-->

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மாண்ட வேங்கைகள்

1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா - இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.

இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா - இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.



சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.

சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து
இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.

தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.

அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.


அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.

இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.



ஆனால், சிறிலங்கா அரசோ, சர்வதேசமோ கடந்த கால சமாதான காலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி தமிழ் மக்களின் மீதும் நிராயுதபாணிகளாக உள்ள போராளிகள் மீதும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் செயற்படுகின்றன. தற்போதைய நில ஆக்கிரமிப்பு, மக்களின் மீதான வான், எறிகணைத் தாக்குதல்கள் இதனையே சுட்டிக் காட்டி நிற்கின்றன.




0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner