-->

மறக்க முடியாத ஜுலைகள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

மறக்க முடியாத ஜுலைகள்.


யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.
http://meenakam.com/wp-content/uploads/2010/07/23.jpg
1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலர்றறில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.

1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது.

“கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.


அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் “திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?” என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதலளித்திருந்தார்.

அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரணையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.

1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்.

அதே யூலை இறுதியில்தான் ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அதைத் தொடர்ந்து நடந்த அனர்த்தங்கள் அனைவரும் அறிந்ததே.

1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது. யூலை பத்தாம் நாள் முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.

1990 யூலை பதினோராம் நாள் கண்டிவீதியில் குந்தியிருந்த முக்கியமான சிங்களப் படையினரின் முகாமொன்று புலிகளால் தாக்கி வெற்றி கொள்ளப்பட்ட நாள். கொக்காவில் முகாம் தாக்கப்பட்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. தமிழீழப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தாக்குதல் இதுவாகும். வன்னியை ஆங்காங்கே ஊடறுத்திருந்த படைமுகாம்களைக் களைந்து வன்னியைத் தக்கவைக்கும் தூரநோக்குடன் புலிகள் எடுத்த நடவடிக்கையின் வெளிப்பாடு இது.

1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாள ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு – வெற்றிலைக்கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண்பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிர்ப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.

1992 யூலை ஐந்தாம் நாள். கரும்புலிகள் நாளன்று இயக்கச்சிப் பகுதியில் வான்படையின் வை-8 ரக விமானமொன்று வீழ்த்தப்பட்டது.

1993 யூலை 25ஆம் நாள் ஈழப்போராட்டத்தில் முக்கியமான தாக்குதலொன்று நடைபெற்ற நாள். மணலாற்றின் மண்கிண்டிமலை என்ற முக்கியமான இராணுவத் தளம் புலிகளால் தாக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது. ஏராளமான ஆயுதங்களையும் நவீன கருவிகளையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். இத்தாக்குதலுக்கு “இதயபூமி-1″ என்று புலிகள் பெயரிட்டிருந்தனர். மணலாற்றின் சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தியதோடு அங்குக் கைப்பற்றப்பட்ட நவீன தளபாடங்களின் உதவியுடன் புலிகள் அடுத்த பாய்ச்சலுக்குப் பேருதவியாக அமைந்ததால் இத்தாக்குதல் மிகமுக்கியத்துவமானது. மிகக்குறைந்த இழப்புக்களுடன் பெரியதொரு வெற்றியை ஈட்டியிருந்தனர் புலிகள்.

1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாள 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர்.

1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் 5 பாரிய இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.

1995 யூலை 30ஆம் நாள் சிறிலங்காப் படையினரின் உயர்மட்டத் தளபதியான “லெப்.ஜெனரல் நளின் அங்கமன” கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்

1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழந்ததால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர். பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.

அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த யூலை வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த வெற்றியொன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படுகொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாள யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சொந்தமானவை மட்டுமே. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.

உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின்பின் உடனடியாய் எந்தவொரு படைநடவடிக்கையையும் செய்யமுடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்றுவரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.

ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.
இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner