-->

நெஞ்சகலா 22ம் ஆண்டு நினைவில் அன்னை பூபதித்தாய்

அன்னை பூபதித்தாய் நீ அகிலாண்ட ஈஸ்விரி அருந்தமிழன் உயிர் காக்க அவதாரம் நீ எடுத்து அகிம்சை வழியில் அறப்போரை நீ தொடுத்தாய் அரக்கர்களோ உணராமல் உன் ஆருயிரைப் பறித்தெடுத்தார் பூமியின் பொறுமைகொண்டு சாமி வாசலிலே தவம் இருந்தாய் புரிந்து கொள்ளாப் பாவிகளால் புயலாக உன் ஆவி புகுந்து தமிழ் மக்களுள்ளே புலி வீரம் கொடுத்ததனால் புதுச்சரிதம் எழுதுகின்றார் புன்னகையுடன் நீயும் வாழ்த்தி அவர் வெற்றி பெற்று விடுதலையை வென்றெடுக்க அருள்புரிய வேண்டுமம்மா வேள்வியினிலே நெருப்பெரியும் இங்கு தமிழ் ஈழமதில் வேள்வியையே நெருப்பாக்கி விதையானார் மாவீரர் மறத்தமிழன் வீரமதை மகிமை பெறச்செய்தவரை உயர்த்தி எங்கள் தமழன்வழி உரம்பெற்று நிமிரவைத்து உன்னுடைய ஆசையைத்தான் நிறைவேற்றி வைப்பதற்கு உடனிருநது அருள்புரிய வேண்டும்மா எம் தாயே வீரம்விளைந்த மண்ணை மீட்டெடுக்க போராடும் வீரருக்குள் நீ இருந்து விடுதலையைப் பெற்றுத்தா காரிருளில் இருக்கும் எங்கள் கனகம் விளையும் மண்ணை பேரொளியால் மகிழவைத்து பெரும் வெற்றி ஈட்டித்தா பூவாக தமிழரது மனந்தனிலே உனைப் பதிக்க பூபதியாய் இறைவனவன் தந்தானோ உன்னையம்மா பாரில் உள்ள நற்றமிழன் அனைவருக்கும் அன்னை நீ பாசமுடன் உன்தாளை வணங்கி அருள் வேண்டுகின்றேன் .

தியாகச்சுடர் மாமனிதர் அன்னை பூபதி

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள் . யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது . பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை . பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம் . இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம் . அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை. இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க , சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு- அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது . அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர் . அவையாவன, 1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் . 2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை . ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான " பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர் . ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது . இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர் , விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள் , நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார். நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர் . அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர் . இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது .முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார் . அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது . இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை . மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர் . உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது . பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது . இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை . அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர் . அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர் . இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார் . முன்னெச்சரிக்கையாக " சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ , அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது " எனக் கடிதம் எழுதி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது . நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம். இடையில் பல தடங்கல்கள் வந்தன . இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர் . உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள் . உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது . ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார் . கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார் . அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர் . ******************************* ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது . திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன் . ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது . அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது .

தியாகச்சுடர் அன்னை பூபதி

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தாய்க்குலம் எழுச்சி கொண்டு போராடப் புறப்பட்ட போது தென் தமிழீழத்தில் உள்ள மட்டக்களப்பில் அன்னை பூபதி தன் வயிற்றினில் போர் தொடுத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்து என்று இந்திய அரசுக்குக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் காந்தியம் பற்றி புகழ்ந்துரைக்கும் இந்திய தேசத்துப் பிரதமர் அன்னை பூபதியின் உண்ணாவிரதத்தை எள்ளிநகையாடினார் . அன்னை பூபதி 19.04.1988 இல் 'தியாகச் சாவு' அடைந்தார். அன்னை பூபதியின் தியாகச் சாவு பற்றி அறிக்கை ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்தார் . 'எமது புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகிவிட்ட எமது தியாகிகளில் அன்னை பூபதி ஓர் உன்னத இடத்தைப் பெறுகிறார் . ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந்த சாதாரண வாழ்க்கையைத் துறந்து , சாதாரண பற்று உறவுகளைத் துறந்து, தனது இனத்தின் விடுதலைக்காக அவர் தனது உயிரை அர்ப்பணித்தார் . இந்திய இராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது . தனி மனிதப் பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழத்தாய்க் குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னத வடிவம் அடைகிறது " என்றார்

தியாகதீபம் திலீபன்

உண்ணாவிரதமிருந்த திலீபனுடன் பிரபாகரன் தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் (15.09. 1987) தொடங்கினார். அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன? 1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை " புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும். 4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே நிறுத்தவேண்டும். 5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை 13-08- 1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் (13-08- 1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும் நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்தனர். திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார். இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின் பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார். திலீபனின் முயற்சியால் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள் அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, ( 5) தமிழீழ விழிப்புக் குழுக்கள், (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8) தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன. அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில் திலீபன். பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள். மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல - தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக் கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார். அன்று இரவு பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன், சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும் வந்திருந்தனர். முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20. இரண்டாம் நாள்: முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம் போகவில்லை. மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும் போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார். இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது. ""அன்பார்ந்த மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல் இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும் வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்'' அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன் வந்தார். மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன். "இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன். "வேண்டாம் விடுங்க... நானே வருகிறேன்.' சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார். "தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும் குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர். "என்ன பகிடியா பண்ணுறீங்க - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு. ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. 3- ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24. நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24. நாடித்துடிப்பு சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22-ம் இருக்கவேண்டும். அதே நாள் இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25. 1986- இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால் திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது. ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது. கிட்டுவின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும் வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அன்று மாலை யாழ்க்கோட்டை ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார். பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தினார். ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர். "கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது சென்னையில் இருந்தார். மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர். யாழ்ப்பாணம் வந்த இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம், "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத் தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர். எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத் தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது. வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்தம் 80/50. நாடித் துடிப்பு 140. சுவாசம் 24. இந்திய அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப் போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை. ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார். இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர். பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை. தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத் சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில் மாத்தையா, செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை. பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன. நாடித்துடிப்பு 52. ரத்த அழுத்தம் 80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம். நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து திலீபனைப் பார்த்துச் சென்றார்கள். பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத் தொடங்கியது. யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ் பகுதி முழுவதும் பரவியது. 265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம் சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987 காலை 10. 48 மணிக்குப் பிரிந்தது. எங்கும் அழுகை... விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது. எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15 மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது. (ஆதாரம்: தியாகப் பயணத்தில் திலீபனுடன் 12 நாட்கள்: மு.வே.யோ.வாஞ்சிநாதன்).

ஈழ களத்திலே முதல் களப்பலி

88 : விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி! சங்கர் தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் "பூந்தோட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன. "புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்' என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள "ஈழப் போர்முனையில் புலிகளுடன்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அந் நூலில் அவர் மேலும், "போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, "தன்பிரீன் தொடரும் பயணம்' என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர். தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது. இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது. ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், " விடுதலைப்புலிகள்' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு. நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: "நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி. ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார். இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982- ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார். பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க - அவருடைய உயிர் பிரிந்தது. தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், "என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்' என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. "நடுகல்" வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது.

திம்பு பேச்சுவார்த்தை

திம்பு பேச்சுவார்த்தை ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் பெற்ற விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப்., ஈரோஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தின் சமரசத் திட்ட அட்டவணை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. "இலங்கை ராணுவத்தினருக்கும் எமது விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த யோசனைகளை கவனமாகப் பரிசீலனை செய்துள்ளோம். இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தம் வகிக்கும் நிலையையும், நல்லுறவையும் ஏற்படுத்தும் பணியையும் மதிப்பதோடு, எமக்களித்த வாக்குகளையும் உறுதிகளையும் ஏற்பதோடும், தமிழர் தேசிய பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குரிய திட்டவட்டமான யோசனைகளை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கு வேண்டி அதற்கு உகந்த சூழலையும், அமைதியை நிலைநாட்டுவதற்குரிய நிபந்தனைகளையும் உருவாக்குவதற்கு உதவ, குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக இங்கு கைச்சாத்திடும் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த நாம் கூட்டாக தீர்மானித்துக் கொண்டோம். குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக சம்மதிக்கும் அதேவேளையில், முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத் திட்ட அமைப்பினுள் அடங்கும் ஒழுங்குகளும் நிபந்தனைகளும் எம்மை சமநிலை அற்றவர்களாக்குகின்றது. சிந்திப்பதற்குரியவை எமது மாற்று யோசனைகள் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டிருந்தன. (அ) (1) போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் அளிக்கிறோம். (2) புதிய சிங்கள குடியேற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு பதிலாக, வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நிறுத்துவதற்கு வலியுறுத்துவது வேடிக்கையானது. இந்தப் பகுதிகளில் ராணுவத்தாலும் சிங்கள ஆயுதந்தாங்கிய குடியேற்ற வாசிகளாலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்கு ஆளானால் என்ன செய்வது? இவ்வகை அரச அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும். (3) முதல் கட்ட அட்டவணை, காலத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலைகள் தொடருமானால் அவை ஒப்பந்த மீறலாக கருத வேண்டும். (ஆ) அரச பயங்கரவாத - அவசர காலச் சட்டங்கள் அமலில் உள்ள நிலையில் மூன்றாவது சட்டம் 2- வது பிரிவில் உள்ளபடி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸப்ரிடம் ஒப்படைப்பது சரியல்ல. (இ) (1) போர் நிறுத்தம் செய்யப்பட்ட ஓரிரு தினங்களுக்குள் அதாவது இப் பேச்சுவார்த்தை (ஜூலை 8, 1985-இல்) தொடங்கும் நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் அரசியல் தீர்வுக்கான " செயல் திட்டத்தை முழுமையாக அளிக்க', இலங்கை அரசு முன்வர வேண்டும். (2) இப்பேச்சுவார்த்தைக்கு "செயல்திட்ட வரைவை' ஏற்றுக்கொள்வதையே நாங்கள் நிபந்தனையாக வைக்க விரும்புகிறோம். தமிழர்களின் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வுக்கு இடமளிக்காமல், அவர்களை ஏமாற்றி பேச்சுவார்த்தை நாடகம் என நடத்தி, இறுதி முடிவு எட்டப்பட்டாலும் அவற்றைக் குப்பையில் போடுகிற சிங்கள அரசுகளின் செயல்களால் பெற்ற அனுபங்களே இவ்வாறு நிபந்தனை வைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். நான்காவது கட்டத்துக்குண்டான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதில் நல்ல யோசனைகளை எமது பார்வைக்கு வைக்க வேண்டுகிறோம். (அ) போர் நிறுத்த கால எல்லை நீட்டிப்புக்குச் சம்மதிக்க முடியாது. (ஆ) போராளிக் குழுக்களைத் தீவிரவாதிகள் ( Militant) என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியை "தமிழரது அரசியல் தலைமை' என்றும் குறிப்பிடப்படுவதையும் நாங்கள் மறுக்கிறோம். இந்த யோசனைகள் இந்திய அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு, இவற்றை இலங்கை அரசுக்கு அறிவித்து அவர்களும் ஏற்றால், அவற்றை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. திம்பு பேச்சுவார்த்தை 1985-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கால அட்டவணையைக் கொண்டிருந்தது. இப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக பூட்டான் மன்னர் அனைவரையும் வரவேற்று தேநீர் விருந்து அளித்தார். போராளிக் குழுக்களின் அங்கத்தவர்களும் நீண்ட நெடுநாளைக்குப் பின்னர் ஒருவரையொருவர் அப்போதுதான் சந்தித்ததால், ஓர் இளகிய சூழல் நிலவியது. பின்னர், பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் ( PLOT) சேர்ந்து ஒரு குழுவாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு ((EROS) அடங்கிய ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENLF)-யினர் ஒரு குழுவாகவும் வந்திருந்தனர். இதில் ஒவ்வொரு அமைப்பும் தலா இருவர் வீதமும் சிங்கள அரசின் சார்பில் ஜெயவர்த்தனவின் தம்பி ஹெக்டர் ஜெயவார்த்தன தலைமையில் ஒரு குழுவும் பங்கேற்றது. அ.அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தம், வரதராஜ பெருமாள், சத்யேந்திரா, ராபர்ட், ரத்தினசபாபதி, ராஜிவ்சங்கர், சித்தார்த்தன், வாசுதேவா, திலகர், உள்ளிட்ட 13 பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சு என்பது ஆக்கப்பூர்வமாக இல்லை. தமிழர்கள் பயனடையக் கூடாத பேச்சுக்களையே சிங்கள அரசுத் தரப்பில் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை குறித்து மறைந்த புஷ்பராஜா எழுதியிருப்பதாவது: "எப்பவுமே சிங்கள அரசாங்கத்தின் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொண்டதில்லை. பிரச்னையைத் தீர்க்கப்போவது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி, காலத்தைக் கடத்துவது அவர்களது அரசியல் சூத்திரமாகும். இந்த நடவடிக்கையில் இலங்கை பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா தொடங்கி இதுவரை அதுதான் நடந்து வருகிறது. இனியும் அதே சூத்திரமே கையாளப்படும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை'. (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் பக்.417). இந்த இழுத்தடிப்புப் பேச்சு 1984-ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் திடீரென மாற்றப்பட்ட தமிழர்களின் விருப்பங்களுக்கெதிரான பழைய 14 அம்சத் திட்டத்தையொட்டியே அமைந்தது. இது போராளிக் குழுக்களுக்கு வெறுப்பைத் தந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கமும் வெறுப்படைந்தார். காரணம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்று அம்மாநாடு "திடீர்' என ரத்தான சம்பவத்தில் அவரும் ஒரு பங்கேற்பாளர். வட்ட மேஜை மாநாட்டிலேயே உரிய அதிகாரம் கொண்ட தமிழ் மாநில அமைப்பு என்கிற ஏற்பாடு இல்லை. அரைகுறையான அதிகார ஒப்படைப்புத் திட்டத்தையும் ஸ்ரீமாவோ, புத்த பிக்குகள் சங்கத்தினர், ஜே.வி.பி. போன்ற சிங்களப் பேரினவாதிகள் எதிர்த்த காரணத்தால் பின்வாங்கியதாக ஜெயவர்த்தன நாடகமாடினார். அதே திட்ட அடிப்படையில் இப்பொழுதும் பேசுவது சரியல்ல என்று தமிழர் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தனர்.

14 அம்ச கோரிக்கை திட்டம்

இலங்கையில் ஈழத் தமிழ் அகதிகள் 1983 , டிசம்பர் 1-ஆம் தேதிய ஜனாதிபதியின் கூற்றின் ஆறாம் பத்தியின் நியதிகளின்படி கொழும்பு, புதுதில்லி கலந்துரையாடல்களின் முடிவாலெழுந்த பின்வரும் பிரேரணைகள் அனைத்துக் கட்சிகள் மாநாட்டிற்கு கருத்தில் எடுத்துக் கொள்வதற்குப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இப்பிரேரணைகள் இலங்கையின் ஐக்கியம், முழுமை தொடர்பானவையாகும்; அத்துடன் அனைத்துக் கட்சிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைவனவாகும். 1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் தீர்மானங்களால் அவை உடன்பட்டு, அந்த மாவட்டத்தினுள்ளே நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் (மக்கள் தீர்ப்பினால்) அங்கீகரிக்கப்படின், ஒரு மாகாணத்திலுள்ள மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு அதிகமான பிரதேச சபைகளாக இணைவதற்கு அனுமதிக்கப்படுதல். 2. முறையே வடக்கு மாகாணத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் மாவட்ட சபைகளைப் பொறுத்தவரை, பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தமை காரணமாக, அவை இயங்காதிருப்பதனால் அந்த ஒவ்வொரு மாகாணத்தினுள்ளும் அவைகளின் இணைப்பை ஏற்றுக் கொள்ளல். 3. தீர்மானிக்கப்படுமிடத்து, ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு பிரதேச சபையைக் கொண்டிருக்கும். ஒரு பிரதேச சபையில், பெரும்பான்மை வகிக்கும் கட்சியின் தலைவர் அந்தப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக ஜனாதிபதியால் முறைமையாக நியமிக்கப்படும் மரபு நிலை நிறுத்தப்படும். பிரதேசத்திற்கான ஓர் அமைச்சர் குழுவை முதல் அமைச்சர் அமைப்பார். 4. ஜனாதிபதியும் பாராளுமன்றமும் பிரதேசங்களுக்குக் கை மாற்றம் செய்யப்படாத எல்லா விஷயங்களுக்கும், அத்துடன், பொதுவாக முழுக் குடியரசினதும் இறைமை, முழுமை, ஐக்கியம், பாதுகாப்பு, வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றைப் பாதுகாத்தல் தொடர்பான மற்றெல்லா விஷயங்களுக்கும் முழு மொத்தமான பொறுப்பைத் தொடர்ந்து வகிப்பர். 5. பிரதேசத்தின் சட்ட அதிகாரம் பிரதேச சபைகளுக்கு உரிமையாக்கப்படும். அவை பிரதேசத்தின் உள்ளகச் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், நீதி நிர்வாகம், சமூக, பொருளாதார அபிவிருத்தி கலாசார விஷயங்கள், காணிக் கொள்கை ஆகியன உள்பட, சில விதித் துரைத்த நிரற்படுத்தப்பட்ட விஷயங்கள் தொடர்பாகச் சட்டங்களை ஆக்கவும் நிறைவேற்றி அதிகாரங்களைச் செயற்படுத்தவும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். பிரதேசங்களுக்குக் குறித்தொதுக்கப்பட வேண்டிய விஷயங்களின் நிரல் விவரமாகத் தயாரிக்கப்படும். 6. வரிகள், தீர்வைகள் அல்லது கட்டணங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கும் பிரதேச சபைகள் அதிகாரம் பெற்றிருக்கும். அத்துடன், கடன்கள் வாயிலாக வளங்களைத் திரட்டுவதற்கும், அந்த வரும்படிகள் குடியரசால் கொடுக்கப்படும் மானியங்கள், ஒதுக்கீடுகள், உதவித் தொகைகள் ஆகியன கொண்ட அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்திற்கெனத் தாபிக்கப்படும் திரட்டிய நிதியமொன்றில் வரவு வைக்கப்படும். காலத்துக்குக் காலம் நியமிக்கப்படும் பிரதிநிதித்துவ நிதி ஆணைக்குழுவின் விதப் புரைகளின் பேரில் நிதி வளங்கள் பிரதேசங்களுக்குப் பங்கீடு செய்யப்படும். 7. ஒவ்வொரு பிரதேசத்திலும் மேல் நீதி மன்றங்களின் அமைப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இலங்கையின் உயர் நீதிமன்றம், முன் முறையீடுகளை ஏற்று ஆராய்தலையும், அரசியல் யாப்புச் சார்ந்த சட்ட அதிகாரத்தையும் செயற்படுத்தும். 8. ( அ) பிரதேசத்தின் அலுவலர்களையும் ஏனைய பகிரங்க ஊழியர்களையும் (ஆ) பிரதேசத்துக்குத் துறைமாற்றுக்காளாத்தக்க அத்தகைய ஏனைய அலுவலர்களையும் பகிரங்க ஊழியர்களையும் உள்ளடக்கியதாக ஒவ்வொரு பிரதேசமும் பிரதேச சேவை ஒன்றினைக் கொண்டிருக்கும், ஆட்சேர்ப்புக்கும், பிரதேச சேவையின் உறுப்பினர் தொடர்பான ஒழுக்காற்று அதிகாரிகளைச் செயற்படுத்துவதற்கும் பிரதேச பகிரங்க சேவை ஆணைக்குழு ஒன்றை ஒவ்வொரு பிரதேசமும் கொண்டிருக்கும். 9. இலங்கையின் ஆயுதப்படைகள் தேசிய இனத்தின் நிலையைப் போதுமானளவு பிரதிபலிப்பனவாக இருக்கும். வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ளகப் பாதுகாப்புக்கான போலீஸ் சேவைகள் அந்தப் பிரதேசங்களின் இனத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பனவாகவும் இருக்கும். 10. திருகோணமலைத் துறையையும், துறைமுகத்தையும் நிர்வகிப்பதற்கு மத்திய அரசின் கீழ் துறைமுக அதிகாரி சபை ஒன்று நிறுவப்படும். துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் வருவதற்கான விஷயங்களும் சபைக்குக் குறித்தொதுக்கப்படும் அதிகாரங்களும் மேலும் ஆராயப்படும். 11. காணி நிர்ணயம் பற்றிய ஒரு தேசியக் கொள்கை, காணிக் குடியேற்றத்தை எந்த அடிப்படையில் அரசு மேற்கொள்ளல் ஆகியன ஆய்ந்து நிறைவேற்றப்பட வேண்டியனவாகும். பெரிய செயற்றிட்டங்கள் மேல் உடன்பாடு ஏற்படுதற்கு உட்பட்டுக் குடிநிலைச் சம நிலையை மாற்றாதவாறு இனவிகித சமத்தை அடிப்படையாகக் கொண்டு குடியேற்றத் திட்டங்கள் யாவும் அமைதல் வேண்டும். 12. அரச கரும மொழியான சிங்களம், தேசிய மொழியான தமிழ் ஆகியவை தொடர்பான அரசியல் யாப்பையும் ஏனைய சட்டங்களையும் அத்துடன், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவை தொடர்பான அதே போன்ற சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளப்படுதலும் நடைமுறைப்படுத்தலும் அவசியம். 13. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவைப்படக்கூடிய அரசியலமைப்பு மாற்றங்களையும் சட்ட மாற்றங்களையும் தயாரிப்பதற்கு மாநாடு ஒரு குழுவை நியமித்தல் வேண்டும். அரசாங்கம் தனது செயலகத்தையும் அவசியமான சட்ட அலுவலகங்களையும் வழங்கும். 14. சட்டவாக்க நடவடிக்கைக்காகப் பாராளுமன்றத்துக்குச் சமர்பிக்கப்படுதற்கு முன்னர், அனைத்துக் கட்சிகள் மாநாட்டுக் கருத்து இணைக்கங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினாலும் அநேகமாக ஏனைய கட்சிகளது நிறைவேற்றுச் சபைகளினாலும் கருத்துக் கெடுத்துக் கொள்ளப்படும். இந்தப் 14-அம்சத் திட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இலங்கையில் இத்தனை ரத்தம் சிந்தப்பட்டிருக்காது. ஒரு தேசம் என்கிற கட்டுக்குள் சிங்களரும் தமிழரும் ஒற்றுமையாக சம உரிமைகளுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அதுவல்லவே சிங்கள இனவாத அரசின் நோக்கம். தில்லியில் இந்திரா காந்தி அம்மையாரிடம் நல்ல பிள்ளைகளாகத் தலையை ஆட்டிவிட்டு வந்தவர்கள், கொழும்பு திரும்பியபோது தங்கள் சுய உருவத்தைக் காட்டத் தொடங்கி விட்டனர்! 65 : ஜெயவர்த்தனாவின் புதிய 14 அம்சத்

தமிழ் மக்களை சட்டரீதியாக அடக்க கொண்டுவரப்பட்ட , "அவசரகாலச்சட்டம்"

புதிய அரசமைப்புச் சட்ட எதிர்ப்பு ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பிறகு சிங்களப் பேரினவாதம் பெரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது எனலாம். தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியும், முடிந்தால் முழுவதுமாக வெளியேற்றிவிடும் முயற்சியும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1971-74 தர நிர்ணயம் மற்றும் மாவட்ட ஒதுக்கீடுகள் சட்டம்: செய்தி நிறுவனத் தணிக்கை; தர நிர்ணயம் மற்றும் கல்வித் துறை மாவட்ட ஒதுக்கீடுகள் பல்கலைக்கழக அனுமதியின் கீழ் கடைபிடிக்கப்பட்டன. புத்தக வெளியீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமூக வேறுபாடுகளைச் சீர் செய்வதற்காக இவை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. பல்கலைக்கழக வளாகங்கள் முறைப்படுத்தப்படுதல் ஏற்கெனவே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்திய விதம் சிக்கல் மிகுந்ததாக இருந்தது. தமிழரின் பல்கலைக்கழக அனுமதிகளை இது மிகவும் பாதித்தது. படித்த தமிழ் இளைஞர் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு பலத்த அடியைக் கொடுத்தது. 1974 யாழ் பல்கலைக்கழக புனரமைப்புச் சட்டம்: பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தைத் துவக்கியதன் மூலம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை தமிழ் மக்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மீண்டும் இதனை இங்கு செய்த விதம் கேள்விக்குறியாக மாறியது. தர நிர்ணயமும் இச் சட்டத்தோடு இணைந்து தமிழ் மாணவர்கள் விகிதமும், அங்கு அனுமதிக்கப்பட்ட பாடங்களும் நிறைவு தருவதாக இல்லை. 1971-1978 புதிய அரசியல் அமைப்புச் சட்டங்கள்: 1972- இல் இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது. புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகியது. 1948-ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மையோருக்கு இருந்த 29-ஆவது பிரிவு-தமிழர் உரிமைகளுக்கான சட்ட ரீதியான சிறப்புப் பாதுகாப்புகள், மற்றும் மத சிறுபான்மையோருக்கான பாதுகாப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. சிங்கள மொழி, சிறப்புத் தகுதியைப் பெற்றது. புத்த மதம் அதிகார பூர்வமான மதமாக அறிவிக்கப்பட்டது. சிங்களப் பேரினவாத அடக்குமுறை வடிவத்திற்கு, மதவாத முகமூடிகளைத் தரித்து அதைச் சட்டபூர்வமானதாக ஆக்கியது. அதேபோன்று 1978-ஆம் ஆண்டு புதிய அரசியல் சட்டம், புதிய ஆட்சி முறை-ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் நாட்டைக் கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு அதிகார வடிவம் ஒரு முனையாக மையத்தில் குவிக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த சட்ட ஷரத்துகளில் பலமுனை அதிகார வடிவ அமைப்புகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ( மாவட்டம், உள்ளூர் ஆட்சி அதிகாரம் ஆகியவை பரவலாக்கப்பட்ட அதிகார வரம்புகள் குறுக்கப்பட்டன). இதன் மூலம் நாட்டில் உடனடியான பொருளாதாரத் திட்டமிடல், புதிய பொருளாதாரக் கொள்கைகள் நிறைவேற்றம் போன்றவை நிகழ்த்துவதற்கு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டன. 1972-74 நிலச் சீர்திருத்தம்: 1972-74 நிலச் சீர்திருத்தங்கள் தமிழர்களைப் பெரிதும் பாதித்தது. தோட்டங்களில் பணியாற்றிய இந்தியத் தமிழ்த் தொழிலாளர்கள் நிலங்களை இழந்தனர். நில ஆக்கிரமிப்பின் கீழ் பல நிலங்கள் பிடுங்கப்பட்டன. விவசாய நிலங்களைப் பிரித்து அளிப்பது என்றில்லாமல் மலைப்பகுதியில் உள்ள தோட்ட நிலங்களைப் பிரிப்பது இதன் முக்கிய அம்சமாக இருந்தது. நிலச் சீர்திருத்தத்தில் தமிழர்களுக்குப் பதிலாக சிங்களவர்களுக்கு நிலங்கள் கை மாறின. 1975 காணி உச்சவரம்புச் சட்டம்:  தமிழர்கள் தங்களது சொந்த நிலம் என்று பரம்பரை பரம்பரையாகக் கருதி வந்த பகுதிகளில் சிங்களவர்களின் ஆதரவால் இட ஆக்கிரமிப்பும், அரசு உதவியுடன் கூடிய குடி அமர்த்தலும் செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் குடி அமர்த்தப்பட்டனர். தமிழர்களுக்குப் போதிய பங்கீடு கிடைக்கவில்லை. மேலும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் உதவியுடன் மாதிரிக் கிராமங்களையும், மாதிரிக் காலனிகளையும் அரசு உருவாக்கியது. பழைய குடியிருப்புகள் கலைக்கப்பட்டுப் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தொழிலாளர் குடியிருப்புகள், சிங்களவர் காலனிகளாக ஆக்கப்பட்டன. அதில் சிங்களவர்கள் பெரும் அளவில் குவிக்கப்பட்டனர். தமிழர்களுக்கான ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது. 1979 பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மனித உரிமைகளை மறுக்கும் பல விதிகள் இந்தச் சட்டத்தினுள் நுழைக்கப்பட்டன. இதன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் 18 மாதங்கள் அமைச்சர் தீர்மானிக்கும் இடத்தில் வைக்கலாம். போலீஸப்ர் முன் ஒருவர் கூறிய புகார் ஆதாரமாகக் கருதப்படும். கொலை, கடத்தல், ஆயுதம் வைத்திருத்தல், இனக்கலவரம் ஏற்படுத்தக்கூடிய சொற்கள், சைகைகள் இதில் அடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 5 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். 1980- பல நல்வாழ்வுத் திட்டச் சட்டங்கள்: 1. கிராமப்புறங்கள் மேம்பாட்டுத் திட்டம். 2. நட்லி குடியேற்றத் திட்டம். 3. நகர விரிவாக்கத் திட்டம். 4. கிராமப்புற ஒன்றிணைப்பு. 5. பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்துதல். 6. மீன் காடாக்கம். 7. மாதிரிக் கிராம நிலப்பங்கீடு. இந்தச் சட்டங்கள், நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் சிங்களமயமாக்கும் கொள்கையை ஒட்டி வந்தனவாகும். மாதிரிக் கிராமங்களை உருவாக்கியது போன்று மாதிரித் தோட்டங்களும் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. மாதிரிக் கிராமங்களில் விவசாயிகளுடைய மேம்பாட்டிற்கு என்று கூறிக்கொண்டு சிங்கள விவசாயிகளைக் குவிக்கவும் தமிழ் விவசாயிகளை வெளியேற்றவும் இச்சட்டம் பயன்பட்டது. அதேபோன்று மாதிரித் தோட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றித் தமிழர்களை வெளியேற்றக்கூடிய அவர்களை முற்றாகப் புறக்கணிக்கக் கூடிய வகையில் இவைகள் அமைந்தன. மீன் காடாக்கம் என்ற திட்டத்தின் கீழ் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நகர விரிவாக்கம் என்பது மலையகத் தமிழ் நகரங்களை விரிவாக்குவதன் கீழ் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகளை அதிகப்படுத்தி, நகரத்தைச் சிங்களப்படுத்தும் திட்டத்தினை உருவாக்கினார்கள். கிராமப்புற- தோட்டப்புற ஒன்றிணைப்பு என்ற மட்டத்தின் கீழ் நாலைந்து அடுத்தடுத்த கிராமங்களை இணைப்பதன் மூலமும், அதற்கான பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமும் விவசாயப் பகுதி நிலங்களில் குடியேற்றத்தைத் திணிப்பதன் மூலமும் சிங்கள மயமாக்கப்பட்டது. நல்வாழ்வுத் திட்டங்களின் பெயரில் அவை சிங்களவர் நல்வாழ்வுத் திட்டங்களாகவே உருவெடுத்தன. சட்ட ரீதியான ஒடுக்கு முறையின் மூலம் பொருளாதார ரீதியாகத் தமிழர்களைப் பின் தள்ளினர். பொருளாதார ரீதியான பின் தள்ளுதல் மூலம் வாழ்நிலை மாற்றங்களில் குழப்பங்களை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையில் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கும் உத்திரவாதமற்ற வாழ்க்கைக்கும் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதம் தள்ளியது. அவசரகாலச் சட்டம்: 1983- ஆம் ஆண்டில் தொடங்கி ஆண்டுக் கணக்கில் நாடாளுமன்ற ஒப்புதல் மூலம் யாழ்ப்பாணத்தில் அவசரநிலை நீட்டிக்கப்பட்டது. இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டால், சாதாரண உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டுவிடும். கைது, தடுப்புக்காவலில் வைப்பது, சடலங்களை அழிப்பது போன்றவை தாராளமாக நடைபெறும். தடுப்புக்காவலில் ஒருவர் வைக்கப்பட்டால், அவரது உறவினரிடம் தெரிவிப்பது அவசியம் என ஐ.நா.சபையின் 92 வது பகுதி அனுமதிக்கிறது. ஆனால், இலங்கையின் அவசரகாலச் சட்டத்தில் இதற்கு இடமில்லை. தடை செய்யப்பட்ட பகுதிகள்: கடல் பகுதிகள்-யாழ்ப்பாணம்-மன்னார், வவுனியா-முல்லைத்தீவு போன்ற பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றில் தடை விதிக்கப்பட்டால், மீன்பிடிக்க, படகில் செல்ல, கடைத்தெரு, மருத்துவமனை, கல்விச்சாலை மற்றும் அலுவலகங்கள் செல்ல யாவற்றுக்கும் தடை உண்டு. கடல் பகுதியில் மீனவர் மீன்பிடித்தொழிலில் இறங்கமுடியாது. எல்லை சுருக்கப்பட்டுவிடும். நகரங்களில், காடுகளில் அனுமதியின்றி நடமாடுவோரைச் சுட்டுத்தள்ளும் ஆணையை போலீஸப்ர், ராணுவத்தினர் யாரிடமும் பெறத் தேவையில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக ரத்தாகிவிடும். இவைகளின் மூலம் சிங்களப் பேரினவாதம் புத்தத்தின் முகமூடி தரித்து ரத்தச் சேற்றில் கைகளை நனைக்கக் கூடிய அளவிற்கு முன்னேறியது.

காலம் காலமாக தமிழ்மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல்கள்

36 : ஜெயவர்த்தனாவின் அடக்குமுறைகள் ஜெயவர்த்தனா  1977- ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன் வைத்து நிற்கும் அதே வேளையில் தமிழர் மத்தியிலான எழுச்சி, உணர்ச்சி ஊட்டக்கூடியதாக மாறியது. அதேபோன்று சிங்கள வெறியர்களின் வெறியாட்டமும் வேகமடைந்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டுமே இனக் கலவரம் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதை ஒட்டியே 1977-ஆம் ஆண்டுக் கலகத்தை காண வேண்டும்.  1977- ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி அடைந்து ஆட்சியை அமைத்தது வெறிக் கூட்டத்திற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.  அநுராதாபுரம், குருனாகலை, கோகாலை, களனியா, கொழும்பு, கந்தளாய், அம்பாறை, திருகோணமலை, மூதூர், இரத்னபுரி, கண்டி ஆகிய மாவட்டப் பகுதிகள் கலவரத்தின் அடித்தளமாக விளங்கின. 1977-இல் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் மடிந்தனர். இக் கலவரத்தால் 77,000 தோட்டத் தொழிலாளர்கள் வீடிழந்து அகதிகளாயினர்.  அரசாங்கத்தின் தலைவர்கள் வெறிமிக்க வகையில் அறிக்கைகளை விடுத்தனர். "போர் என்றால் போர்' "சமாதானம் என்றால் சமாதானம்' என்று ஜெயவர்த்தன கொக்கரித்தார். "சிங்களவரோடு போரிட்டு மடியப் போகிறீர்களா அல்லது இணங்கி வாழப் போகிறீர்களா என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்' என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தவர் ஜெயவர்த்தன.  தமிழ் ஈழத்திற்காகப் போராடுவோர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியே இந்த அடக்குமுறையைச் சிங்களவர்கள் கையாண்டனர்.  அரசு தரப்பில் உள்ள வெறியர்களாலேயே தமிழ் எதிர்ப்புப் பிரசாரம் செய்யப்பட்டது. அமைச்சர் சிறில் மத்தியூ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், ""பயங்கரவாதத்தைச் சட்டபூர்வமான வழிமுறைகளில் தடுத்து நிறுத்த முடியாது; யாரும் தடுத்து நிறுத்தியதும் இல்லை. பயங்கரவாதம், பயங்கரவாதத்தாலேதான் இதுவரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.*  இந்தக் கலவரத்தில் குண்டர்களை அணி திரட்டுவது என்பது போய், அரசே போலீசை அணி திரட்டி தாக்குதலை மேற்கொண்டது. இதில் இரண்டு வகைத் தந்திரங்கள் கையாளப்பட்டன.  சிங்களவர்கள் பெரும்பான்மையாய் உள்ள தென் பகுதியில், சிங்கள மக்களில் இருந்து குண்டர்களைத் திரட்டிச் சிறுபான்மைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  ஆனால் வட பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அரசின் காவல் துறையே ஆயுதமேந்தித் தாக்கியது. அரசு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் இக்கலவரத்தை முன்னின்று நடத்த வழிகாட்டியாய் இருந்த டி.ஐ.ஜி. கலவரம் முடிந்தவுடன் ஐ.ஜி. ஆகப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறார்.  1977- இல் நடந்த இந்த மோசமான கலவரத்தைப் பற்றி அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல்வேறு மனித உரிமைக் கழகங்கள் நிர்ப்பந்தித்தன. கலவரத்தைப் பற்றி விசாரிக்க அனா செனிவரத்தினாவையே அரசு நியமிக்கிறது. அவர் அளித்த அறிக்கையை 1983- இல்தான் அரசு வெளியிட்டது. அந்தச் சமயம் அவர் மலேசியாவில் ஹை கமிஷனராக பதவி பெற்றுப் போய்விட்டார்.  அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிடுகிறார்: "தேர்தல் நேரத்தில் நடந்த வன்முறையில் 7,817 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 78 துப்பாக்கிச்சூடும், 62 கொலைகளும், திருட்டு, கொள்ளை அடிப்பு, சூறையாடல், கற்பழிப்பு அனைத்தும் இதில் அடங்கும்.  மேலும் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரத்தில் 3,327 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 131 கொலைகளும், 74 கற்பழிப்புகள் உட்பட சூறையாடல்களும், தாக்குதல்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 77-ஆம் ஆண்டு முடிவில் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யும்போது மொத்தம் 83,082 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 76-ஆம் ஆண்டு கலவரத்தை ஒப்பிடுகையில் 48 சதவிகிதம் அதிகமாகி உள்ளது.  இன ரீதியான தாக்குதல்களின் விளைவாகத்தான் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு ஏற்பட்டு இந்த 48 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டது' என்கிறார்.  1978- ஆம் ஆண்டு ஜெயவர்த்தன புதிய அரசியல் சட்டத்தை அமல்படுத்துகிறார். இதற்கிடையில் அரசாங்கத்தினுடைய அதிரடி விசாரணைக் கைதுகளும், சித்திரவதைகளும் தொடர்ந்து நடக்கின்றன. சித்திரவதை புரிவதில் மிகச் சிறந்த திறமைசாலியாகப் பேர் எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை என்பவர் தீவிரவாத தமிழ் இளைஞர்களால் 25.4.78 அன்று ( விடுதலைப்புலிகளால்) துப்பாக்கியால் சுட்டுச் சாகடிக்கப்படுகிறார். ("புலிகள் வரலாறு' 1975-1984)  அதோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக ஒரு போலீஸ் கோஷ்டியே தாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறது. (இன்ஸ்பெக்டர் பேரம்பலம், காவலர் பாலசிங்கம், போலீஸ் டிரைவர் ஸ்ரீவர்த்தனா ஆகியோர்)  உடனடியாக அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவசரநிலைப் பிரகடனம் செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.  6 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். பலர் சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். புதிய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிக்கு ஒட்டுமொத்தமான அதிகாரம் அளிக்கும் வகையில், புத்தமதமும், சிங்கள மொழியும் விசேஷ அந்தஸ்தைப் பெற்று, தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.  இதைத் தொடர்ந்து தீவிரவாதத் தமிழ் இளைஞர்களால், ஏர்சிலோன் கம்பனியின் ஆவ்ரோ விமானம் நொறுக்கப்படுகிறது. (7.9.1978- )  இந்நிகழ்ச்சி அரசுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும், தமிழ்ச் சுதந்திர இயக்கத்திற்கு ஓர் உத்வேகத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறுகிறது. இதற்கிடையில் பல வங்கிகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.  1979- இல் தொடர்ந்து வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜெயவர்த்தன பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமலாக்குகிறார். அரசியல் சட்டத்தில் மனித உரிமைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. எந்தவிதமான விசாரணையுமின்றி, யாரையும் கைது செய்யவோ, 18 மாதம் வரை காவலில் வைக்கவோ ஒரு தனி அதிகாரத்தை ராணுவம் பெறுகிறது. கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்குவதற்கு இது வழிவகுத்தது.  யாழ்ப்பாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணப் பகுதிக்கு ராணுவப் பட்டாளங்கள் மேலும் பல அனுப்பப்படுகின்றன.  பிரிகேடியர் வீரதுங்காவிற்குத் தனி அதிகாரம் அளிக்கப்பட்டு, "தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுங்கள்' என்ற ஜனாதிபதியின் கட்டளையுடன் அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுகிறார்.  6 மாதத்தில் தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று சூளுரைத்து, சட்டத்தால் தனித்த அதிகாரம் அளிக்கப்பட்டு, அரசால் ஊக்குவிக்கப்பட்டு யாழ் பகுதிக்கு அவர் வருகிறார். யாழ் பகுதியில் ஒரு பாசிச ராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறார்.  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் கைதும், சித்திரவதையும் மிருகத்தனமாக நடைபெறுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் சாலையோரத்தில் தூக்கி வீசப்படுகின்றனர்.  லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமும் பல்வேறு சங்கங்களும் இந்தப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டிக்கின்றன. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டவுடனேயே வீடு புகுந்து கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.  இப்படி மறைந்து போனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு சில மாதத்திலேயே மிக உயர்ந்த பட்சமாக வளர்கிறது. யாழ் நகரம் ஒரு மாபெரும் சுடுகாடாக ராணுவத்தால் ஆக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்த்துக் கேட்க ஆளில்லாத ஒரு நிலைமையும் தோன்றியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துடன் ராணுவம் தொடர்ந்து தமிழர் பகுதியில் நிறுத்திவைக்கப்படவும் ஏற்பாடாயிற்று.  1979 ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை உலகம் கண்டிராத காட்டுமிராண்டித் தர்பார் யாழ் பகுதியிலே நடந்தது. 1980-ஆம் ஆண்டில் ராணுவத்தின் வெறித்தாக்குதல் நடக்கும் அதே நேரத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மாவட்டங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வழி ஏதும் இதில் இல்லை.  இதைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் 1981-ஆம் ஆண்டு வருகிறது.  இவ்வாண்டில் அரசுக் காட்டுதர்பாரின் பயங்கரத் தாக்குதல் உச்சநிலையை அடைகிறது. மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் நின்ற ஒரு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் இரு போலீஸப்ரும் தமிழ் இளைஞர்களால் கொல்லப்பட்டனர். ஒரு முஸ்லிம் போலீஸ்காரர் காயம் அடைந்தார். அதற்குமுன் நீர்வேலியில் ஒரு வங்கிக் கொள்ளை நடைபெறுகிறது. இதையொட்டி, பெருமளவில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு மிரட்டப்படுகிறார்கள்.  ராணுவத்தினர் திட்டமிட்ட முறையில் தாக்குதலை ஆரம்பித்தனர். இந்த சமயத்தில்தான் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகத்தின் ("பிரைட் ஆஃப் நார்த்' வடக்கின் பெருமை) என்ற கட்டிடப் பகுதி தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. இதில் பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட கிடைத்தற்கரிய விலை மதிப்பற்ற நூல்களும், தமிழ் இன வரலாற்று ஆதாரப் பொருட்களும் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகளும் சாம்பலாக்கப்பட்டன. இதன் மூலம் வடக்குப் பகுதியின் கெற்ரவத்தைக் கொளுத்திவிட்டதாக தமிழ் மக்கள் ஆவேச வெறி கொண்டனர்.  உலகின் அனைத்து முனைகளிலும் உள்ள அறிஞர்களும் இந்நூலக எரிப்பால் அதிர்ச்சி அடைந்தனர். இதுமட்டுமல்லாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகம், ஈழநாடு நாளிதழ் அச்சகம், யாழ்ப்பாணத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இல்லம், சுன்னாகம் பொதுக்கடை வீதி ஆகியவைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன!  கடைத்தெருவில் பொதுமக்கள் அனைவரும் தாக்கப்பட்டனர். அதில் பலர் காயமடைந்தனர். 5 பேர் மரணம் அடைந்தனர்.  இந்தப் பயங்கர சூழ்நிலையையும், குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் திட்டமிட்டபடி ஜூன் நான்காம் நாள் நடைபெற்றன. நிர்வாகக் குழப்பத்தைப் பயன்படுத்தி அரசு தேர்தலில் பயங்கர ஊழல்கள் மற்றும் தில்லுமுல்லுகளைச் செய்தது.  அன்று காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஜெயவர்த்தனாவின் வேட்பாளர் அனைவரும் தமிழர் பகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.  யாழ் பகுதியில் நடந்த அச்சுறுத்தும் அரச பயங்கரவாத அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டறிந்து வெளி உலகிற்குத் தெரியப்படுத்த ங.ஐ.த.ஒ.உ. ( ஙர்ஸ்ங்ம்ங்ய்ற் ர்ச் ஐய்ற்ங்ழ் தஹஸ்ரீண்ஹப் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் அய்க் உவ்ன்ஹப்ண்ற்ஹ்) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சார்லஸ் அபயசேகர உள்ளிட்ட உண்மை அறியும் குழு ஒன்று யாழ் பகுதியில் விசாரணை செய்தது. ஆனால் அவர்கள் தங்கள் அறிக்கையை கொழும்பில் வெளியிட முனைந்தபோது அரசு குண்டர்களால் தாக்கப்பட்டனர்.  ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் வன்முறை பரவியது. இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பகுதிகளும் தாக்கப்பட்டு அவர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.  மட்டக்களப்பில் இந்துக்கோவில் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.  ஜூலை முதல் வாரத்திற்குள் அம்பாறை, பதுளை, வெலிஓயா, பண்டாரவளை, நீர்கொழும்பு, கேகாலை போன்ற இடங்களில் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. ஜாஎவை, பேலியாகொடை, அம்பிலிப்பிட்டி, பண்டாரகமை ஆகிய பகுதிகளில் நவீனவகை குண்டர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த நவீன வகைத் தாக்குதலின் முதல் நிகழ்ச்சியாக, ஒரு புகைவண்டி வழியில் நிறுத்தப்பட்டுக் கொளுத்தப்படுகிறது. பல தமிழர்கள் வண்டியிலிருந்து பிடித்து வெளியில் இழுக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். பல பிரயாணிகள் பலத்த காயமடைகிறார்கள். அவர்களில் தமிழ் எம்.பி.யும் ஒருவர்.  கலவரம் பல பகுதிகளில் பரவுகிறது. பண்டாரவளைப் பகுதியில் ஜூலை 11-ஆம் நாள் இரண்டாவது தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. இது நீர்கொழும்பையும், கெற்னியாவையும் தொற்றுகிறது.  மலையகத் தோட்டப்பகுதியிலும் கலவரம் மூண்டு எட்டியாந்தோட்டை என்ற பகுதியில் மூன்று தமிழ் தோட்டத் தொழிலாளிகள் பேருந்திலிருந்து வெளியில் இழுக்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள். பின்னர் பேருந்திற்குத் தீ வைக்கப்பட்டு அதில் தமிழர்கள் எரிக்கப்படுகிறார்கள்.  இரத்தினபுரிப் பகுதியில் கடைகள் சூறையாடப்படுகின்றன; கடைகளைக் கொளுத்திய பின் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் தலைமையில் ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.  மதகுரு எதிரிலேயே ஒரு தமிழர் கொல்லப்படுகிறார். அதுமட்டுமல்ல, அங்குள்ள எஸ்டேட்டிலும் பல தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.  பயங்கரவாதம் ஒரு உச்சநிலைக்குச் சென்றது. இலங்கையே தீப்பற்றி எரியும் வகையில் இனவெறி மிக உச்சமான கோரத்தாண்டவம் ஆடியது.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறை

ராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன. படுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.  படுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார்.   27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர்.  வெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  தமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமான ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்?  தாக்குதல் தொடங்கியவுடன் சிறை அதிகாரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன்? 23- ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27- ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள்.  ""இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை.  வெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை'' என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372).  வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் ""தீவ்யன'' போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது.  வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன.    வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:  தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா, கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன், பசுபதி மகேந்திரன், கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர்.    இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:  1. தெய்வநாயகம் பாஸ்கரன் 2. பொன்னம்பலம் தேவகுமார் 3. பொன்னையா துரைராசா 4. குத்துக்குமார் ஸ்ரீகுமார் 5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் 6. செல்லச்சாமி குமார் 7. கந்தசாமி சர்வேஸ்வரன் 8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9. சிவபாலம் நீதிராஜா 10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 11. கந்தையா ராஜேந்திரம் 12. டாக்டர் ராஜசுந்தரம் 13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 14. ஆறுமுகம் சேயோன் 15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் 16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம் 17. செல்லப்பா இராஜரட்னம் 18. குமாரசாமி

25-07-1983 ஸ்ரீலங்காவில் இனவெறித்தாண்டவம்

அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், "இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது'' என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.   25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர்.   அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7.1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸப்ரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.   சி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். ""இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது'' என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.   நீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.   ஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.   26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.   வெலிக்கடையிலிருந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26- ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. ( வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.   இக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.   ஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.   27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.   இரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.   27.7.1983 அன்று மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.   ஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.   சுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.   முதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.   சிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வைகளைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல்மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.   மத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. ""நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது'' என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.   டாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் ""நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை? எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்?'' என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.   இடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.   இக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.   தாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் ""கொட்டியாவ மறண்ட ஓன'' "" கொட்டியாவ மறண்ட ஓன'' (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொல்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் படை ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.   மாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி நடத்தினார்.

வெலிக்கந்த படுகொலை

சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை. இந்த நடவடிக்கை மிகவும் பாதுகாப்பானது என்றே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். பின்னாளில் இந்த நினைப்பு உண்மையாகவும் ஆனது. இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் (1843- இல்) கட்டப்பட்டதாகும். இந்தச் சிறையில் அடைக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அடைக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பர். இங்கு அடைபட்டிருக்கும் ஏனைய சிங்களக் கைதிகளைப் போல் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் செய்திப் பத்திரிகைகள் வாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ, வானொலி கேட்கவோ, காற்றோட்டமான வசதிகளோ, சிறை நூலக வசதியோ மறுக்கப்பட்டு இருட்டு குகையில் வசிக்கிற நிலைமையைத் தோற்றுவித்தார்கள். தமிழ்ப் பகுதிகளில் நடந்ததாகக் கருதப்படும் சம்பவங்களுக்கான வழக்குகள் யாவும் சிங்களப் பகுதிகளிலுள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களின் பெற்றோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் யாவரையும் சந்திக்க அனுமதியும் மறுக்கப்பட்ட நிலையில்தான் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஈழ மக்கள் செய்தித் தொடர்பு நிலையம் வெளியிட்ட ஸ்ரீலங்கா வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் நூலிலிருந்து-சிறிதே திருத்தப்பட்ட பகுதி இதோ: இங்குள்ள பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட சப்பல் கட்டடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாகும். கட்டடத்தின் கீழ்ப்பகுதி ஏ-3, பி-3, சி-3, டி-3 என நான்கு விசேஷ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக் கட்டடத்தின் மேல்மாடிகள் இரண்டும் சாதாரணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாதாரண கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மேல்மாடிகளிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சுமார் 600 கைதிகள் இருந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, தீவைப்பு, வீடுடைப்புப் போன்ற பலதரமான குற்றங்களைச் செய்த இவர்கள், தமிழ் இளைஞர்களைக் கொலை செய்வதற்கு அதிகாரிகளால் ஏவிவிடப்பட்டனர். கீழ்ப் பகுதியின் விசேஷ நான்கு பிரிவுகளில் பி-3 பிரிவில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், நடேசதாசன், சிவபாதம் மாஸ்டர், தேவன் ஆகிய ஆறுபேரும் தண்டிக்கப்பட்ட கைதிகளாக, வேறு சில சிங்கள விசேஷ சிறைக் கைதிகளுடன் தனித்தனி அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர். சி-3 பிரிவில் பனாகொடை ராணுவ முகாமில் சித்திரவதையை அனுபவித்தபின் கொண்டுவரப்பட்ட 28 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர். இவ்வறைகள் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட வசதிகள் குறைந்த அறைகளாகும். டி-3 பிரிவில் 29 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் இருந்தனர். ஏ-3 பிரிவில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த சிங்கள விசாரணைக் கைதிகள் இருந்தனர். பலம் வாய்ந்த இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்த பி-3, சி-3 பிரிவுகள், பூட்டுக்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும். இப் பிரிவு திறந்து விட்டாலன்றி எவரும் (சக அதிகாரிகள் உள்பட) உள்ளே செல்ல முடியாது. டி-3 பிரிவின் கதவு பலகையால் இருந்தாலும் பலம் வாய்ந்த பூட்டு பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும். இந்த நான்கு விசேஷ பிரிவுகளுக்கும் பொறுப்பாக ஒரு ஜெயிலரும், ஒரு பொறுப்பதிகாரியும், நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே நான்கு சிறைக் காவலர்களும் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். இக்கட்டடத்தைச் சுற்றி இருவரிசை முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு வெளியே பலத்த ராணுவக் காவல் போடப்பட்டிருந்தது. 25-7-1983- இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள். ரெஜஸ்-துணைத் தலைமை சிறை அதிகாரி, சமிதரத்ன-சிறை அதிகாரி, பாலித- காவலதிகாரி. ஆகிய மூன்று சிறை அதிகாரிகளுமே இனப் படுகொலைக்கு சிறைக்குள்ளே திட்டம் போட்ட சூத்ரதாரிகள். திட்டமிட்டபடி இவ்வதிகாரிகள் குறிப்பிட்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். அந்த நேரத்தில் சிறைச்சாலை உயரதிகாரிகள் மதிய உணவுக்காகத் தத்தம் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். உயர் அதிகாரிகள் சிறையில் இல்லாதபோது நடந்த வன்முறையெனத் தப்பித்துக் கொள்ள இந்த ஏற்பாடு. தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின. வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன. சிங்கள சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்கள சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள். கொலைகள் முடிந்தவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்ற இராணுவ வீரர்கள் (தமிழ் அரசியல் கைதிகள் தப்பியோடாது இராணுவ வீரர்கள் வெலிக்கடையில் தொடர்ந்து காவலுக்கு நின்றார்கள்) உள்ளே அழைக்கப்பட்டார்கள். உள்ளே வந்த இராணுவ வீரர்கள் கொலை வெறிக்கு உரமூட்டினார்கள். ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது. குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதே காரணத்திற்காகக் குட்டிமணி குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார். சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து ""ஜெயவேவா'' (மகிழ்ச்சி ஆரவாரம்) கோஷம் எழுப்பிக் குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர். குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர். பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர். சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து ""சில்'' அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர். சிறுவன் மயில்வாகனத்திற்கு ஏற்பட்ட மரணம் மனதை உருக்குவதாகும். இச்சிறுவன் கப்பற்படையினரின் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு (பவுசர்) பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான். இச்சிறுவன் சப்பல் கட்டடத்திற்கு வெளியே சாதாரண கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில் மறைந்திருந்ததைக் கண்ணுற்ற சிறை அதிகாரி சமிரத்ன அச்சிறுவனின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் கத்தியால் அவன் குரல்வளையை வெட்டினான். இரத்தம் பீறிட்டுவர அச்சிறுவனும் புத்தருக்குக் காணிக்கையாக்கப்பட்டான். இச்சிறுவனைப் படுகொலை செய்த சமிதரத்ன ஒரு பட்டதாரியாவான் என்பதும் வெட்கக் கேடான உண்மையாகும். சிறைச்சாலை வாகனத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களின் உடல்கள் முழு நிர்வாணமாகப் போடப்பட்டன. அந்த உடல்களின் மத்தியில் உயிர்ப் பிரிவின் முனகல் கேட்டபோது கொலை வெறியர் பொல்லால் அடித்து கம்பியால் குத்தி அவ்வொலிகளை நிரந்தரமாக நிறுத்தினார்கள்!

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner