-->

திலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987<23ம் ஆண்டு நினைவு-2010

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். "வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார்.... எல்லோரும் பின் தொடர்கிறோம்…. ஆம், அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகி விட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்….! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது…. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள். வான் நின்றதும், பிரதித் தலைவர் மாத்தையா எதிர்வந்து நின்று, திலீபனைக் கட்டி அணைத்து வரவேற்று, உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க் கொண்டிக்கிறோம்…. எ திர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடக்கிறது. வயதான ஒர் அம்மா… தள்ளாடிய சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளி தவழும் கண்களில் கண்ணீர் மல்க, திலீபனை மறித்து, தன் கையில் சுமந்துவந்த அர்ச்சனைச் சரையிலிருந்து நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார்…. சுற்றியிருந்த "கமெரா"க்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் "கிளிக்" செய்கின்றன. வீரத்திலகமிடுகிறார். அந்தத் தாய்… தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போய் விடுகிறார்… காலை 9.45 மணி ! உண்ணாவிரத மேடையிலே உள்ள நாற்காலியில் திலீபனை அமர வைக்கிறார், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா அவர்கள்… எனக்கு அப்போது ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. நெல்லியடி இராணுவ முகாம் தாக்குதலுக்கு முன்பாக கப்டன் மில்லரிடம் திட்டத்தை ஒப்படைத்து, வழியனுப்பி வைக்கிறார் மாத்தையா… அன்று மில்லர் வீரத்துக்குக் காவியம் ஒன்றையே படைத்துவிட்டு வீரமரணம் அடைந்தான். இன்று திலீபன்…? திலீபனின் அருகே நான், ராஐன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்திருக்கிறோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளித்தார்கள்… தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்தியா மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளும் பின்வருவன: 1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை " புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும். 4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும். பிரசாத் அவர்களால் மேற்படி ஐந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை 13-09-1987 அன்று இந்தியா உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள்… ஆனால், 15-09- 1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும், மறியல் போராட்டமும் நடாத்துவதேன தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09- 1987 அன்று தீர்மானிக்கப்பட்ட- -து… அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது… பிற்பகல் 2.00 மணி ! திலீபன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தி- -யாலங்கள் முடிந்துவிட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றக் கொண்டிருந்த உண்- -ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்துவிட்டது. "படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்" என்று என் காதுக்குள் குசுகுசுக்கிறார் திலீபன்: நான் ராஐனிடம் சொல்கிறேன். பதினைந்து நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் எப்போதுமே உண்டு. பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், யாசீர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும்போது படிப்பார். பலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதென்றால் அவருக்குப் பலாச்சுளைமா- -திரிப் பிடிக்கும். "பலஸ்தீனக் கவிதைகள்" என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். முhலை 5.00 மணிக்கு பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசீலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். "அண்ணா திலீபா ! இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்துக்காக…… நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது…… செந்நீர் !....... சுசீலாவின் விம்மல், திலீபனின் கவனத்தைத் திருப்புகிறது. கவிதை தொகுப்பை முடித்துவிட்டு ( பலஸ்தீனக் கவிதைகள்), கவிதை மழையில் நனையத் தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர்த்தேக்கத்தை ஒரு கணம் என் கண்கள் காணத் தவறவில்லை. ஏத்தனை இளகிய மனம் அவருக்கு? இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது? அகிம்சைப் போராட்டத்துக்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட, தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்! ஏன்? ஐரிஷ் போராட்ட வீரன் "பொபி சாண்ட்ஸ்" என்ன செய்தான்? சிறைக்குள், நீராகரம் அருந்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உயிர்நீத்தான். இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரு. பொட்டி ராமுலு என்பவரும் அதே முறையில்தான் உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் தியாக மரணம் அடைந்தார். 1956 ஓகஸ்ட் 27 இல், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 6 3 வயதான விருதுநகர் சங்கரலிங்க நாடார் 78 ஆவது நாள், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் உயிர்துறந்தார் ( 13 ஆண்டுகளின் பின் பேரறிஞர் அண்ணாவால், 1969 இல் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது). பகத்சிங்கின் தோழரான வங்காளத்தைச் சேர்ந்த ஐதீந்திர நாத்தாஸ் என்ற இளைஞன் 13.07.1929 இல் லாகூர் சிறையில், சிறைக்கொடுமைகளை எதிர்த்து உண்ணாவிரதமிருந்து 13.09.1929 அன்று, 63 ஆம் நாள் வீரமரணமடைந்தார் (அதன் பின் சிறைச்சாலை விதிகள் தளர்த்தப்பட்டன). ஆனால் நம் திலீபன்? உலகத்திலேயே நான் அறிந்தவரையில் இரண்டாவதாக, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமதிப்பைப் பெறுகிறார். அப்படியானால் அந்த முதல் நபர் யார்? அவர் வேறு யாருமல்ல: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான்! 1986 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் இந்தியாவில் அவர் இருந்த போது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துவைத்த பெருமை அவரையே சாரும். இரண்டாம் நாளே இந்திய அரசு பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். அதுபோல், அவரால் உருவாக்கப்பட்ட திலீபன் இன்று குதித்து விட்டார். அவரது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றுமானால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயார். இல்லையென்றால் இறுதிமூச்சு வரை அதைத் தொடரத் தயாராக இருந்தார். திலீபன் மிகவும் மன உறுதி படைத்தவர். ஓல்லியான உடலாயினும் திடமான இதயம் அவரிடம் இருந்தது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் என்ற தலைவர் பிரபாகரனின் அசையாத கொள்கையிலே பற்று வைத்திருப்பவர், திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேறுமா? ……. காலம்தான் பதில் சொல்லவேண்டும். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டல்….? அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு ஓர் மாபெரும் வெற்றிதான். உலகில், புதிய அத்தியாயம் ஒன்றின் " சிருஷ்டி கர்த்தா" என்ற பெருமை அவனையே சாரும். ஆனால், அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? "இறைவா ! திலீபனைக் காப்பாற்றிவிடு!" கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள்- இதை நான் அவதானிக்கிறேன். பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே…. அதுவும் தமிழ்க் கடவுளாகிய குமரனின் சன்னிதியில்… ஒரு இளம்புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது……… ஒரு நல்ல முடிவு கிடைக்கவேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும். எனக்குள் இப்படி எண்ணிக் கொள்கிறேன். அப்போது ஒர் இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான். " திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல@ தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான். இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்…… அவர் தமிழீழம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தே ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படிவற்புறுத்தித் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். எந்த காரணத்தாலாவது இதை இந்திய அரசு நிறைவேற்றத் தவறுமானால், திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம்…… திலீபன் அண்ணா இறந்தால்…… ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும்: ஒரு புரட்சி இங்கே வெடிக்கும்…… இதுதான் என்னால் கூறமுடியும்" அவரின் பேச்சு முடிந்ததும் கூடியிருந்த மக்கள், அந்தப் பேச்சை வரவேற்பதுபோல் கைகளைத்தட்டி ஆரவாரஞ் செய்கின்றனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடிக்கின்றது. அன்று இரவு பதினொரு மணியளவில் தலைவர் வே. பிரபாகரன் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், மாத்தையா, ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம்வரை தலைவருடன் உரையாடிக் கொண்ருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று, போகும்போது என்னிடம் கூறிவிட்டுச் சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்துவிடுவார். அதனால்தான் தலைவர் அப்படிக் கூறிவிட்டுச்சென்றார். அன்றிரவு பத்திரிகை நிருபர்களும், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் திலீபனைப் பார்க்க மேடைக்கு வந்தனர். " முரசொலி" ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசைச் சேர்ந்த பஷீர் போன்றோருடன் திலீபன் மனம்திறந்து பேசினார். அவரைக் கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாரே என்பதனால் அவரை அன்பாகக் கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஷ்டப்பட்டு சிறிநீர் கழித்துவிட்டு, சுமார் 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றார். ஆவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கியபோது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பைப் பிடித்து அவதானிக்கிறேன். நாடித்துடிப்பு :- 88 சுவாசத்துடிப்பு :- 20 அவர் சுயநினைவுடன் இருக்கும்போது வைத்திய பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க- - மாட்டார். தனக்கு உயிர்மீது ஆசையில்லை என்பதால் பரிசோதனை தேவையில்லை என்று கூறுவார். அவன் விருப்பத்துக்கு மாறாக உணவோ நீரோ மருந்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாதென்று, முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். நானும் ராஐனும் அவரின் பக்கத்தில் படுத்துவிட்டோம். மேடையின் மறுபுறத்தில் இரு "நவினன்களும்" படுக்கைபோட்டனர். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொது மக்களும் கொட்டக் கொட்ட கண் விழித்துக் கொண்டிருந்தனர். பயணம் தொடரும்........


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner