-->

♥ ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு 14 'ம் ஆண்டு வீர காவிய நாள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.



தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
“கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்”
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
மேஜர் சிட்டுவின் பதிவு .
இன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.
அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.
சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.
அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.
இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.
போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.

:!!: ♥ :!!: புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் :!!: ♥ :!!:


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner