-->

'எல்லாளன் நடவடிக்கை' - 21 வீரவேங்கைகள் விபரம் 22-10-2011

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.


இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

லெப்.கேணல் இளங்கோ

அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது.

எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும்.

உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது.

சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது.

21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது.

லெப். கேணல் வீமன்

பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார்.

மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் - யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன.

வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது.

இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான்.

வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர்.

அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார்.

பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான்.

லெப்.கேணல் மதிவதனன் –


என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது.

அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது.

பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான்.

மேஜர் இளம்புலி –
இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது.

இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான்.

இவர்களோடு,

கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா,



கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்,


மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்,


மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்,

கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்,


கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்,


மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்,


கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்,


கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்,


கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்,


கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்,


லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன்,


கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்,


மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி,


கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி,

கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா,


கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.


அனுராதபுர மண்ணில் பகைவரின் வானூர்திகளை அழித்து வன்னி முற்றுகைக்கான முதலடியைக் கொடுத்த இந்த வீரமறவர்களின் தியாகத்தை வீண்போகாமல் காக்கப்பட வேண்டும். எல்லாளன் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்.



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner