பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
புதிய அரசமைப்புச் சட்ட எதிர்ப்பு ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பிறகு சிங்களப் பேரினவாதம் பெரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது எனலாம். தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியும், முடிந்தால் முழுவதுமாக வெளியேற்றிவிடும் முயற்சியும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1971-74 தர நிர்ணயம் மற்றும் மாவட்ட ஒதுக்கீடுகள் சட்டம்: செய்தி நிறுவனத் தணிக்கை; தர நிர்ணயம் மற்றும் கல்வித் துறை மாவட்ட ஒதுக்கீடுகள் பல்கலைக்கழக அனுமதியின் கீழ் கடைபிடிக்கப்பட்டன. புத்தக வெளியீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமூக வேறுபாடுகளைச் சீர் செய்வதற்காக இவை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. பல்கலைக்கழக வளாகங்கள் முறைப்படுத்தப்படுதல் ஏற்கெனவே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்திய விதம் சிக்கல் மிகுந்ததாக இருந்தது. தமிழரின் பல்கலைக்கழக அனுமதிகளை இது மிகவும் பாதித்தது. படித்த தமிழ் இளைஞர் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு பலத்த அடியைக் கொடுத்தது. 1974 யாழ் பல்கலைக்கழக புனரமைப்புச் சட்டம்: பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தைத் துவக்கியதன் மூலம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை தமிழ் மக்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மீண்டும் இதனை இங்கு செய்த விதம் கேள்விக்குறியாக மாறியது. தர நிர்ணயமும் இச் சட்டத்தோடு இணைந்து தமிழ் மாணவர்கள் விகிதமும், அங்கு அனுமதிக்கப்பட்ட பாடங்களும் நிறைவு தருவதாக இல்லை. 1971-1978 புதிய அரசியல் அமைப்புச் சட்டங்கள்: 1972- இல் இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது. புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகியது. 1948-ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மையோருக்கு இருந்த 29-ஆவது பிரிவு-தமிழர் உரிமைகளுக்கான சட்ட ரீதியான சிறப்புப் பாதுகாப்புகள், மற்றும் மத சிறுபான்மையோருக்கான பாதுகாப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. சிங்கள மொழி, சிறப்புத் தகுதியைப் பெற்றது. புத்த மதம் அதிகார பூர்வமான மதமாக அறிவிக்கப்பட்டது. சிங்களப் பேரினவாத அடக்குமுறை வடிவத்திற்கு, மதவாத முகமூடிகளைத் தரித்து அதைச் சட்டபூர்வமானதாக ஆக்கியது. அதேபோன்று 1978-ஆம் ஆண்டு புதிய அரசியல் சட்டம், புதிய ஆட்சி முறை-ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் நாட்டைக் கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு அதிகார வடிவம் ஒரு முனையாக மையத்தில் குவிக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த சட்ட ஷரத்துகளில் பலமுனை அதிகார வடிவ அமைப்புகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ( மாவட்டம், உள்ளூர் ஆட்சி அதிகாரம் ஆகியவை பரவலாக்கப்பட்ட அதிகார வரம்புகள் குறுக்கப்பட்டன). இதன் மூலம் நாட்டில் உடனடியான பொருளாதாரத் திட்டமிடல், புதிய பொருளாதாரக் கொள்கைகள் நிறைவேற்றம் போன்றவை நிகழ்த்துவதற்கு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டன. 1972-74 நிலச் சீர்திருத்தம்: 1972-74 நிலச் சீர்திருத்தங்கள் தமிழர்களைப் பெரிதும் பாதித்தது. தோட்டங்களில் பணியாற்றிய இந்தியத் தமிழ்த் தொழிலாளர்கள் நிலங்களை இழந்தனர். நில ஆக்கிரமிப்பின் கீழ் பல நிலங்கள் பிடுங்கப்பட்டன. விவசாய நிலங்களைப் பிரித்து அளிப்பது என்றில்லாமல் மலைப்பகுதியில் உள்ள தோட்ட நிலங்களைப் பிரிப்பது இதன் முக்கிய அம்சமாக இருந்தது. நிலச் சீர்திருத்தத்தில் தமிழர்களுக்குப் பதிலாக சிங்களவர்களுக்கு நிலங்கள் கை மாறின. 1975 காணி உச்சவரம்புச் சட்டம்: தமிழர்கள் தங்களது சொந்த நிலம் என்று பரம்பரை பரம்பரையாகக் கருதி வந்த பகுதிகளில் சிங்களவர்களின் ஆதரவால் இட ஆக்கிரமிப்பும், அரசு உதவியுடன் கூடிய குடி அமர்த்தலும் செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் குடி அமர்த்தப்பட்டனர். தமிழர்களுக்குப் போதிய பங்கீடு கிடைக்கவில்லை. மேலும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் உதவியுடன் மாதிரிக் கிராமங்களையும், மாதிரிக் காலனிகளையும் அரசு உருவாக்கியது. பழைய குடியிருப்புகள் கலைக்கப்பட்டுப் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தொழிலாளர் குடியிருப்புகள், சிங்களவர் காலனிகளாக ஆக்கப்பட்டன. அதில் சிங்களவர்கள் பெரும் அளவில் குவிக்கப்பட்டனர். தமிழர்களுக்கான ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது. 1979 பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மனித உரிமைகளை மறுக்கும் பல விதிகள் இந்தச் சட்டத்தினுள் நுழைக்கப்பட்டன. இதன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் 18 மாதங்கள் அமைச்சர் தீர்மானிக்கும் இடத்தில் வைக்கலாம். போலீஸப்ர் முன் ஒருவர் கூறிய புகார் ஆதாரமாகக் கருதப்படும். கொலை, கடத்தல், ஆயுதம் வைத்திருத்தல், இனக்கலவரம் ஏற்படுத்தக்கூடிய சொற்கள், சைகைகள் இதில் அடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 5 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். 1980- பல நல்வாழ்வுத் திட்டச் சட்டங்கள்: 1. கிராமப்புறங்கள் மேம்பாட்டுத் திட்டம். 2. நட்லி குடியேற்றத் திட்டம். 3. நகர விரிவாக்கத் திட்டம். 4. கிராமப்புற ஒன்றிணைப்பு. 5. பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்துதல். 6. மீன் காடாக்கம். 7. மாதிரிக் கிராம நிலப்பங்கீடு. இந்தச் சட்டங்கள், நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் சிங்களமயமாக்கும் கொள்கையை ஒட்டி வந்தனவாகும். மாதிரிக் கிராமங்களை உருவாக்கியது போன்று மாதிரித் தோட்டங்களும் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. மாதிரிக் கிராமங்களில் விவசாயிகளுடைய மேம்பாட்டிற்கு என்று கூறிக்கொண்டு சிங்கள விவசாயிகளைக் குவிக்கவும் தமிழ் விவசாயிகளை வெளியேற்றவும் இச்சட்டம் பயன்பட்டது. அதேபோன்று மாதிரித் தோட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றித் தமிழர்களை வெளியேற்றக்கூடிய அவர்களை முற்றாகப் புறக்கணிக்கக் கூடிய வகையில் இவைகள் அமைந்தன. மீன் காடாக்கம் என்ற திட்டத்தின் கீழ் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நகர விரிவாக்கம் என்பது மலையகத் தமிழ் நகரங்களை விரிவாக்குவதன் கீழ் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகளை அதிகப்படுத்தி, நகரத்தைச் சிங்களப்படுத்தும் திட்டத்தினை உருவாக்கினார்கள். கிராமப்புற- தோட்டப்புற ஒன்றிணைப்பு என்ற மட்டத்தின் கீழ் நாலைந்து அடுத்தடுத்த கிராமங்களை இணைப்பதன் மூலமும், அதற்கான பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமும் விவசாயப் பகுதி நிலங்களில் குடியேற்றத்தைத் திணிப்பதன் மூலமும் சிங்கள மயமாக்கப்பட்டது. நல்வாழ்வுத் திட்டங்களின் பெயரில் அவை சிங்களவர் நல்வாழ்வுத் திட்டங்களாகவே உருவெடுத்தன. சட்ட ரீதியான ஒடுக்கு முறையின் மூலம் பொருளாதார ரீதியாகத் தமிழர்களைப் பின் தள்ளினர். பொருளாதார ரீதியான பின் தள்ளுதல் மூலம் வாழ்நிலை மாற்றங்களில் குழப்பங்களை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையில் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கும் உத்திரவாதமற்ற வாழ்க்கைக்கும் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதம் தள்ளியது. அவசரகாலச் சட்டம்: 1983- ஆம் ஆண்டில் தொடங்கி ஆண்டுக் கணக்கில் நாடாளுமன்ற ஒப்புதல் மூலம் யாழ்ப்பாணத்தில் அவசரநிலை நீட்டிக்கப்பட்டது. இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டால், சாதாரண உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டுவிடும். கைது, தடுப்புக்காவலில் வைப்பது, சடலங்களை அழிப்பது போன்றவை தாராளமாக நடைபெறும். தடுப்புக்காவலில் ஒருவர் வைக்கப்பட்டால், அவரது உறவினரிடம் தெரிவிப்பது அவசியம் என ஐ.நா.சபையின் 92 வது பகுதி அனுமதிக்கிறது. ஆனால், இலங்கையின் அவசரகாலச் சட்டத்தில் இதற்கு இடமில்லை. தடை செய்யப்பட்ட பகுதிகள்: கடல் பகுதிகள்-யாழ்ப்பாணம்-மன்னார், வவுனியா-முல்லைத்தீவு போன்ற பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றில் தடை விதிக்கப்பட்டால், மீன்பிடிக்க, படகில் செல்ல, கடைத்தெரு, மருத்துவமனை, கல்விச்சாலை மற்றும் அலுவலகங்கள் செல்ல யாவற்றுக்கும் தடை உண்டு. கடல் பகுதியில் மீனவர் மீன்பிடித்தொழிலில் இறங்கமுடியாது. எல்லை சுருக்கப்பட்டுவிடும். நகரங்களில், காடுகளில் அனுமதியின்றி நடமாடுவோரைச் சுட்டுத்தள்ளும் ஆணையை போலீஸப்ர், ராணுவத்தினர் யாரிடமும் பெறத் தேவையில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக ரத்தாகிவிடும். இவைகளின் மூலம் சிங்களப் பேரினவாதம் புத்தத்தின் முகமூடி தரித்து ரத்தச் சேற்றில் கைகளை நனைக்கக் கூடிய அளவிற்கு முன்னேறியது.
0 Comments:
Post a Comment