பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி "..
பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…"
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு
மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள். விடுதலைப் போராட்டத்தின் " விழுதுகளுள் ஒன்றாக" உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள். அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1. 15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன. துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. 'நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ." தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம். 'என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ." எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள். அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது. எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 24 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. 2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது. தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும். தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
0 Comments:
Post a Comment