-->

தமிழீழவிடுதலைப்புலிகளின் வரலாறு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாறு தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே பிரபாகரன் திரு.பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும். யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும் அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும் தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார். வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் திருமேனியார் குடும்பமாகும். இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும் வல்வை முத்துமாரியம்மன் கோயில் நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10 ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது. தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள்இ ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள் பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார். இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் கரிகாலன் என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது. தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோ குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்பகால புரட்சித் தோழர்கள் பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கதை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது யதார்த்தமானது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் பிறந்தது. 1970 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கடுமையான அடக்குமுறையும் சகலதுறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட விதமும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது. சிங்கள இன வெறி ஆட்சிக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டுமென்று இளைஞர்கள் துடித்தனர். தமிழர்களின் கட்சிகளோ அல்லது மற்ற சிங்கள இடதுசாரி இயக்கங்களோ இந்த இளைஞர்களின் மனக்கொதிப்பை புரிந்து கொள்ளவில்லை. கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்காகப் போராடச் சரியான தலைவர்களோ இயக்கங்களோ இல்லை என்று இளைஞர்கள் கருதினார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான அறப்போராட்டங்களைத் தமிழ்த் தலைவர்கள் நடத்தியிருந்த போதிலும் கூட இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கியே வைக்கப் பட்டிருந்தனர். பாராளுமன்றத்தில் அவர்கள் எழுப்பிய குரலுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இல்லை. கானகத்தில் காரிருளில் எழுப்பப்பட்ட குரலாக அவை ஒலித்தன. சிங்கள இன வெறிக்கு இரையாகிப்போன இடதுசாதிக் கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து தமிழருக்கு எதிராகச் செயற்பட்டன. தமிழர்களின் போராட்டங்களை அவர்களும் அலட்சியம் செய்தனர். எனவே தமிழ் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகளை நம்பக் கொஞ்சமும் தயாராக இருக்க வில்லை. இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் சூனியநிலை ஒன்று உருவாயிற்று. சிங்கள பேரினவாதிகளின் தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்நடத்திச் செல்லப் ~புரட்சிகரமான அரசியல் அமைப்பு~ ஒன்று இன்றியமையாதது என்பதைத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினார்கள். இதனால் ~தமிழ் மாணவர் பேரவை~ என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் மத்தியில் மாபெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமே சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளில் இருந்து தமிழர்கள் விடுதலை பெறமுடியும் என்பதை மெல்ல மெல்லத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர். தமிழ் மாணவர்கள் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்தது. இதில் புரட்சி குழுவின் முக்கியமானவராக பிரபாகரன் அவர்கள் இயங்கினார். அக்குழுவில் வயதில் குறைந்தவராகப் பிரபாகரன் அவர்கள் இருந்தபடியால் ~தம்பி~ என்ற செல்லப் பெயர் கொண்டு மற்றவர்களால் அழைக்ப்பட்டார். (இன்றும் இப்பெயர் கொண்டு பிரபாகரன் அவர்களை அழைப்பவர்கள் இருக்கிறார்கள்) தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்த புரட்சி குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர். இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை பொறுப்பேற்றுக் கொண்டு பிரபாகரன் அவர்கள் உட்பட நான்குபேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். 16 வயதுச் சிறுவனாக இருந்த பிரபாகரன் அவர்கள் மட்டும் மனத்துணிவுடன் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும் ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன. அவரைவிட வயது மூத்தவர்கள் எல்லோரும் அவரின் துணிவையும் பொறுப்பெடுத்த காரியத்தையும் பாராட்டினார்கள். தமிழ் புரட்சிகர இயக்கத்தின் முன்னோடியாகத் தோன்றிய பிரபாகரன் அவர்கள் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அதே நேரத்தில் தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்த சிங்கள அரசாங்கம் அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரைக் காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். சித்திரவதை தாங்கமுடியாமல் அவர்களில் ஒருசிலர் தமது சக கூட்டாளிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். சிங்கள காவற்துறையின் கொடுங்கோலர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். (இக் காலத்தில் கொழுப்பிலிருந்த 4ம் மாடி என்ற கட்டிடம் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதற்கு பெயர் பெற்ற இடமாகும்.) அதனால் பிரபாகரன் அவர்கள் தமிழகத்திற்குச் சென்றார். பிரபாகரன் அவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் 1972 ன் ஆரம்பப் பகுதியில் தமிழீழம் திரும்பினார். ஆங்காங்கு சிதறுண்டு இருந்த இளைஞர்களிடையே காணப்பட்ட விடுதலைச் செயற்பாடு ஒரு புரட்சிகர இயக்கத்தை புரட்சிகர அரசியற் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு புரட்சிகர தலைமையை நாடி நின்றது. இப்புரட்சிகரச் சூழ்நிலையில்தான் ~புதிய தமிழ்ப் புலிகள்~ என்ற இயக்கம் 1972இன் நடுப்பகுதிகளில் தலைவர் பிரபாகரன் அவர்களால் அவரின் 17வது வயதில் தொடக்கப்பட்டது. இவ் இயக்கம் மிகவும் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும் 'புதிய தமிழ்ப் புலிகள்" இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும் துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார். (1) புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாகஇ 1975 ஆடி 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும் யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் மேயரின் கார்ச் சாரதியை மடக்கி அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர். இவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்ட கடினமான பயணத்தில் தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது. (2) 'புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்கப் பணத்தைப் பறித்தெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. சிறீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக் கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப் பகலில் தன் தோழர்களுடன் புகுந்து துப்பாக்கி முனையில் ரொக்கமாக 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொண்டு சென்றார். அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டதையடுத்து புத்தூர் வங்கிச் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. 'புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை" அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த பொலிஸ் தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது. இப்பிரிவு தகவல் கொடுப்போர் துரோகிகள் ஆகியோரைக் கொண்டதாக தமிழீழப் பகுதிகளில் செயற்படத் தொடங்கியது புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 வைகாசி 5ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும் இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் தலைவர் பிரபாகரனால் இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன் தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார். இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் 'கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்" என்று கூறினார். தலைவர் பிரபாகரன் தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார். (1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை துரோகிகளை அழித்தல். (2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல். (3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல். 1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் 'தமிழின அழிப்பு" ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார். 1978 சித்திரை 7ம் நாள் கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1978 சித்திரை 25 ம் நாள்இ முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர். 1978 வைகாசி 19ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்" சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது. 1978 ஆவணி 7 ம் நாள் ஐ.தே.க. கட்சியின் ஜெ.ஆர். ஜெயவர்த்தனா அரசு 'புதிய அரசியலமைப்பை" உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர். 1979 ஆடி 20ம் நாள் ஜெ. ஆர்.ஜெயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை" அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும். இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (ஜெ. ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் ஜெ.ஆர். ஜெயவர்த்தன. சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில் தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார். இதன்படி 1979 ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. 1981 ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது. இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின. சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் 1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும். 1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜெ.ஆர். ஜெயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர். 1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று 3 பேரைக் காயப்படுத்தி பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது. 1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4 ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர். 1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர். 1983 வைகாசி 18 ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார். 1983 சித்திரை 29 ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர். 1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு ஜெ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது. 1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார். இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர் தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து விடுதலை பெற்ற தமிழீழத்தில் தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner