவாகை சூடுவதன் மூலமே தமிழரின் விடுதலையைப் பெறமுடியும் என்ற இராணுவ யதார்த்தம் உள்ளது. எனவே தான் புலிவீரர்களது களப்பலி என்பது புலிகள் இயக்கம் அதிக கரிசனை காட்டும் ஒரு விடயமாகவுள்ளது. தமிழர் தரப்பு உயிரிழப்பைக் குறைத்து எதிரிக்கு அதிக சேதத்தை உண்டு பண்ணவேண்டுமாயின் புலிகளின் தரப்பிலிருந்து ஒப்பீட்டளவில் அதிகளவு களவீரம் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. வீரமும் - உயிர் அர்ப்பணிப்பும் புலிகள் இயக்கத்தின் தனிமுத்திரையாக உள்ளன. இந்த வீரத்தினதும் - உயிர் அர்ப்பணிப்பினதும் அதிஉயர்வடிவமாக கரும்புலிப் போர்முறை காணப்படுகின்றது. கரும்புலிப்போர்முறையில் ஒரு திகைப்பூட்டும் இராணுவ அம்சமும் உள்ளது. எதிரிப்படையை நிலைகுலைய வைக்க இந்தத்திகைப்பூட்டல் அவசியமானது. இதனால் சிங்களப்படைமுகாம்கள் மீதான தாக்குதல்களின்போது ஆரம்பக்கட்டமே, புலிகளுக்குச் சாதகமானவகையிலேயே ஆரம்பமாகி - புலிகளின் கைமேலோங்கி தாக்குதல் வெற்றியில் முடிய உதவுகின்றது. இதேசமயம், இருதரப்பினதும் ஆயுத பலத்தைப் பொறுத்தளவிலும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஒரு அரசு என்ற அங்கீகாரத்தை சிறிலங்கா அரசு தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு நாடுகளிடமிருந்தும் நவீன அழிவாயுதங்களை, பெருந்தொகையில், கொள்வனவு செய்து தமிழருடன் போரிடுகின்றது. தமிழ்மக்கள் மீதும் - தமிழரின் விடுதலைச்சேனை மீதும் சிங்களப்படையினர் பயன்படுத்தும் நவீன போராயுதங்களுக்கு இணையான பதிலாயுதங்களைப் பெறும் வழிகள் புலிகள் இயக்கத்திற்கு அடைக்கப்பட்டே இருக்கின்றன. போராயுதங்கள் தொடர்பிலான இத்தகைய பாதக அம்சங்களைச் சீர்செய்து - சிங்களப்படைகளுக்கு நிகராகப் போர்புரியும் இராணுவத்தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு போரில் புதிய வழிகளைக் கைக்கொள்ள புலிகள் இயக்கம் நிர்ப்பந்திக்கப் படுகின்றது. கரும்புலிப்போர் முறைமூலம் இந்த இராணுவத்தேவையை ஈடுசெய்ய புலிகள் இயக்கம் முயற்சிக்கின்றது. சிங்களப்படைகளிடம் அதிநவீன போர் விமானங்கள் உண்டு. நீண்டதூர வீச்செல்லை உடைய ஆட்டிலறிகள் உண்டு. டாங்கிகள் - கவச வாகனங்கள் உண்டு. மிதமிஞ்சிய வெடிப்பொருள் சக்தியும் அதனிடம் உண்டு. அதிகளவு அழிவாற்றல் சக்திகொண்ட எதிரியின் இந்தப் போராயுதங்கள் அழிக்கப்படாமல் அல்லது முடக்கப்படாமல் மரபுப்போரில் புலிகள் இயக்கத்தால் எதையும் சாதிக்கமுடியாது போய்விடும். இதனால். இன அழிப்பு என்ற சிங்கள அரசின் நோக்கத்தையும் அது இலகுவில் அடைந்துவிடும். எனவேதான், சிங்களப்படையின் போராயுதங் களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் உயிராயுதமாக கரும்புலிப்போர் முறையை புலிகள் இயக்கம் பயன்படுத்தி வருகின்றது. இந்தக் கரும்புலிப்போர் முறைமூலம் எதிரியின் வான் தளங்கள் - ஆட்டிலறித்தளங்கள் - கட்டளைப் பீடங்கள் - என்பன அழிக்கப்பட்டு சிங்கள அரசின் இராணுவத்திமிர் உடைக்கப்படுகின்றது. தமிழரின் இனப்பிணக்கை இராணுவ வழியில் ஒருபோதுமே தீர்க்கமுடியாது என்ற போரியல் பாடத்தை, புலிகள் இயக்கம், இந்தக் கரும்புலிப்போர் முறைமூலமே சிங்கள அரசுக்கு உணர்த்தி வருகின்றது. சிங்களப்படையுடனான போரில் இராணுவ மேலாண்மைகளை அடைய கரும்புலிப் போர்முறை பெரிதும் உதவி வருகின்றது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும். தரைப்போரில் மட்டுமல்ல கடற்சண்டைகளிலும் இதே இராணுவத் தேவைகளுக்காக கரும்புலித் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. சிங்களக் கடற்படையின் கடற்போர்க்கலங்களுக்கு இணையாக கடற்கலங்களைப் பயன்படுத்திப் போர் புரியும் வசதிகளும் - வாய்ப்புகளும் புலிகள்இயக்கத்திற்கு தற்போது இல்லை. புலிகளிடமுள்ள சிறியரக சண்டைப்படகுகளும், சிங்களக்கடற்படையிடமுள்ள சக்திவாய்ந்த கடற்கலங்களும் சண்டையிடுவதென்பது டேவிட்டும் - கோலியாத்தும் சண்டையிடுவது போன்றது. டேவிட் பயன்படுத்தியது போல புதிய வழிகளையும் தந்திரங்களையும் பயன்படுத்தியே கோலியாத் என்ற கடற்படை அரக்கனை வீழ்த்தமுடியும். இந்தப் புதிய வழியும் - தந்திரமும் கரும்புலிப்போர் முறைமூலம் செயற்படுத்தப்படுகின்றன. கரும்புலிப்படகுகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் சிங்களத்தின் கடற்கலங்களை அழித்தொழிக்கும் நாசகாரிக்கப்பல்கள் போல அவை செயற்படுகின்றன. கரும்புலிப்போர் முறைமூலம் எதிரியின் போர்த்தளபாடங்கள் பலவற்றை கடற்கலங்கள் - வான்கலங்கள் உட்பட புலிகள் இயக்கம் அழித்திருக்கின்றது. போர்க்களத்துக்கு வெளியே இருந்தபடி இனக்கொலைப் போருக்கான கட்டளைப் பீடங்களாகச் செயற்படும் சிங்களத்தின் போர்த்தலைமைகளை அழித்து - எதிரிப்படையை நிலைகுலைய வைக்கும் போரியல் செயற்பாடுகளையும் கரும்புலி வீரர்கள் நிறைவேற்றி வருகின்றனர். இதன் காரணமாக போரில் இராணுவ பலச்சம நிலையைப் பேணுவதில் புலிகள் இயக்கம் வெற்றிகண்டு வருகின்றது. அபரிதமான ஆயுதவளத்தையும் - அதிகூடிய ஆள்வளத்தையும் மூலதனமாகக்கொண்டு தமிழருக்கெதிராக இனப்போர் தொடுத்துள்ள சிங்களப்படைக்கு அச்சுறுத்தலாக கரும்புலிப் போர்முறை உள்ளது. தம்மிடம் இல்லாத போர் ஆயுதமொன்றை புலிகள் வைத்துப் பயன்படுத்துகின்றனர் என்ற அச்சம் சிங்களப்படையிடம் உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை எல்லாம் கடந்து சிங்கள அரசின் இராணுவ இலக்குகளை தாக்கியழிக்கும் கரும்புலிகளின் திறன்கண்டு சிங்களப்படைத் தலைமையும் போருக்குத் தலைமை கொடுக்கும் அதன் அரசியற்தலைமைகளும் அஞ்சுகின்றன. இதனாற்தான் கரும்புலிப்போர் வடிவத்தை புலிகள் இயக்கத்திடமிருந்து களைவதற்கு சிங்கள அரசு முயற்சிக்கின்றது. இந்தநிலையில் கரும்புலிப்போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்குகின்றது! என்ற கேள்வியும் முக்கியமானது. கரும்புலிப்போர் முறை தொடர்பான ஒரு தவறான புரிதலை உலகம் வைத்திருக்கின்றது. தற்கொலைத்தாக்குதல்கள் என்று உலகம் இழிவாக நினைக்கும் சர்வதேச பயங்கரவாதத்துடன் கரும்புலிப்போர் முறையையோ, புலிகள் இயக்கத்தையோ ஒப்பிட்டுக் கருத்துக்கூற முனைவது தவறானது. தமிழ் - சிங்கள இனப்போரில், தமிழர்பக்கம் இருக்கின்ற ஒரு போரியல் தேவையை ஈடுசெய்ய முனையும் ஒரு தாக்குதல் வடிவத்தை உலகம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். 'தேவை தான் கண்டுபிடிப்பின் தாய்" என்றொரு புகழ் பூத்த விஞ்ஞான வாக்கியம் உண்டு. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குள்ள ஆளணிப் பற்றாக்குறை - ஆயுத வளப்பற்றாக்குறை என்ற பலவீனமான இராணுவ அம்சங்களை ஏதோ ஒரு வகையில் பதிலீடு செய்து விடுதலைப்போரை வழி நடாத்த வேண்டிய கட்டாயத்தேவை புலிகள் இயக்கத்திற்கு உண்டு. இந்தப் போரியல் தேவையே கரும்புலிப்போர் முறை என்ற புதிய கண்டு பிடிப்பிற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. எனவே கரும்புலிப்போர்முறை என்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு விஞ்ஞான பூர்வமான போராட்ட வடிவமாகும். தன்னை அழித்தபடி எதிரியின் இராணுவ இலக்குகளை அழிக்க முயலும் இப்போர் வடிவத்தை வெறுமனே தற்கொலைத் தாக்குதல் என்று சிறுமைப்படுத்த முடியாது. தற்கொலை என்பது வாழ்வியல் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க முடியாத கையாலாகாத்தனத்தாலும் - வாழ்க்கை மீதான வெறுப்பினாலும் - விரக்தியினாலும் ஏற்படும் மனநலன் முறிவுகளின் வெளிப்பாடுதான் தற்கொலை. ஆனால், கரும்புலிகளின் உயிர்ஈகம் என்பது ஒரு போர்க்களத்தியாகமாகும் - விடுதலை உணர்வால் உந்தப்பட்ட புலி வீரர்களின் அதிஉயர் அர்ப்பணிப்பு இது. எமது மக்களின் அழிவைத்தடுக்கவும் போர்க்கள வெற்றிகளை உறுதிப்படுத்தவுமென திட்டமிட்டுச் செய்யப்படும், ஒரு போர்வடிவத்திற்கான, உயிர்விலை அது. தமிழரின் நிலத்தை ஆக்கிரமிப்புச்செய்தபடி - தமிழ் மக்களை இனக்கொலை செய்யும் சிங்களப்போர் இயந்திரத்தையே கரும்புலிப் போர்முறை குறிவைக்கின்றது. எனவே போரியல் ரீதியில் இது நியாயமானது சிங்கள வான்படையின் 'கிபீர்" வகை மற்றும் 'மிக்" வகை போர் விமானங்கள் தமிழரின் வான்பரப்பில் அச்சத்தை ஊட்டியபடி பறந்து - 500 கி.கி, 1000 கி.கி நிறையுடைய அழிவுகர குண்டுகளை தமிழரின் குடிமனைக்குள் போட்டு அவலங்களை விதைக்கும் போது அந்தப் போர் விமானங்களை புலிகள் எப்படித் தடுப்பது! அல்லது எப்படி அழிப்பது! இங்கே உயிராயுதத்தின் தவிர்க்க முடியாத இராணுவத் தேவையை உணர முடியும். சிங்களத்து வான்கலங்களை கரும்புலிப் போர்முறை மூலம் புலிகள் அழித்தொழிக்கும் போது தமிழ்மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுவது எதற்காக! சிங்களப்படைகளின் ஆட்லறிகள் - பீரங்கிப்படகுகளை கரும்புலி வீரர்கள் தம்முடன் சேர்த்துத் தகர்த்தெறியும் போது தமிழ்மக்கள் வெற்றி கொண்டாடுவது எதற்காக! எதிரி வைத்திருக்கும் பலம் பொருந்திய இத்தகைய கொலை ஆயுதங்கள் கரும்புலி வீரர்களால் அழிக்கப்படுவதென்பது தமிழ்மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு ஒப்பானது. அதனால்தான் அவை அழிக்கப்படும் போது தமிழ்மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுகின்றனர். இதே சமயம், தமது போர் விமானங்கள் - போர்க்கப்பல்கள் கரும்புலித் தாக்குதல்களில் அழிக்கப்படும் போது அவற்றைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று உலகிற்குக் கூற சிங்கள அரசு முயல்கின்றது. ஆனால் தனது போர் விமானங்கள் ஆட்லறிகள் - பலகுழல் எறிகணைச் செலுத்திகள் தமிழர் குடிமனைக்குள் நடாத்தும் குண்டுத்தாக்குதல்களை போர் நடவடிக்கை என்று நியாயப்படுத்த முனைகின்றது. கரும்புலிகள் என்றால் யார்! இவர்கள் எவ்வாறு உருவாகின்றார்கள் என்ற கேள்விக்கான விடை புதிரானதல்ல. தமிழீழ விடுதலையை இலட்சியமாக வரித்துக்கொண்டு புலிகள் அமைப்பில் இணைந்த போராளிகள், நீண்டநாள் கள அனுபவங்களுக்குப் பின்னர், கரும்புலிகள் அணியில் இணைய விரும்பி தலைமைப்பீடத்திற்கு கடிதம் வரைகின்றனர். நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் அவர்கள் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். விடுதலையை விரைவாக்க வேண்டும் - ஒரு போர்வீரன் அல்லது வீராங்கனை என்ற வகையில் அதிகம் சாதித்து போராட்டத்திற்குப் பலம் சேர்க்கவேண்டும் என்ற விருப்பு இவர்களை கரும்புலிகளாக மாற்றிவிடுகின்றது. விடுதலை உணர்வும் - தேசபக்தியும் - தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கையும், விசுவாசமும் கரும்புலிகளுக்கு செயல் வீரத்தை ஊட்டிவிடுகின்றன. மனித மனச்சாட்சியை உலுக்கும் அந்த அதி உன்னத வீரக்தியாகத்தைப் புரியும் கரும்புலிகளின் அரசியல் இலக்கு தமிழரின் விடுதலைதான். அதனால்தான் கரும்புலித்தாக்குதல் நிகழும் போதெல்லாம் அதைக் கேள்வியுற்று, தமிழ்மக்கள், ஓர்மம், பெறுகின்றனர். இலட்சிய உறுதி பெறுகின்றனர். எதிரியின் எண்ணிக்கை பலம் கண்டோ அவனது ஆயுதபலம் கண்டோ அஞ்சாமல் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற வீர உணர்வை மக்கள் பெறுகின்றனர். இந்த வகையில், தமிழரின் தேசிய அரசியலில் கரும்புலிகள் ஏற்படுத்தி வரும் சிந்தனைத்தாக்கம் ஆழமானது. - சு. ரவி - விடுதலைப் புலிகள் ஏடு (04.09.08)


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner