-->

மூத்த தளபதி கேணல் சங்கர்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற


வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்
26-09-2001


தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.






தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மூத்த தளபதியுமான கேணல் சங்கர் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகள் வன்னிப் பகுதிகளில் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. வியாழக்கிழமை மாலை முல்தைததீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில்; விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கலந்துகொண்டு தனது இறுதி வணக்கத்தை செலுத்திக்கொண்டார். இயக்க உறுப்பினர்கள், தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்; இராணுவ மரியாதைகளுடன் நடைபெற்று இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர் என வன்னித் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் சங்கருக்கான ஈகைச்சுடரினை அவரின் துணைவியார் ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து தலைமை உரையினை முள்ளியவளை பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. முகுந்தன் வழங்கினார். தொடர்ந்து வீரவணக்க உரையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் வழங்கினார்.

'20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களுடன் உற்ற நண்பனாக இருந்து, இந்திய இலங்கை இராணுவங்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கெடுத்த இந்த வீரத்தளபதியின் இறுதி நிகழ்விலே பங்கெடுத்திருக்கின்ற நாங்கள் அனைவரும், அவர்களுடைய குடும்பத்தினருடன் இந்நிகழ்வைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

'1981ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே தனது சகோதரன் சித்தார்த்தன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே தலைவர் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தலைவரோடு முழுமையாக இணைந்துகொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை சகல நடவடிக்கைகளிலும் பங்கெடுத்தவர் இவர். இவரின் சகோதரன் சித்தார்த்தன் 1986 இல் நாவற்குழி இராணுவ முகாமைத் தாக்கி அழிக்கின்ற முயற்சியில் பென்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவருடைய அடுத்த சகோதரன், இந்தியாவில் இருந்து தமிழீழம் வந்துகொண்டிருந்தபோது, இந்தியாவினதும் இலங்கையினதும் துரோகத்தனத்தால் குமரப்பா புலேந்திரன் அவர்களோடு கப்டன் கரனாக சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.

அவரின் இரு சகோதரர்கள் 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழீழ துரோகக் கும்பல்களினால் அழிக்கப்பட்டார். இப்படியாக இன்று இந்தக் குடும்பம் இந்த விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக இழந்து நிற்கின்றது.

'இந்திய இராணுவம் இங்கே வந்தபோதுகூட மணலாறு காட்டுப்பகுதியில் தலைவர் செயற்பட்ட காலங்களிலெல்லாம் அவரோடு நண்பனுமாய் சகோதரனுமாய் மட்டுமல்லாது அவரின் உறுதுணையாகவும் நின்றவர். காட்டில் இருந்த காலங்களில்கூட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பல ஆண் பெண் போராளிகளுக்கு போர் நுட்பங்களையும், போர்க்கருவிகளையும் பயிற்றுவித்த சிறந்த ஆசான்.

'இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்ட காலப்பகுதியில் தலைவரின் எண்ணத்திற்கு புதுவடிவம் கொடுத்து கடற்புறா என்ற பெயரில் கடற்புலி அமைப்பொன்றை உருவாக்கியவர். முதன்முதலில் பாரிய கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதலுக்காக கொலின்ஸ், காந்தரூபன், வினோத் ஆகிய கடற்கரும்புலிகளை வழிநடத்தி வெற்றிகரமாக அத்தாக்குதலை மேற்கொண்டவர்.

'ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு, மூன்று இப்படியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடக்கின்ற யுத்தங்களின் போது தலைவருடன் கூட நின்று இராணுவ அசைவுகள் போராளிகளின் செயற்பாடுகள் யாவற்றையும் கவனித்து தெளிவுபடுத்தி வெற்றிப்பாதையில் கொண்டுநடத்திய இந்த வீரத்தளபதி இப்போது எங்களோடு இல்லை. தமிழீழத்தினுடைய பல பிரதேசங்களை எமது ஆளுகைக்குள் கொண்டு வந்திருக்கின்ற இந்தக் காலப்பகுதியில் எதிரியின் ஊடுருவல் நடவடிக்கையால் இவர் அழிக்கப்பட்டிருக்கின்றார்.

'20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்களாகிய உங்களுக்காக, காடுகளில் நீரின்றி உணவின்றி உழைத்து இந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வளர்த்தவர் இன்று எதிரியின் ஊடுருவல் அணியால் அழிக்கப்பட்டுள்ளார். சிறீலங்கா இராணுவம் 3 ஆண்டுகளாக பகுதி பகுதியாக ஆக்கிரமித்த பெரும் நிலப்பகுதியை மூன்றே நாட்களில் மீட்டெடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் இனிமேலும் தொடரக்கூடாது.

எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையும் தலைவரைப் பொறுத்தவரையும் இது ஒரு பெரும் இழப்பு. இந்த நிகழ்வு தமிழீழத்திற்கே ஒரு சோக நிகழ்வு. விடுதலைப் போராட்டம் இலக்கை நோக்கி வீறுநடைபோடும் நேரத்தில் இவ்வாறான சோக நிகழ்வுகள் இனியும் ஏற்படாமல் விரைந்து இலக்கை அடைய உங்களால் ஆன பங்களிப்பை கேட்டுக்கொள்கின்றேன்" என்று துயரமயமாக நின்ற தமிழீழ மக்களிடம் வேண்டுகோள் விடுத்து தனது வீரவணக்க உரையை நிறைவுசெய்துகொண்டார்.

இவருடைய இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் செல்வி சாம்பவி அவர்களின் உரை:

'எல்லாவற்றிலுமே பங்கெடுத்து எல்லாவற்றிலுமே பங்குகொண்டு தன்னுடன் கூடிக்கழிக்கும் உற்ற நண்பனை இன்று தலைவர் பிரிந்திருக்கின்றார். ஆனால் எங்களுடைய சங்கர் அண்ணாவைப் பொறுத்தவரையில் இவ்விடுதலை இயக்கத்தில் நாங்கள் அனைவருமே அவருக்கு குழந்தைகள் போன்றவர்கள் தான். அவர் ஒவ்வொரு போராளிகளையும் அணுகுகின்ற விதம் பழகும் விதம் அறிவுரைகள் சொல்லிக்கொடுக்கும் விதம் வித்தியாசமானது. நாங்கள் சங்கர் அண்ணா என்ற பெயரை அவரை அறியும் முன்பே அறிந்திருக்கின்றோம். எப்படியென்றால் இந்திய இராணுவ காலத்தில் மணலாறில் எங்களுடைய தேசியத் தலைவர் இருந்த காலத்தில் அவரது நிழலாக இருந்தவர் சங்கர் அண்ணா.

அக்கால கட்டத்தில்தான் எமது அமைப்பில் பெருமளவான பெண் போராளிகள் இணைந்து தலைவருக்கருகில் பயிற்சிப்பாசறை அமைத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டம். பெண்களுக்கு காடு புதிது. காட்டிலும் பயிற்சி காவற்கடமை எல்லாமே புதிது. எல்லாவற்றையுமே பயின்று கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில் நாங்கள் போக வேண்டிய திசை எது, இடம் எது எமக்கு முன்னால் இருக்கும் மரம் எது, பக்கத்தில் இருக்கும் மரத்தின் இலை எது, விலங்குகளின் அடியைக்காட்டி அவ்விலங்கு எது என அனைத்தையும் அப்போராளிகளுக்கு அணுவணுவாக கற்றுக்கொடுப்பதுடன், அவர்கள் விடும் குறும்புகள் சிறு தவறுகளை தலைவரிடம் மிகவும் வெளிப்படையாகவே கூறுவார்.

இதனால் எங்களுடைய பெண் போராளிகள் இவரைக் கண்டாலே ஓடி ஒளித்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுடன் மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் பழகி ஓர் தந்தையைப்போல பல சந்தர்ப்பங்களில் ஓர் தாயைப்போல எங்களுடைய போராளிகளை வளர்த்துவிட்ட பெருவிருட்சம். இன்று பல போராளிகளின் மக்களின் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. நெஞ்சு கனத்துக்கொண்டிருக்கின்றது.

'நாங்கள் தமிழர்கள், நாங்கள் விடுதலைப் புலிகள், எங்கள் கண்களில் இருந்து வழிவது நிச்சயம் வெறும் கண்ணீராக இருக்காது. எங்கள் நெஞ்சங்களில் கனப்பது நிச்சயம் வெறும் சோகமாக மட்டும் இருக்காது. இதற்கான பதிலை எதிரி நிச்சயம் எதிர்கொள்வான். எங்கள் தளபதியின் ஆத்மார்த்தமான அந்த இலக்கினை நாங்கள் விரைவில் அடைவோம்.

அதற்காக இன்னும் எத்தனை எத்தனை இலைகளும் கிளைகளும் முறிந்து விழுந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்த மண் தயாராகவே இருக்கின்றது. இழப்புகள் என்றும் எம்மைத் துவளச்செய்துவிடாது. தூக்கி நிமிர்த்துவதும் இலக்கை நோக்கி பாயச்செய்வதும் எங்கள் மாவீரர்களின் அந்த ஆன்மாவின் பாடல்தான். இன்று வித்துடலாக உறங்கிக்கொண்டிருக்கும் எங்கள் தளபதியின் வித்துடல் மீது ஆணையாக, நாங்கள் அவர் காட்டித்தந்த பாதையில் உறுதியுடனும், திடமுடனும் விரைந்துசெல்வோம்.

அவர் எந்த இலட்சியத்திற்காக இருபது வருடங்களாக உழைத்தாரோ அந்த இலட்சியத்தை மிக குறுகிய காலத்தில் ஈடேற்றுவோம். இன்று எமது கண்களில் வடிந்துகொண்டிருப்பது வெறும் கண்ணீர் அல்ல நெருப்பு நதி" என்று தெரிவித்தார்


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner