-->

கேணல் கிட்டுவின் வரலாற்று ஒளிப்படங்கள்

உயிரைத் தந்து உரிமையைக் காத்த கேணல் கிட்டு

போராட்டம் பல ஆற்றல்மிகு போராளிகளை இனங்காட்டி இருக்கின்றது. சிறந்த இராஜதந்திரிகளை உருவாக்கியிருக்கின்றது. தலைமைத்துவப் பண்புள்ளவர்களை இனங்ககண்டு அவர்களைப் பயன்படுத்திப் பெருமை சேர்த்திருக்கின்றது. இந்த வரிசையில் அனைத்துத் துறைகளிலும் ஒரு சேரப் பிரகாசித்தோர் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் கேணல் கிட்டு. 'எதனைச் செய்வதானாலும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும்" என்ற கோட்பாட்டைக் கொண்ட அவர், வாழ்ந்த போதும் தனது வாழ்வை முடித்துக்கொண்ட இறுதிக் கட்டத்திலும் தனக்குத் தரப்பட்ட பணியை நேர்த்தியாகச் செய்து முடித்தவர். அடிமட்டப் போராளியாக தனது 18 ஆவது வயதில் விடுதலைப் பயணத்தை ஆரம்பித்த அவர் ஒரு பயிற்சி ஆசிரியராக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக என ஒரு குறுகிய காலத்திலேயே தனது திறமையை நிரூபித்துக் கொண்டார். விடுதலைப் போராட்டம் பரிணாம வளர்ச்சி கண்ட காலத்தில் கேணல் கிட்டு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. பல்வேறு கெரில்லாத் தாக்குதல்களில் பங்கு கொண்டு தனது மன உறுதியையும், திறமையையும் நிரூபித்த அவர், 1985 இல் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலகட்டத்தில் தனது மதிநுட்பமான செயற்பாடுகளால் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த படையினரை முகாம்களுக்குள் முடக்குவதில் வெற்றி கண்டார். சகோதர இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் அவரது போராட்ட வாழ்வில் விமர்சனத்துக்குரிய ஒரு அத்தியாயமாக அமைந்திருந்த போதிலும் முன்னாள் போராளிக் குழுக்களின் பிற்காலச் செயற்பாடுகள் அவரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிங்களப் படையினரை முகாம்களுக்குள் முடக்கியமை தமிழர் போராட்டத்தில் மக்களைப் பாதுகாக்கக்கூடிய திறன் போராளிகளுக்கும் உள்ளது என்ற செய்தியைக் கூறியதென்றால் அதனைத் தொடர்ந்து அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நிர்வாகம் போராளிகளால் ஒரு தனியரசை நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. தொடர்ந்து வந்த காலங்களில் அவர் வித்திட்ட போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான உறவு இன்று வரை பிரிக்க முடியாத ஒரு உறவாக இருப்பதைக் காணலாம். தாக்குதல் சம்பவங்களே ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து வந்த காலகட்டத்தில் நடிகர் விஜய குமாரதுங்க உள்ளிட்ட குழுவினரின் யாழ். வருகை, கைதிகள் பரிமாற்றம் என பல விடயங்களூடாகவும் ஊடக அவதானத்தைப் பெறுவதில் கிட்டு வெற்றி கண்டார். அது மட்டுமன்றி, இத்தகைய செயற்பாடுகள் ஊடாக தமிழர் போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்குவதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. இந்தியப் படையினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த அவர், மோதல்கள் உருவானதன் பின்னர் மோதலுக்கான காரணத்தையும் தமிழர் தரப்பு நியாயத்தையும் வெளிக்கொணர மிகவும் பாடுபட்டார். இந்தச் செயற்பாடுகளின் போது இந்திய நடுவண் அரசு அவரை மிகவும் துன்புறுத்திய போதிலும் கூட அவற்றை மிகவும் இலாவகமாக எதிர்கொண்டு தன்னுடைய குறியை அடைவதில் சிரத்தையுடன் செயற்பட்டார். 90 இல் இலண்டனுக்குச் செல்ல வேண்டிய பணி தரப்பட்ட போது அதனைக்கூட சிறப்பாக ஏற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அதிகம் படித்திராத போதிலும் வாசிப்புக்கு ஊடாகத் தன்னை வெகுவாக வளர்த்துக் கொண்டிருந்த அவர் சர்வதேசப் பரப்புரைகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தவற்றை அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் இன்றும் கூட நினைவில் இருத்திச் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. தனது வாழ்நாள் முழுவதும் ஈழத் தமிழ் மக்களுக்காகவே செலவிடப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவருக்கு அந்த வாய்ப்பும் கிட்டியது. ;~குவேக்கர் பீஸ்| என்ற அமைப்பின் செய்தியோடு சமாதானத் தூதுவனாக தாயகம் திரும்பிக்கொண்டிருந்த போது அவரது கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. தான் எதற்காகச் செல்கிறேன் என்பதை அவர் விளக்கிய போதிலும் கூட அதனை ஏற்றுக் கொள்ளாத இந்தியா நயவஞ்சகமாகக் கப்பலையும் அதில் பயணம் செய்த பத்துப் போராளிகளையும் கைது செய்ய முயன்றது. உயிரைவிட மானத்தைப் பெரிதாக நினைக்கும் போராளிகள் தமது கப்பலை வெடித்துச் சிதறச் செய்து தமது உயிர்களைத் தியாகம் செய்து கொண்டனர். இதற்கூடாக தமது உறுதியை வெளிப்படுத்தியது மட்டுமன்றி இந்தியாவின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தினார். ஒரு போராளியாக, நல்ல நண்பனாக, சகோதரனாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக சேவகனாக, இராசதந்திரியாக, புகைப்படக் கலைஞனாக, இறுதி வரை உறுதி குலையாதவனாக கேணல் கிட்டு வாழ்ந்த வாழ்க்கை ஒவ்வொரு போராளிக்கும் முன் மாதிரியானது எனக் கூறினால் மிகையாகாது. -சண் தவராஜா- நிலவரம் (09.11.09)

வல்வை மண் ​தந்த வீரத்தமிழ்ப்பொட்டு கேணல் கிட்டு

வல்வை மண் தந்த-

வீரத் தமிழ்ப் பொட்டு!
வெல்வோம் நாம் என்று நல்ல தமிழ் மண் மீட்கத் துள்ளியெழுந்த தூய புலிவீரன்
- அவன் கிட்டு! இல்லை என்ற சொல் துறந்து கால் இல்லை என்று ஆன பின்னும்
தன் பணியை மண் பணியாய் தன் நெஞ்சில் சுமந்தான் -
தன் நலம் விட்டு! தலைவனுக்கு ஒரு கையாய் தமிழ் மண்ணிற்கோ தளபதியாய் நிலை
இழந்த மக்களிற்கு நீதிபதியாய் கலையுள்ளம் கொண்ட காளை - இவன் வாழ்ந்த
காலமதோ மிக மட்டு !

தாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல தன் பெண்ணையும் துறந்திங்கு அந்நிய
மண்ணில் அவனிருந்தாலும் எண்ணியதெல்லாம் ஈழமண் விடிவுதான்!
மண்ணைப் பொன்னாக்க அவன் செய்த புண்ணியங்கள் ஆயிரம் ஆயிரம் !
இதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து -
பன்னிரண்டு ஆண்டுகள்! நெஞ்சம் மகிழ........
தன் மண் நோக்கிப் புறப்பட்ட மாவீரன்!
என்ன நினைத்திருப்பான்?
வங்கக் கடலலையும் வழியனுப்பி வாழ்த்திசைக்க -
இந்தியமோ - இன்னோர் இழிசெயலை இருளில் திணித்து விட நம் வீரர் தமக்காக
வாழ்பவரல்லவே!

திண் வீரர் - மண் காக்க - விண்ணை உடைத்தொருகால் வீர இடிமுழங்க -
தண்ணென்ற நீரலையில் தம்மைக் கரைத்தனரே!
விண் வீரன் -

கிட்டு நீ எங்கள் காவிய நாயகன் .

{மீள்பதிவு

கேணல் கிட்டு வரலாற்றுத் தொகுப்பு 16-01-1993

கேணல் கிட்டு கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ண‌குமார், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், 02 /01 / 1960 - 16 /01 /1993) யாழ். மாவட்டம் வடமராட்சியின் கடற்கரைப் பிரதேசமான வல்வெட்டித்துறையில் சதாசிவம் ராஜலக்ஷ்மி தம்பதிகளின் இரண்டாவது மகனான கிருஷ்ண‌குமார் பிறந்தது 1960 ஜனவரி 2 ல். இவருடைய அப்பாவான சதாசிவம் நெல்லியடியில் பத்திரிகை அச்சகம் ஒன்று வைத்திருந்து அச்சுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். அரசியலில் ஈடுபாடு கொண்ட அவருடைய அம்மா ராஜலக்ஷ்மி தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார். கிட்டு குழந்தையாக இருந்த சமயம் 1961 ல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திலும் கலந்துகொன்டவர். கிருஷ்ண‌குமார்  தனது கல்வியை வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த சிதம்பரா கல்லூரியில் பயின்றார். இதே கல்லூரியில்தான் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் முன்னால் பிரதி தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா( மாத்தையா)வும் கல்வி கற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.ஒரே பள்ளியில் பயின்றதால் தலைவரின் நண்பனான‌ கிருஷ்ண‌குமார் ஏற்கனவே தலைவரின் உறவினருமாவார். கிருஷ்ண‌குமார் 18 வயது இளைஞனாக இருந்தபோது புலிகளுடன் இணைந்துகொண்டார். அவரை புலிகள் இயக்கத்தில் இணைத்தது சாட்சாத் வேலுப்பிள்ளை பிரபாகரனேதான். கிருஷ்ண‌குமார் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றனர். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக சென்ற விடுதலைப் புலிகளின் அணியில் கிட்டுவும் ஒருவர். வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்டவசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (g-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலி கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். 1983 இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். முதலாவது பயிற்சி பாச‌றையின் பொறுப்பாளராக‌ பொன்னம்மானும் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டுவும் நியமிக்கப்பட்டனர். விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா,பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் 100 போராளிகளுடன் பயிற்சி எடுத்துக்கொண்டார் கிட்டுவுக்கு வழங்கப்பட்ட தொடர்பாடல் குறிப்பு பெயர் கிலோ டெல்டா. பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். அதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார். தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் ஜெயனாத் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. அதே போன்று ஒக்டோபர் 1986ல் சந்திரிக்கா அம்மையாரின் கணவரான விஜய குமாரதுங்காவை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார். அத்துடன் டெசம்பரில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசாங்கக் குழுவை வரவேற்றதும் கிட்டுதான். 1987 மார்ச் 13 அன்று தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இரு கால்களிலும் காயம்பட்ட‌ கிட்டுவின் வலது கால் அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. காலை இழந்த போதும் தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989 இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்கு ஒக்டோபர் இறுதியில் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில், எரிமலை` எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். 1993 ல் கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, 1993 ஜனவரி 16ல் தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள். கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். "கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்" எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார். இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் - புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன. கெரில்லா அமைப்பாக இ

16-தை-1993 ல் வீரகாவியமான கிட்டு மற்றும் ஒன்பது வீரமறவர்கள்

* கேணல் கிட்டு சதாசிவம் கிருஷ்ணகுமார் வல்வெட்டித்துறை


* மேஜர். வேலன் மலரவன் சுந்தரலிங்கம் சுந்தரவேல்
வியாபாரிமூலை, பருத்தித்துறை


* கடற்புலி கப்டன் ஜீவா நடராசா மார்க்ஜெராஜ் கொய்யத்தோட்ட ஒழுங்கை,
பாசையூர், யாழ்ப்பாணம்


* லெப். கேணல் குட்டிசிறி இராசையா சிறிகணேசன் சுதுமைலை வடக்கு, மானிப்பாய்


* கடற்புலி கப்டன் றொசான் இரத்தினசிங்கம் அருணராசா அரசடி வீதி, நல்லுர்,
யாழ்ப்பாணம்


* கடற்புலி கப்டன் நாயகன் சிவலிங்கம் கேசவன் பொலிகண்டி, வல்வெட்டித்துறை


* கடற்புலி கப்டன் குணசீலன் (குணராஜ்) சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா 2- ம்
குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்


* கடற்புலி லெப். அமுதன் அலோசியஸ் ஜான்சன் 2- ம் குறுக்குத்தெரு,
நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்


* கடற்புலி லெப். நல்லவன் சிலஞானசுந்தரம் ரமேஸ் மணியந்தோட்டம்,
கொழும்புத்துறை யாழ்ப்பாணம்


* கடற்புலி லெப். தூயவன் மகாலிங்கம் ஜெயலிங்கம் கண்டிவீதி, யாழ்ப்பாணம்

கேணல் கிட்டு நினைவுத்தொகுப்பு {காணொளிகள்}

கிட்டு என்னும் காவிய நாயகன் 1/4

http://bit.ly/gnpfoc


கிட்டு என்னும் காவிய நாயகன் 2/4

http://bit.ly/dNjQgi


கிட்டு என்னும் காவிய நாயகன் 3/4

http://bit.ly/hwcgpL


கிட்டு என்னும் காவிய நாயகன் 4/4

http://bit.ly/hC1p8T


பொட்டுவின் நேர்காணல் 1/2

http://bit.ly/hQfR2v


பொட்டுவின் நேர்காணல் 2/2

http://bit.ly/gF2CZe

சூசையின் நேர்காணல்

http://bit.ly/f4kCQ3


கலைச்சிற்பத்தில் கேணல் கிட்டு

http://bit.ly/dFy8PO

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner